கீழபெரும்பள்ளம் கைலாசநாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி
கீழபெரும்பள்ளம் கைலாசநாதர் சிவன்கோயில், கீழபெரும்பள்ளம், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609107.
இறைவன்
இறைவன்: கைலாசநாதர் இறைவி : மனோன்மணி
அறிமுகம்
மயிலாடுதுறை – பூம்புகார் சாலையில் உள்ளது மேலையூர் இங்குள்ள கண்ணகி கோட்டத்தினை ஒட்டி செல்லும் கீழப்பெரும்பள்ளம் சாலையில் இரண்டு கிமி தூரம் சென்றால் கீழபெரும்பள்ளம் கைலாசநாதர் கோயில் அடையலாம். பூம்புகார் – தர்மகுளம் – கீழபெரும்பள்ளம் நாகநாதர்கோயில் வழியாக வந்தால் நான்கு கிமி தூரத்தில் உள்ளது. இவ்வூரில் இரு சிவாலயங்கள் உள்ளன. ஒன்று நவக்கிரக கேது வழிபட்ட நாகநாதர் ஆலயம் எனும் கேது தலம். இரண்டாவது இந்த கைலாசநாதர் கோயில் இத்தலம் தான் வாசுகிக்கு இறைவன் காட்சி கொடுத்த தலம் ஆகும். ஏறத்தாழ 1000 வருடங்களாக இருந்து வரும் சோழ மன்னர்கள் கட்டிய அழகான கோவில் பிற்காலத்தில் நகரத்தார் திருப்பணி பெற்றது என கூறுகின்றனர். கோயிலின் இன்றைய நிலை மிகவும் வருத்தத்துக்கு உரியது. கோயில் போதிய பராமரிப்பின்றி செடிகள் முளைத்த வளாகமாக உள்ளது. கோயில் முகப்பில் செங்கல் சிதிலங்கள் சிதறி கிடக்கின்றன. சுவர்கள் மரங்கள் முளைத்து பழுதடைந்துள்ளது. கலசங்கள் காணவில்லை, இறைவன் முன்னம் ஒரு சிறிய மண்டபத்தில் நந்தியும் பலிபீடமும் இருந்தன, அதில் நந்தியை வெளியில் தூக்கி போட்ட புண்ணியவான் யாரென தெரியவில்லை, நந்திக்கு பின் இருக்கும் கிழக்கு நோக்கிய கொடிமரத்தடி விநாயகனையும் காணவில்லை. வடகிழக்கில் நவக்கிரக மண்டபம் மட்டும் உள்ளது நவகிரகங்களையும் காணவில்லை. கோயில்களின் கணக்கு வழக்கினை பார்க்கும் சண்டேசரின் நிலை இன்னும் பரிதாபம், அவரின் தலையினை உடைத்த கொடுங்கோல் யாரென தெரியவில்லை.
புராண முக்கியத்துவம்
அசுரர்களும் தேவர்களும் சேர்ந்து பாற்கடலை கடைய வாசுகி என்ற நாகத்தைக் கொண்டு, மேரு மலையை சுற்றி மத்தாக உபயோகித்து அமிர்தம் பெற முயற்சி செய்தனர். ஒரு புறம் தேவர்களும் மறுபுறம் அசுரர்களும் இழுத்தனர். மலையைச் சுற்றியதால் வாசுகியின் உடல் புண்ணாகியது. வலி தாங்காது, விஷத்தைக் கக்கியது. பின்னர் ஆலகாலத்தை சிவன் அருந்துகிறார். இதனால் வருத்தமடைந்த வாசுகி பூலோகம் வந்து இத்தலத்தில் தவம் செய்கிறது, வாசுகியின் வருத்தம் போக்க இறைவன் காட்சி கொடுத்து அருள்பாலித்ததாக ஐதீகம். கோயில் கிழக்கு நோக்கியது தென்புறம் பெரிய குளம் ஒன்றுள்ளது. இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கிய கருவறையிலும், இறைவி தெற்கு நோக்கிய கருவறையிலும் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர். இறைவன் கருவறை வாயிலின் இருபுறமும் விநாயகர், மற்றும் முருகன் சன்னதிகள் இடம்பெற்றுள்ளன. வெளியில் பாதுகாப்பில்லை என மகாலட்சுமியும் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன், மகாவிஷ்ணு, பிரம்மன், துர்க்கை உள்ளனர். பிரகார சன்னதிகளாக தென்மேற்கில் லட்சுமிநாராயணர் எழுந்தருளியுள்ளார். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழபெரும்பள்ளம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி