Thursday Jul 04, 2024

உறையூர் வெக்காளியம்மன் திருக்கோயில், திருச்சி

முகவரி

அருள்மிகு உறையூர் வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி மாவட்டம் – 620003. தொலைபேசிஎண் : 0431-2761869.

இறைவன்

இறைவி: வெக்காளியம்மன்

அறிமுகம்

சோழர்களின் குல தெய்வமாகவும் போர்க்கடவுளாகவும் விளங்கியவள் வெக்காளி எனும் கொற்றவை. இவள் வெற்றியை அருளும் வீரதேவியாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நீதியரசியாக, குறைகளைத் தீர்க்கும் குலதேவியாக. தீமைகளை அழிக்கும் ஸ்ரீதுர்கையாக சுருங்கச் சொல்லின் பக்தர்களின் தாயாக விளங்குபவள் வெக்காளி. உறையூர், வாகபுரி, கோழி, உறந்தை, வேதபுரம், வாரணம், முக்கீசபுரம், தேவிபுரம், உரகபுரம் என்றெல்லாம் வழங்கப்படும் உறையூர் இன்று திருச்சி மாநகரின் அங்கமாக உள்ளது. முன்பு முற்கால சோழர்களின் தலைநகரமாக மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் நிறைந்த விண்ணகரமாக விளங்கியது என்று வரலாறு சொல்கிறது. உறையூரின் வடக்கே காவல் தெய்வமாக இந்த வெக்காளி வெட்டவெளியில் வானமே கூரையாக, மேகங்களே திருவாசியாக, மழையே அபிஷேகமாக, நட்சத்திரங்களே மலர்களாகக் கொண்டு எழுந்தருளி இருக்கிறாள்.

புராண முக்கியத்துவம்

பெறும் சிறப்பு பெற்ற உறையூரை பராந்தக சோழன் ஆண்டு வந்தான். அவனது ராஜகுரு சாரமா முனிவர். இவர் மிகப்பெரிய சிவபக்தர். திருச்சி மலைக்கோட்டையில் ஒரு நந்தவனத்தை உருவாக்கி, தாயுமான சுவாமிக்கு பூஜை செய்து வந்தார். அந்த நந்தவனத்தில் சுவாமிக்காக ஏராளமான பூச்செடிகளை வளர்த்தார். ஆனால் மன்னன் பராந்தகசோழன் தனது மனைவி புவனமாதேவியின் கூந்தலில் சூட அந்த பூக்களை பறித்து சென்றான். தினமும் அவனது ஆட்கள் நந்தவனத்திற்கு வந்து பூக்களை சாரமா முனிவரின் அனுமதி பெறாமலேயே பறித்து சென்றனர். இதை அறிந்த முனிவர், மன்னனிடம் சென்று, “” மன்னா! நாடுகாக்கும் தாங்களே இப்படி மலர்களை பறித்து செல்வது முறையா?” என முறையிட்டார். மன்னர், முனிவரின் பேச்சை மதிக்கவே இல்லை. “” என் ராணிக்கு போக மீதி பூக்கள் தான் உனது இறைவனுக்கு” என ஆணவம் கொண்டு திட்டினான். இதனால் மனம் வருந்திய முனிவர், இறைவனிடம் முறையிட்டார். இறைவன் தாயுமானவன் கடும் கோபம் கொண்டார். கிழக்கு நோக்கி இருந்த அவர், மேற்கு முகமாக உறையூரை நோக்கி திரும்பி தனது நெற்றிக்கண்ணை திறந்தார். உடனே உறையூர் நகர் மீது நெருப்பு மழை பொழிந்தது. மக்கள் பயந்து ஊரைவிட்டே ஓடினர். மன்னனின் கோட்டை சிதைந்தது. மண்ணில் ஊரே புதைந்து விட்டது. வீடுகளை இழந்த மக்கள், இந்த நெருப்பு மழையில் பாதிக்காமல் நின்ற உறையூர் வெக்காளி அம்மனிடம் சென்று தங்கள் வீடுகளை தங்களுக்கு திருப்பி தரும்படி பிரார்த்தனை செய்தனர். வெக்காளி அம்மன் கருணை கொண்டு, தாயுமான சுவாமியின் சினத்தை தணிக்க முழு நிலவாக மாறி, அவர் முன்பு தோன்றினாள். அன்னையின் குளிர்ந்த பார்வை கண்டு இறைவன் அமைதி கொள்ள, நெருப்பு மழை நின்றது. இந்த நெருப்பு மழையில் அரசி புவனமாதேவியும் சிக்கிக் கொண்டாள். அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். நெருப்பின் உக்கிரம் தாளாமல், காவிரியாற்றில் சென்று குதித்தாள், காவிரி வெள்ளம் அவளை இழுத்துச் சென்றது. உத்தமச்சேரி என்ற இடத்தில் ஒரு அந்தணர் ராணியை காப்பாற்றி கரை சேர்த்தார். அவளை தனது இல்லத்தில் வைத்து பாதுகாத்தார். அங்கே அவளுக்கு “”கரிகால் பெருவளத்தான்” என்னும் மகன் பிறந்தான். புவனமாதேவி வெக்காளி அம்மனின் பக்தை. அதன் காரணமாக அவள் அம்மன் கருணையால் உயிர் பிழைத்தால் மீண்டும் சோழகுலம் தழைத்தது. அன்று உறையூரை காத்த அன்னையை நன்றிப் பெருக்கோடு மக்கள் இன்று வரை வணங்கி வருகின்றனர்.

நம்பிக்கைகள்

சோழ மன்னர்களால் வழிபட்ட தெய்வம் வெக்காளி. இத்தலத்தில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை ஒரு சீட்டில் எழுதி அம்பாளின் பாதத்தில் வைத்து பின்னர் அம்மன் சன்னதியில் உள்ள சூலத்தில் கட்டி வைப்பது வழக்கம். பக்தர்களின் கோரிக்கையை அம்பாளின் திருவருளால் நிறைவேறிய பின்னர் இத்தலத்திற்கு வந்து பிராத்தனையை செலுத்துவது கண்கூடு. இத்தலத்தில் வீற்றிருக்கும் வெக்காளியம்மனுக்கு விமானம் கிடையாது. வெயிலிலும் மலையிலும் நனைந்து “இப்படி தான் இருப்பேன்”என்று அருள் பாலித்து வருகிறார்.பிரதி பௌர்ணமியன்று மாலை 6.00 மணியளவில் அம்பாளுக்கு நடைபெறும் அபிஷேகம் பக்தர்களின் வாழ்கையை மேன்மை அடைய செய்யும் என்பது சான்றோர்வாக்கு. அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பெண்களுக்கு திருமண தடையும் புத்திர தோஷமும் நீங்கும்.

சிறப்பு அம்சங்கள்

அன்னை பராசக்தியின் அவதாரங்களில் முக்கியமானது காளி அவதாரமாகும். உறையூர் அம்மன் சன்னதியில் வடக்கு நோக்கிய யோக பீடத்தில் அமர்ந்து வெக்காளி அம்மன் கம்பீரமாக காட்சி தருகிறாள். ஒரு கரத்தில் திரிசூலம், ஒரு கரத்தில் உடுக்கை, மற்றொரு கரத்தில் பாசம், இன்னொரு கரத்தில் அட்சய பாத்திரம் என நான்கு கரங்களை கொண்டிருக்கிறாள். கழுத்தில் திருமாங்கல்யமும், முத்தாரம், அட்டிகை, தலையில் பொன்முடி, கையில் வளையல்கள் அணிந்திருக்கிறாள். பீடத்தில் வலது காலை மடித்தும், இடது காலை அசுரன் மீது பதியவைத்தும் அருள்பாலிக்கிறாள். இடுப்பில் யோக பட்டம் அணிந்திருக்கிறாள். இந்த கோயில் விமானம் இல்லாத ஒரு கோயிலாகும். வெக்காளி அம்மன் வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறாள். மேற்கூறை இல்லாத அம்மன் கோயில்களில், பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை அசுரன் மீது பதியுமாறு அமர்ந்திருப்பாள். ஆனால் வெக்காளி அம்மன் வலதுகாலை மடித்து இடதுகால் பாதத்தை அசுரன்மீது பதியவைத்திருப்பது அபூர்வ காட்சியாகும்.

திருவிழாக்கள்

சித்திரை – ஐந்துநாட்கள்திருவிழா, வைகாசி – கடைசி வெள்ளி ” மாம்பழஅபிஷேகம்” , ஆனி – கடைசி வெள்ளி காய்கனிகள் அலங்காரவழிபாடு.ஆடி – அனைத்து வெள்ளிகளும் சிறப்புவழிபாடு. ஆவணி – “சண்டிஹோமம்”. புரட்டாசி – நவராத்திரிவிழா. கார்த்திகை – தீபம். தை – பொங்கல் சிறப்பு வழிபாடு, தைப்பூசம் புறப்பாடு. மாசி – கடைசி ஞாயிறு “லட்சார்ச்சனை”. பங்குனி – முதல் வெள்ளியில் பூச்சொரிதல் விழா.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

உறையூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top