குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில், திருச்சி
முகவரி
அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில், குணசீலம் – 621 204. திருச்சி மாவட்டம். போன்: +91 4326 275 210 275 310 94863 04251
இறைவன்
இறைவன்: பிரசன்ன வெங்கடாஜலபதி
அறிமுகம்
குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி விஷ்ணு கோயில்என்பது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருச்சிக்கு 20 கிமீ (12 மைல்) தொலைவில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்துக் கோவிலாகும். இது கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டவர்களை இத்திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்று 48 நாட்களுக்கு கோயில் வளாகத்தில் தங்கவைத்தால் 48 நாட்களின் முடிவில் பிரசன்ன வெங்கடாசலபதி தெய்வத்தின் கிருபையினால் அவர்களின் வியாதி குணப்படுத்தப்படுகிறது என்று நம்பப்படுகிறது. தமிழ்நாட்டில் முதன் முதலாக தமிழ்நாடு அரசு உரிமத்தின் உத்தியோகபூர்வ முத்திரை என்று ஒரு மனநல சுகாதார மறுவாழ்வு மையம் இங்கு அமைக்கப்பட்டது. இக்கோவிலில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை, தினமும் மூன்று சடங்குகள் நடைபெறும். ஆண்டு பிரம்மோற்சவம் (பிரதான திருவிழா) என்பது ஒரு பதினொரு நாள் திருவிழா ஆகும். இந்த கோயில் ஒரு பரம்பரை நிறைவேற்று அதிகாரியால் பராமரிக்கப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
மனக்குறையை தீர்த்து வைத்து, நல்லருள் தரும் நற்குணவானான பெருமாள் குணசீலத்தில் அருள்கிறார். மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது. திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். குணசீலரின் வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார். குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு “குணசீலம்’ என்ற பெயர் ஏற்பட்டது. ஒருசமயம் குணசீலரின் குரு தால்பியர், தன்னுடன் இருக்கும்படி அவரை அழைத்தார். குணசீலர் தன் சீடன் ஒருவனிடம், பெருமாளை ஒப்படைத்து தினமும் பூஜை செய்யும்படி சொல்லிவிட்டு சென்று விட்டார். அப்போது குணசீலம் காடாக இருந்தது. வன விலங்குகள் சீடன் இருந்த பகுதியை முற்றுகையிட்டன. பயந்துபோன சீடன் அங்கிருந்து ஓடி விட்டான். காலப்போக்கில் பெருமாள் சிலையை புற்று மூடிவிட்டது. ஞானவர்மன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டபோது, அரண்மனைப் பசுக்கள் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்தன. ஒருசமயம் தொடர்ச்சியாக பாத்திரங்களில் இருந்த பால் மறைந்தது. தகவலறிந்த மன்னன் இந்த அதிசயத்தைக் காண வந்தான். அப்போது ஒலித்த அசரீரி, புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்த்தியது. மன்னன் சிலையை கண்டெடுத்து கோயில் எழுப்பினான். “பிரசன்ன வெங்கடாஜலபதி’ எனப் பெயர் சூட்டப்பட்டது.
நம்பிக்கைகள்
கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் சுருததேவன், கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் இங்கு சுவாமியை வேண்டி பலன் பெற்றுள்ளனர். வாய் பேசாத கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், இங்கு வந்து சுவாமியை வணங்கி பேசும் சக்தி பெற்றதுடன், பாசுரமும் பாடியுள்ளான். பார்வைக்கோளாறு, உடல் குறைபாடு உள்ளவர்கள் மன நிம்மதிக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்
பன்னிரு கருடசேவை: கோயிலை ஒட்டி காவிரி நதியும், எதிரில் பாபவிநாச தீர்த்தமும் உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதி கிடையாது. பரிவார மூர்த்திகளும் இல்லை. உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சாளகிராம மாலை அணிந்து, தங்க செங்கோலுடன் காட்சி தருகிறார். தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது. சன்னதிக்கு இருபுறமும் உத்ராயண, தட்சிணாயண வாசல்கள் உள்ளன. புரட்டாசியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில், குணசீலருக்கு சுவாமி காட்சி தந்த வைபவம் நடக்கும். பெரும்பாலான கோயில்களில் விழாவின்போது மட்டுமே, சுவாமி கருடசேவை சாதிப்பார். இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருடசேவை சாதிக்கிறார். வைகாசி விசாகத்தன்றும் விசேஷ பூஜை உண்டு. மனக்குழப்பத்திற்கு தீர்வு: மனக்குழப்பம் உள்ளோர், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிவர்த்திக்காக வழிபடும் தலம் இது. மனநோயாளிகள் இலவசமாக தங்கியிருக்க மறுவாழ்வு மையம் ஒன்று செயல்படுகிறது. காலை, மாலையில் நடக்கும் பூஜையின்போது இவர்களுக்கு தீர்த்தம் தருவர். மதியமும், இரவிலும் மனநோயாளிகளை சுவாமி சன்னதியில் அமரச்செய்து பூஜை செய்கிறார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இவர்கள் முகத்தில் தெளிக்கிறார்கள். பிரார்த்தனை தலம்: கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் சுருததேவன், கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் இங்கு சுவாமியை வேண்டி பலன் பெற்றுள்ளனர். வாய் பேசாத கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், இங்கு வந்து சுவாமியை வணங்கி பேசும் சக்தி பெற்றதுடன், பாசுரமும் பாடியுள்ளான். பார்வைக்கோளாறு, உடல் குறைபாடு உள்ளவர்கள் மன நிம்மதிக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.
திருவிழாக்கள்
சித்ரா பவுர்ணமியில் தெப்பத்திருவிழா, ராமநவமி, கோகுலாஷ்டமி.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குணசீலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி