கண்ணம்பாளையம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோயம்பத்தூர்
முகவரி :
கண்ணம்பாளையம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
கண்ணம்பாளையம்,
கோயம்பத்தூர் மாவட்டம் – 641402
இறைவன்:
தண்டாயுதபாணி (பழனியாண்டவர்)
அறிமுகம்:
விவசாயம் ஒன்றையே பிரதான தொழிலாக கொண்டவர்கள் வாழும் ஊரின் நடுவே சுமார் 150 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இந்த ஆலயம் அமைந்துள்ளது ஆரம்பத்தில் சிறிய கோயிலாக தண்டாயுதபாணி சிலை மட்டுமே வழிபாட்டில் இருந்தது. பின் செய்குன்று வடிவிலமைந்த ஆலயத்தில் கீழ் மாடத்தில் விழா மண்டபம், மேல் மாடத்தில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், பள்ளியறை, 5 நிலை ராஜகோபுரம், மூலவர் விமானம் என அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் 14.05.2021 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவை-திருச்சி நெடுஞ்சாலையில் பாப்பம்பட்டி பிரிவில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கண்ணம்பாளையம். காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் பயணித்து இக்கோயிலை அடையலாம். மொத்தம் 19 கிலோமீட்டர் ஆகும்.
புராண முக்கியத்துவம் :
அக்காலத்தில் ஒரு சமயம் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த சில பக்தர்களுக்கு வயது மூப்பின் காரணமாக பழனி செல்வது சிரமம் ஏற்பட்டது. எனவே அவர்கள் பஞ்சலோகத்தால் வேல் ஒன்றை தயார் செய்து பழனி சென்று முருகனின் பாதத்தில் வைத்து பூஜித்து எடுத்து வந்து தங்கள் ஊர் கோவிலில் உள்ள தண்டாயுதபாணி சிலை அருகே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இவ்வூரை சேர்ந்த துறவியான மாரப்ப கவுண்டர் என்பவர் தீவிர முருக பக்தர் பல வருடங்கள் பழனி சுவாமிகள் மடத்தில் தங்கியிருந்து தண்டாயுதபாணிக்கு கைங்கர்யம் செய்துள்ளார். மேலும் வருடத்தில் ஒரு நாள் மகா அபிஷேகம் ஆராதனை செய்ய கோயில் நிர்வாகம் அவருக்கு சிறப்பு அனுமதி அளித்திருந்தது.
ஒருநாள் அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான் உங்களூரில் வாசம் செய்யும் போது நீ ஏன் இங்கே இருக்கிறாய்? இனி உங்கள் ஊரிலேயே எனக்கு கைங்கரியங்கள் செய்! என்று கூறி மறைந்தார். ஆணையிட்டது பழனி முருகன் அல்லவா உடனே புறப்பட்டு வந்து சேர்ந்தார். ஊர் மக்களும் கோயில் நிர்வாகத்தினை அவரிடம் ஒப்படைத்தனர். அவரும் அதை ஏற்று பூஜை செய்து வந்தார்.
பங்குனி உத்திரத்தை ஒட்டி காவடி சுமந்து பாதயாத்திரையாக பழனிக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் ஒருவர். சுமார் 37 ஆண்டுகளாக சென்று வந்தார். அவன் மனதில் ஒரு கட்டத்தில் கிழக்கு நோக்கிய நம் கோயிலை பழனி கோயிலைப்போல் மேற்கு நோக்கி கட்ட வேண்டும் என யோசனை தோன்றியது. 2012ஆம் ஆண்டு பழனியில் பங்குனி உத்திர வழிபாட்டில் கலந்துகொண்டு ஊர் திரும்பியதும் ஊர் பெரியவர்களை சான்றோர்களின் சந்தித்து ஆலோசனை பெற்று கிழக்கு நோக்கிய கோயில் மேற்கு நோக்கிய கோயிலாக மாற்றி கட்ட முடிவு செய்தனர். கனவு கோயில் செயல்வடிவம் பெற எடுத்துக்கொண்ட காலம் 8 ஆண்டுகள். திருப்பணிகள் முடிவடைந்து 14.05.2021 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நம்பிக்கைகள்:
குரு தோஷ நிவர்த்திக்கு இவர் கண்கண்ட தெய்வமாகிய நிலையில் உள்ளதால் அவர் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகின்றனர். செவ்வாய் கிழமைகளில் அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். செவ்வரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுவாமி சன்னதியில் திருமணம் செய்து கொண்டால் ஆறுமுகனின் நேரடி பார்வை படுவதால் மணமக்கள் நலமும் வளமுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்:
மேற்கு நோக்கிய கோயில். ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தபோது பக்தர்களின் உடை கட்டுப்பாடுகள் பற்றிய அறிவிப்பு உள்ளது. 27 படிகள் ஏறினால் ராஜகோபுரத்தை அடையலாம். 27 படிகள் நட்சத்திரத்தைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் நட்சத்திரங்களின்படி காலை 10 மணி அளவில் நடைபெறும் பூஜையில் கலந்துகொண்டு பயன்பெறலாம். ஐந்து கலசங்களை தாங்கிய 75 அடி உயர ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இதில் முருகனின் பல்வேறு திருவுருவங்கள், நாதஸ்வர கலைஞர்கள், மயில் போன்ற பெருமக்கள், 250 சுதை சிற்பங்கள் இடம்பிடித்துள்ளன.
மேல் மாடத்தில் கலை நுணுக்கத்துடன் பித்தளையால் செய்யப்பட்ட 33 அடி கொடிக்கம்பம் உள்ளது. அடுத்து தனி விமானத்துடன் கூடிய மண்டபம் காணப்படுகிறது. மகாமண்டபத்தில் பழனி ஆண்டவர் அவ்வையார் அருணகிரிநாதர் ஆகியோர் சுதை சிற்பங்கள் உள்ளன. எட்டு தூண்கள் தாங்கிய விசாலமான மகாமண்டபத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் யாழியுடன் கூடிய யானை உருவங்கள் உள்ளது. மேல் விதானத்தில் பழனியில் உள்ளது போலவே அஷ்டலக்ஷ்மி சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அர்த்த மண்டபத்தில் உற்சவர் வீற்றிருக்க கருவறையில் பழநியாண்டவர் விசிறி மடிப்புடன் கூடிய கிரீடத்தை தாங்கி, இடது கையை இடுப்பில் வைத்து மறுகையை தண்டத்தை ஏந்தி நின்ற நிலையில் புன்னகை ததும்பும் முகத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவரின் கருவறை மீது ஏக கலசம் தாங்கிய மூன்று நிலை விமானத்தில் வள்ளி திருமணம் போன்ற சிற்பங்கள் ஆதரிக்கின்றன.
பொதுவாக சிவாலயங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் தாரை இருப்பதை காணலாம். ஆனால் இங்கு முருகனுக்கு மேல் தாரை அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். தீர்த்தம் கொண்டு வருவதற்காக சுமார் 25 பேர் சைக்கிளில் திருமூர்த்தி மலைக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்த்தத்துக்கு மேல் உள்ள பானையில் ஊற்றி ஒவ்வொரு துளியாக சிரசின் மீது விழும் நிகழ்வு சிறப்பாகும்.
திருவிழாக்கள்:
இத்தலத்தில் செவ்வாய், சஷ்டி, கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வருட விழாக்களில் வைகாசி விசாகம், தைப்பூசம், கந்தசஷ்டி விழா, பங்குனி உத்திரம், ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. தைப்பூசப் பெருவிழா வழிபாடு கொடியேற்றத்துடன் தொடங்குகி திருமண வைபவம், திருத்தேர் உலா என 11 நாட்கள் நடைபெறும்.
காலம்
150 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கண்ணம்பாளையம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கோயம்பத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்