Friday Jun 28, 2024

கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் திருக்கோயில், நந்திவரம் – கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டம் – 603202.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ நந்தீஸ்வரர் இறைவி: ஸ்ரீ சௌந்தர்ய நாயகி

அறிமுகம்

தமிழகம் முழுவதும், ‘கூடுவாஞ்சேரி’ என நன்கு அறியப்படும் நந்திவரம் என்ற நகரம், பல்லவர் கால வரலாற்றுத் தொடர்புடையது. புகழ்பெற்ற சிவதலமாக விளங்கும் நந்தீஸ்வரர் கோவில் அமைந்திருக்கும் இடமாதலால், ‘நந்திகேச்சுரம்’ மருவி நந்திவரம் என்றானதாக கூறப்படுகிறது. நந்திவரத்தில் அமைந்துள்ள நந்தீஸ்வரர் கோவில், நந்தி வழிபட்ட தலம் எனவும், பல்லவர் கால வழிபாட்டுத் தலம் எனவும் நம்பப்படுகிறது. பல்லவர் கால வாணிபக் கூடமாகவும், நந்திவரம் விளங்கியுள்ளதற்கான சான்றுகளாக, கல்வெட்டுகள் பல உள்ளன. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்தை அடுத்து வண்டலூர் உயிரியல் பூங்கா கடந்ததும் வரும் ஊர் கூடுவாஞ்சேரி. திருநந்திவரம், திருநந்திகேஸ்வரம் என்றெல்லாம் முன் காலத்தில் அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, தற்போது நந்திவரம் (கூடுவாஞ்சேரி) என்று வழங்கப்படுகிறது. இங்குள்ள இறைவன் பெயர்: ஸ்ரீநந்தீஸ்வரர். அம்பாள் திருநாமம்: ஸ்ரீசௌந்தர்ய நாயகி. இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள தொண்டை நாட்டு வைப்புத் தலமாகும்.

புராண முக்கியத்துவம்

நந்தீஸ்வரர்’ என்கிற திருநாமம் இந்த ஆலய இறைவனுக்கு வந்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதல் காரணம்: இந்த ஆலயத்தைக் கட்டியதாகச் சொல்லப்படும் மூன்றாம் நந்திவர்ம பல்லவனை வைத்து அவனது திருநாமமே, இறைவனின் திருப்பெயரானது என் கிறார்கள். தொண்டை மண்டலத்தில் உள்ள இந்தத் திருத்தலத்துக்குத் தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளான் நந்திவர்மன். இறை வனுக்கு மட்டும் அல்லாமல் அவனது பெயரே இந்த ஊருக்கும் இருந்து வந்தது. அந்தப் பெயரே (நந்திவரம்) இன்றளவும் வழங்கப்பட்டு வருவது, ஆதி காலத்தில் ‘நந்தி வனம்’ என்று இந்தப் பகுதி அழைக்கப்பட்டு வந்தது. தல வரலாறு, இந்தப் பெயரை ஊர்ஜிதம் செய்வ தாக அமைந்துள்ளது. தல வரலாறு சொல்லும் அந்தக் கதையைப் பார்ப்போம். தற்போது ஆலயம் அமைந்துள்ள பகுதி, பல நூறு ஆண்டுகளுக்கு முன் வனப் பிரதேசமாக விளங்கியது. புதர்கள் பெருமளவில் மண்டி, காடாக இருந்தது. செடிகளும் கொடிகளும் மரங்களும் மிகுந்திருந்த இந்த வனப் பகுதியில் ஒரு பெரிய புற்று இருந்தது. இங்கு மேய்ச்சலுக்கு வரும் ஒரு பசு, இந்தப் புற்றுக் கண் மேல் நின்று தினமும் பால் சொரிந்து விட்டுச் செல்லும். பசுவுக்குச் சொந்தக்காரர், பசுவின் மடியில் இருந்து கிடைக்கும் பாலின் அளவு தினமும் குறைவதைக் கண்டு அதிர்ந்தார். மேய்ச்சலுக்குப் பசுவை ஓட்டிச் செல்லும் வேலைக்காரனைச் சந்தேகப்பட்டு அவனைக் கூப்பிட்டு விசாரித்தார். ‘‘ஐயா… நான் பாலைத் திருடறவன் இல்லீங்க. மாடுங்களை மேய விட்டுட்டு நான் பாட்டுக்கும் ஓரமா வனத்துல படுத்துக்கிடுவேன். நான் குத்தம் செய்யாதவன்யா… என்னைச் சந்தேகப்படாதீங்க!’’ என்று பசுவுக்குச் சொந்தக்காரரின் காலில் விழுந்து கதறினான். ‘வேறென்ன காரணம்? பசு வின் மடியில் பால் குறைவ தன் மர்மம் என்ன?’ என்பதை கண்டறிவதற்காக ஒரு நாள் மேய்ச்சல் பகுதிக்குச் சந்தடி இல்லாமல் சென்றார் மாட்டுக்குச் சொந்தக்காரர். மாடுகள் அனைத்தும் புற்கள் அடர்ந்த பகுதியில் தங்கள் காரியத்தில் கண்ணாக மேய்ந்து கொண்டிருந்தன. மாடுகளை மேய்க்கும் அந்த வேலைக்காரன் ஓர் ஓரமாகப் படுத்து அண்ணாந்து ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். தினமும் குறைவான பால் தரும் தனது பசுவை அந்தக் கூட்டத்தில் தேடினார். ‘ஆஆ! அதோ! அந்தப் பசு, ஏதோ ஒரு புதருக்கு அருகில் அல்லவா நிற்கிறது? மேய்ச்சலை விட்டு விட்டு அங்கே போய் என்ன செய்கிறது?’ என்று குழம்பியவர், மெள்ள நடந்து அந்த புதருக்கு அருகே சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை வரவழைத்தது. தன் கனத்த மடியைப் புற்றின் கண் ணுக்கு நேராக இருக்கும்படி நின்ற பசு வானது, புற்றின் கண்ணில் தானாக ‘சர்சர்’ரென்று பாலைச் சொரிந்தது. பாலைச் சொரியும்போது அதன் முகத்தில் ஒரு வித பரவசம் பரவியது. தலையை உற்சாகமாக முன்னும் பின்னும் அசைத்தது. வாலைக் குழைத்துக் குழைத்து ஆட்டியது. பால் சொரிந்து முடிந்த பின் ஏதும் அறியாத மாதிரி அங்கிருந்து துள்ளிக் குதித்தோடி வந்து பசுக்களின் கூட்டத்திடையே கலந்தது. ‘அடடா… தினமும் இதுதான் நடந்து கொண் டிருக்கிறதா? பசுவை மேய்ப்பவனுக்குப் போக்குக் காட்டி விட்டு, மெள்ள நழுவிப் போய்த் தினமும் பாலைச் சுரந்து விட்டு வரும் வேலையை இந்தப் பசுவே செய்கிறதா? தேவை இல்லாமல் மாடு மேய்ப்பவன் மேல் சந்தேகப்பட்டு விட்டோமே’ என்று தெளிந்தவர், ‘தினமும் இப்படிச் சுரக்கும் பால் எங்கே போகிறது? அந்த அடர்ந்த புற்றில் என்னதான் இருக்கிறது?’ என்பதை உடனே பார்த்து விடத் துடித்தார். கோடரி எடுத்துக் கொண்டு புற்றின் அருகே போய், பலம் கொண்ட மட்டும் ஓங்கிப் பிளக்க முற்பட… அப்புதரை வெட்டும்போது உள்ளிருந்த சிவலிங்கம் வெளிப்பட்டது. அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. ‘அன்பரே… இங்கே இந்தப் புற்றில் இறைவன் குடி கொண்டுள்ளார். நெடுநாளாக இந்தப் புற்றில் வசித்து வரும் ஈசனின் பசியைத் தணிக்கவே உமது பசு பால் சுரந்து வந்தது. இங்கே ஒரு கோயில் எழுப்ப உதவி செய்!’ என்றது அந்தக் குரல். இறை தரிசனம் கிடைக்கப் பெற்றவன் போல் மகிழ்ந்த பசு மாட்டின் சொந்தக்காரர், புற்று இருந்த பகுதியை பக்தியுடன் வலம் வந்தார். வீழ்ந்து வணங்கினார். அப்போது அந்தப் பகுதியை ஆண்டு வந்த மூன்றாம் நந்திவர்ம பல்லவனிடம் விவரத்தைச் சொல்ல… இந்த இறைவனுக்கு அங்கே நிரந்தரமாக ஓர் ஆலயம் எழுப்பினான் நந்திவர்மன். சிவ பக்தியில் சிறந்து விளங்கியவன் இந்த மன்னன். தனது ஆட்சிக் காலத்தில் தொண்டை மண்டலத்தில் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டி, வழிபாடுகள் தொடர வகை செய்தான்.

சிறப்பு அம்சங்கள்

இந்த ஸ்ரீநந்தீஸ்வரர் சிவாலயம். ‘‘மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூன்றிலும் பிரசித்தி பெற்றது. இங்கு உறையும் இறைவன் நந்தீஸ்வர பெருமான் என்பதால், பிரதோஷ கால தரிசனம் இங்கு விசேஷமானது. அத்தகைய நாட்களில் பெரும் திரளான கூட்டம் கூடுகிறது!’’ கிழக்குப் பார்த்து ஸ்ரீநந்தீஸ்வரர் காணப்படுகிறார். தெற்கு நோக்கிய ஸ்ரீசௌந்தர்ய நாயகி. கிழக்கு மற்றும் தெற்குத் திசைகளில் நுழைவாயில்கள் இருக்கின்றன. பெரும்பாலானோர் தெற்கு வாயிலையே பயன்படுத்துகின்றனர். கிழக்கு வாயிலுக்கு எதிரே நந்தி தீர்த்தம் எனப்படும் திருக்குளம். தல மரம் வில்வம். தவிர, நூறு வருடங்களையும் கடந்த நாகலிங்க மரம் ஒன்றும் பிரமாண்டமாகக் காணப்படுகிறது. நடராஜ சபை. இங்கு இவருக்கு விசேஷ மான ஆராதனைகள் நடக்கின்றன. சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி பௌர்ணமி, புரட்டாசி பௌர்ணமி, மார்கழி திருவாதிரை, மாசி மகம் போன்ற தினங்களில் விசேஷமான அபிஷேகங்கள் இவருக்கு உண்டு. இடப் பக்கம் தெற்குப் பார்த்தவாறு சௌந்தர்ய நாயகி. தமிழில் அழகொளிர்நாயகி, அழகுடைநாயகி. பெயருக்கேற்றாற் போல் அழகான வடிவம். அன்னையின் ஆசி பெற்று அவளை வலம் வந்தால் பைரவர், வீரபத்திரர், சூரிய பகவான் போன்ற தெய்வங்களின் தரிசனம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கூடுவாஞ்சேரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

கூடுவாஞ்சேரி

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top