உத்தாணி சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
உத்தாணி சிவன்கோயில்,
உத்தாணி, பாபநாசம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 614205.
இறைவன்:
சிவன்
இறைவி:
பெரியநாயகி
அறிமுகம்:
கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் பாதையில் 12 கிமீ தூரத்தில் பாபநாசத்தின் முன்னர் இவ்வூர் அமைந்துள்ளது. உத்தாணி எனபது உத்தமதானி என்ற பெயரில் அந்நாளைய முத்தரையர் நாட்டு ஊராகும் என்பதை கல்வெட்டு சான்றுகள் மூலம் அறியலாம். இங்கு பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சிறு வனப்பகுதியில் உள்ளது சிவன்கோயில், கோயிலாக இல்லை என்றாலும் ஓர் பெரிய தகர கொட்டகையின் கீழ் இறைவன் வீற்றிருக்கிறார். ஐராவதம் தனது சாபம் நீங்க வணங்கி பேறுகள் பெற்ற தலம் ஆகும். இங்கு ஓயா மணி சித்தர் சமாதியும் உள்ளது. இவர் இங்கு அருவமாக வாழ்கிறார் என நம்பப்படுகிறது.
இறைவன் அருகிலேயே அம்பிகை பெரியநாயகி மற்றும் விநாயகர் முருகன் மகாலட்சுமி சிலைகளும் உள்ளன. 9ம் நூற்றாண்டில் பெரிய கோயிலாக இருந்து சிதைவடைந்து இன்று சிலைகள் மட்டும் காண கிடைக்கின்றன. நல்லூர் ஸப்தஸ்தானத்தில் இவ்வூரும் ஒன்று. ரங்கநாதபுரம், கிளியூர், கோவிந்தகுடி, ஆவூர், மட்டியான் திடல் திருப்பாலைத்துறை, உத்தாணி என சுவாமி உலா நடைபெறும். இந்த சப்தஸ்தானத்தில் விசேஷம் என்ன என்றால் இறை மூர்த்திகளுடன் அகஸ்திய முனிவரும் செல்வார். எழும்பூர் அரும்காட்சியகத்தில் உத்தாணியை சேர்ந்த வாயிற்காப்போன் சிலை உள்ளது. இதன் பழமை கண்டு இதனுடன் ஒத்த சிலைகளை கண்டுபிடிக்க உத்தாணியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு தோப்பில் வைஷ்ணவி, வராகி, இந்திராணி சிலைகள் கிடைத்தன. அத்துடன் ஒரு சிலை உச்சியில் சுடர் கொழுந்துகள் முடியாக ஒன்றிணைந்து மூன்று திருமுகம் கொண்டு வலது முன்கரம் அபய முத்த்ரையிலும் வலது பின் கையில் கத்தியும் இடது முன்கை தொடைமீது வைத்துள்ள நிலையிலும் இடது பின் கை வச்சிரப்படை கொண்டு சுஹாசனமிட்ட நிலையில் தாமரை பீடத்தின் மீது விளங்குகிறது. இது எரியங்கி ஈஸ்வரர், வேலனார் ஆகியோரின் அம்சங்களை கொண்ட புதுமை படைப்பாக உள்ளது.
தமிழகத்தில் வேறெங்கும் இப்படி ஒரு சிலை இருப்பதாக தெரியவில்லை சுகாசன சிவன் – இந்த சிலையும் அபூர்வமானது ஜடாபாரம் தலைமீது இருக்க பின் கரங்களில் மழுவும் மூவிலை சூலமும் முன் வலது கை அபயஹஸ்தமாகவும் முன் இடதுகை தொடை மீது ஏந்தும் நிலையிலும் வைத்து இலகு இருக்கையில் பத்ம பீடத்தின் மீது காட்சியளிக்கிறார். இது சுஹாசன சிவன் மற்றும் ஏகமுக சதுர்புஜ சண்டீஸ்வருக்கு உரிய அம்சங்களுடன் உள்ளது. கோயில் இருந்து இருந்தால் அது இருக்கும் திக்கை வைத்து தெய்வத்தின் பெயரை கணிக்கலாம் ஆனால் ஆலயம் அழிந்து போன நிலையில் இது சாத்தியமில்லை. மூன்று அடி உயரம் உடைய இவை அனைத்தும் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
9ம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உத்தாணி
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி