கூரத்தாங்குடி காலசம்ஹாரேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :
கூரத்தாங்குடி காலசம்ஹாரேஸ்வரர் சிவன்கோயில்,
கூரத்தாங்குடி, கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610207.
இறைவன்:
காலசம்ஹாரேஸ்வரர்
இறைவி:
குங்குமவல்லி
அறிமுகம்:
கீழ்வேளூர் – சாட்டியக்குடி சாலையில் 13 கிமீ கடந்தால் கிள்ளுகுடி ஊரை அடுத்து ஓடும் பாண்டவை ஆற்றினை கடந்து அதன் தென்கரை சாலையை ஒட்டி செல்லும் சாலையில் 2 கிமீ தூரம் சென்றால் கூரத்தாங்குடி கிராமத்தை அடையலாம். இவ்வூரின் நடுவில் பெரியதொரு குளத்தின் கரையில் ஒரு சிவாலயம் அமைந்துள்ளது மார்க்கண்டேயனின் உயிரை எடுக்க பாசக்கயிறு வீசியபோது லிங்கத்தையும் சேர்த்து இழுக்க, அதனால் இறைவன் யமனை காலால் உதைத்து சம்ஹரித்தார். யமன் இல்லாத உலகம் உயிர் சுழற்சியற்று போகிறது. பூமாதேவி கலங்கி இறைவனை வேண்டி யமனை மன்னிக்க வேண்டுகிறார். யமன் பல தலங்களில் லிங்க வழிபாடு செய்து பாபமன்னிப்பு பெறுகிறார். அதில் உள்ள இறைவன் காலசம்ஹாரேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
இந்த மூர்த்தி யமனால் உருவாக்கப்பட்டு வழிபடப்பட்டது. அதனால் இங்கே இறைவன் – காலசம்ஹாரேஸ்வரர் இறைவி குங்குமவல்லி எமபயம் போக்கும் இறைவன், அழகிய நடுத்தர அளவிலான லிங்கமூர்த்தியாக உள்ளார். இங்கு வழிபடுவோருக்கு நீண்ட ஆயுள் கிட்டும், துர்மரணம் சம்பவிக்காது, குங்குமவல்லிக்கு குங்குமார்ச்சனை செய்து சகஸ்ரநாமம் படித்தால் வேண்டிய வரம் அளிப்பாள், குழந்தைபேறு, நற்குணம் கூடியோருடன் திருமணம் வாய்க்க வழி காட்டுவாள்.
பல காலம் சிதிலமடைந்து கிடந்த இக்கோயில் சென்னை மகாலட்சுமி அம்மையாரால் திருப்பணிகள் செய்யப்பட்டு புத்தம் புதிதாக காட்சியளிக்கிறது. கிழக்கு நோக்கிய இறைவன் தெற்கு நோக்கிய இறைவி இறைவனின் நேர் எதிரில் நந்தி பகவான் உள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகன் லிங்கோத்பவர், பிரம்மன் மற்றும் ஒரு ஒரு பெரிய அழகிய பழமையான துர்க்கை உள்ளார். சண்டேசர் வழமையான இடத்தில் பெரியதொரு சன்னதியில் உள்ளார். பிரகார சிற்றாலயங்கள் விநாயகருக்கும் அடுத்து சீனிவாச பெருமாளுக்கும் அடுத்து வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கும் உள்ளது. வடகிழக்கில் மேற்கு நோக்கிய பைரவர், அருகில் இரு சிறிய நாகர்கள் உள்ளனர்.
சிவாலயம் சுற்றி ஒரு மதில் சுவர் கட்டப்பட்டு உள்ளது, இந்த கோயில் வாயிலின் தென்புறத்தில் வடக்கு நோக்கிய அனுமன் கோயில் உள்ளது. உள்ளே நான்கு அடி உயரத்தில் அனுமன் அழகிய நின்ற கோலத்தில் உள்ளார். சிவாலயத்தின் தென்புறம் கிழக்கு நோக்கிய லட்சுமி நாராயண பெருமாள் தனி கோயில் கொண்டுள்ளார். இக்கோயிலை ஒட்டி பெரியதொரு குளமும் உள்ளது. கோயிலின் கட்டுப்பாடு அரசிடம் இருந்தாலும், கோயில் அழகாக தூய்மையாக பராமரிக்கப்படுகிறது, மூர்த்திகளும் நித்திய பூஜைக்கு குறைவின்றி உள்ளது. அதற்க்கு காரணம் கோயிலின் நேர் எதிரில் உள்ள அம்மை தேவசேனா முதற்காரணம் என இங்கே பதிவு செய்யவேண்டியது நம் கடமையாகிறது. காலை மாலை என கோயிலின் மேம்பாட்டிற்காக உடலுழைப்பு தருகிறார்.











காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கூரத்தாங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி