Wednesday Jul 03, 2024

இரணியல் மார்த்தாண்டேஸ்வரர் மகாதேவர் திருக்கோயில், கன்னியாகுமரி

முகவரி

இரணியல் மார்த்தாண்டேஸ்வரர் மகாதேவர் திருக்கோயில், இரணியல், கன்னியாகுமரி மாவட்டம் – 629802.

இறைவன்

இறைவன்: மகாதேவர்

அறிமுகம்

இரணியல் – கன்னியாகுமரி மாவட்டத்தின் பழமைவாய்ந்த இடம் இரணியல். வேணாடு மன்னர்கள் இரணியலை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இவ்வூருக்கு இரண சிங்கேஸ்வரம், படப்பாணாட்டு ரணசிங்கபாடி, இரணியசிங்கநல்லூர் ஆகிய பெயர்களும் உண்டாம். இத்தகவலை 1815-ம் ஆண்டு பொறிக்கப்பட்ட புன்னார்குளம் கல்வெட்டு மூலம் அறியலாம். இரணியசிங்கநல்லூர் என்ற பெயரே இரணியல் என மருவியதாகவும் சொல்கிறார்கள். இரணியலில் பழைமையான அரண்மனையைக் காணலாம். அருகில் மார்த்தாண்டேஸ்வரர் மகாதேவர் கோயில் அமைந்துள்ளது. எதிரில் வள்ளியாறு பாயந்து செல்ல, வலப்புறமும் இடப்புறமும் குளங்கள் அமைந்திருக்க எழில்சூழத் திகழ்கிறது மகாதேவர் ஆலயம். இங்கே ஈசன் கிழக்குநோக்கி அருள்கிறார். விநாயகர், சண்டிகேஸ்வரர், நாகர், வனசாஸ்தா ஆகியோரும் கோயிலில் சந்நிதி கொண்டுள்ளனர். கோயிலுக்கு வெளியே கன்னிமூலை கணபதி ஆகியோரையும் தரிசிக்கலாம். வடகிழக்கு மூலையில் உள்ள தீர்த்த கிணற்று நீரே அபிஷேகம் முதலான தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மகாதேவர் கோயிலுக்குப் பின்புறம், வேணுகோபால கிருஷ்ணன் கோயில் உள்ளது. கோயிலுக்கு இடப் புறம் உள்ள குளத்தை ஆராட்டுக் குளம் என்கிறார்கள். முன்பு இந்தக் குளத்தில்தான் இறைவர்க்கு ஆராட்டு வைபவம் நிகழ்ந்ததாம். ஆற்றில் வெள்ளம் வந்தாலும் பாதிப்பு ஏற்படாதவண்ணம் உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது சுவாமியின் கருவறை. கலைநுட்பம் மிகுந்த சிற்பங்களும் உள்ளது. நாகர்கோவிலிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இரணியல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது.

புராண முக்கியத்துவம்

மழையின் காரணமாக மன்னன் அன்றைய பொழுதில் கோயிலுக்கு செல்ல இயலவில்லை. அந்தப் பகுதியில் உள்ள சிவகிரி ஈஸ்வரனை அனுதினமும் தரிசித்து வணங்கி வழிபட்டு வந்தபிறகே உணவு அருந்துவார் மன்னர். இதனால் உணவருந்தாமல் இரவு தூங்க சென்றார். அற்புதமாய் ஒரு கனவு விரிந்தது. சாட்சாத் சிவகிரி மகாதேவனே கனவில் தோன்றினார். ‘மன்னா வருந்தற்க! உன் அரண்மனைக்கு அருகிலேயே நான் கோயில் கொள்ளப் போகிறேன். விடிந்ததும் அரண்மனைக்கு வெளியே பசு சாணம் இட்டுவைத்திருக்கும் இடத்தில் கோயில் எழுப்புக!’ என்று அருள்பாலித்தார். இறை ஆணைப்படியே அனைத்தும் நடந்தன. இரணியல் அரண்மனைக்கு அருகில் மிக அற்புதமாக எழுந்தது, மகாதேவர் ஆலயம்.

நம்பிக்கைகள்

சகல காரியங்களிலும் ஏற்படும் தடைகளைத் தகர்க்கும் தலமாக விளங்குகிறது, இரணியல் மார்த் தாண்டேஸ்வரர் மகாதேவர் கோயில். திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், காரியஸித்தி ஏற்படவும் பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இங்குள்ள சுவாமிக்கு வெண்பொங்கலும், பழங்களும் படைத்து வழிபாடுகள் நடத்துகிறார்கள். கோயிலில் சந்தனமும் திருநீறும் பிரசாதமாகத் தரப்படுகின்றன.

சிறப்பு அம்சங்கள்

கல்வெட்டு தரும் தகவல்கள்! 13-ம் நூற்றாண்டில், வேணாட்டு அரசர் கீழப்பேரூர் வீர ரவி கேரளவர்மா மகாராஜாவால் கட்டப்பட்ட ஆலயம் இது. அவர் காலத்தில் இந்தக் கோயிலில் உஷத் பூஜை, அத்தாள பூஜை நடை பெறும் பொருட்டு நிறைய நிலங்களையும் சொத்துகளையும் எழுதி வைத்திருக்கிறார்கள். `அந்தச் சொத்துகள் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு, பூஜைக்குத் தேவையான நெல், பூ, நெய் ஆகியவற்றை வழங்க வேண்டும்’ எனும் தகவலை பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.’’ என்று விவரிக்கிறார்கள், உள்ளூர் பக்தர்கள். “இந்தக் கோயிலின் மூலவர் சிவலிங்கம் கங்கையிலிருந்து கொண்டு வரப் பட்டது என்கிறார்கள். சூரியனுக்கு மார்த்தாண்டன் எனும் பெயர் உண்டு. சூரிய வம்சத்தைச் சேர்ந்த சேர மன்னர்களின் பரம்பரைக் கோயில் என்பதால், இந்த ஈசனுக்கு மாத்தாண்டேஸ்வரர் என்று பெயர் வந்திருக்கலாம். கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, இறுக்கி கோயிலின் கட்டுமானத்தைச் செய்திருக்கிறார்கள். பிற்காலத்தில் நிகழ்ந்த கும்பாபிஷேகத் திருப்பணியின்போது இடை வெளிகளில் சிமெண்ட் பூச்சு கொடுத்திருக்கிறார்கள். நாகர், கோயிலுக்கு வெளியே நாகர், கணபதி, வனசாஸ்தா மூர்த்தங்கள் பிற்கால பிரதிஷ்டையே. இந்தக் கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இருந்தாலும் பொதுமக்கள் பங்களிப்பு.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இரணியல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

இரணியல்

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top