கீழகாவலகுடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
கீழகாவலகுடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில்,
கீழகாவலகுடி, கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610106.
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி
அறிமுகம்:
கீழ்வேளூர் அடுத்த தேவூர் தாண்டி ஒரு கிமீ சென்றால் வலதுபுறம் நானக்குடி எனும் ஊர் செல்லும் பாதை திரும்பும், நானக்குடியின் தெற்கில் ஒரு கிமீ தூரத்தில் உள்ளது இந்த கீழகாவலகுடி. காவாலம் என்ற மரங்கள் அடர்ந்தது இவ்வூர் எனலாம். சிறிய விவசாய கிராமம், இருபதுக்கும் குறைவான வீடுகள், ஊரின் நாற்புறங்களிலும் பெரியதும் சிறியதுமாக குளங்கள், ஊரின் மையத்தில் கம்பீரமான தேர் போல நிற்கிறது இந்த சோழர் கால செங்கல் தளி. இறைவன் கருவறை அதிஷ்டானம், ஸ்தம்பம், சரணம் பிரஸ்தரம் வேதிகை கண்டம் சிகரம் ஸ்தூபி என அனைத்து அங்கங்களையும் கொண்ட துவிதள விமானமாக நிற்கிறது.
முகப்பில் குவிமாடமாக அர்த்தமண்டபம் உள்ளது. மகாமண்டபம் முன்னொரு காலத்தில் நீண்ட வௌவால் தொற்றா மண்டபம் இருந்திருக்கலாம் இன்று அது கல்நார் தகடு (cement sheet) மண்டபமாக காட்சியளிக்கிறது. அதன் வெளியில் தனி மண்டபத்தில் நந்தி உள்ளார். இறைவன் காசி விஸ்வநாதர் இறைவி – காசி விசாலாட்சி இறைவன் பெரிய லிங்கமூர்த்தியாக உள்ளார், அவரது கருவறை வாயிலில் விநாயகரும் வள்ளி தெய்வானை சமேத முருகனும் உள்ளனர். இறைவி விசாலாட்சி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். மகாமண்டபத்தில் ஒரு பகுதியில் மேற்கு நோக்கி பழமையான பைரவரும், சூரியனும் உள்ளனர்.
தனியாக ஒரு சந்திரன் பிரதிஷ்டை செய்யப்படாமல் கிடத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது மகாமண்டபத்தில் ஒரு காமாட்சியம்மன் ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. இது இக்கோயிலுக்கானது அல்ல என நினைக்கிறேன். அருகாமையில் உள்ள காமாட்சியம்மன் கோயில் பெரிய அளவில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருவதால், இங்கு பாலாலய பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கலாம். காமாட்சி தனது நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், புஷ்பபாணம், கரும்பு ஆகிய நான்கு ஆயுதங்களை ஏந்தி இருக்கிறாள்.
இக்கோயில் 2006 ல் குடமுழுக்கு கண்டுள்ளது. நாட்கள் ஓடிவிட்டன, முறையான நித்யபூஜைகளும் நல்லதொரு திருப்பணியும் இக்கோயிலுக்கு தேவை. அதற்க்கு முன் சிவபெருமான் பெருமைகளையும், சிவனை வழிபடுவதால் கிடைக்கின்ற முக்திப் பேற்றினையும் ஊர் மக்களுக்கு எடுத்து சொல்லி வழிபாட்டிற்கு வரவைக்கவேண்டிய பொறுப்பு ஆன்மீக சொற்பொழிவாளர்களுக்கு உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழகாவலகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி