Tuesday Jul 02, 2024

இஞ்சிமேடு திரு மணிச்சேறை உடையார் கோயில், திருவண்ணாமலை

முகவரி :

அருள்மிகு திரு மணிச்சேறை உடையார் கோயில்,

பெரணமநல்லூர், இஞ்சிமேடு,

திருவண்ணாமலை மாவட்டம் – 604503.

இறைவன்:

திரு மணிச்சேறை உடையார்

அறிமுகம்:

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இஞ்சிமேடு கிராமத்தில் பெரியமலை மலையின் உச்சியில் அமைந்துள்ள சிவனுக்கான திருமணிச்சேறை உடையார் கோயில் உள்ளது. பலர் தங்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த இடத்திற்கு வருகிறார்கள். சிவபெருமானின் வாகனமான நந்திக்கு விசேஷ பூஜை நடைபெறும் ஒரே கோவிலில் இதுவும் ஒன்றுதான். கல்வி, சொத்து, பணம் மற்றும் உடல்நலம் தொடர்பான அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் மக்கள் இந்த கோவிலுக்கு வருகிறார்கள்.

புராண முக்கியத்துவம் :

இமயமலைக்கு நிகராக “பெரியமலை’ என்று ஒரு மலை இருந்தது. அந்த மலை அகத்தியர் காலடி பட்டு பூமிக்கடியில் சென்றுவிட்டது. தரை மட்டமான அந்த பகுதியில், ஒரு முனிவர் நவபாஷாணத்தால் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தார். இவரது பக்தியை சோதிக்க நினைத்த இறைவன், ஒரு யானையை அனுப்பினார். முனிவர் தியானத்தில் இருந்த போது, அந்த யானை அருகிலிருந்த குளத்திலிருந்து நீரை எடுத்து முனிவரின் மேல் தெளித்து விளையாடியது. ஆனால், அவரது தியானம் கலையவில்லை. யானை முனிவரின் அருகே சென்றபோது, ஒரு நெருப்பு வளையம் உண்டாகி, அருகில் செல்ல விடாமல் தடுத்தது. தவத்தை மெச்சிய சிவன், முனிவரின் முன்பு தோன்றி வரம் கேட்க சொன்னார். பெரியமலையில் இருந்து அருள் புரிய வேண்டும் என முனிவர் வேண்டிக் கொண்டார். இறைவனும் பெரியமலையில் தங்கினார். அந்த முனிவர் நவபாஷாண லிங்கம் ஒன்றை இங்கு பிரதிஷ்டை செய்தார்.

நம்பிக்கைகள்:

பெரியமலையில் உள்ள சுனை தீர்த்தத்தை கொண்டுதான் நவபாஷாண லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் நோய்கள் குணமாகிறது. பாம்புக்கடிக்கு சிறந்த மருந்தாக இந்த தீர்த்தம் பயன்படுகிறது. அத்துடன் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த தீர்த்தத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்று பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

       இந்தக் கோயிலில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பதால் ஏழேழு ஜென்மத்திற்கும் பலன் உண்டு. சிவபார்வதி திருமணம் கயிலாயத்தில் நடந்த போது, சிவன் அகத்தியரிடம் பூமியை சமநிலை செய்யுமாறு கூறினார். அவர் தென்பகுதிக்கு வரும் போது இஞ்சிமேட்டில் வான் நோக்கி உயர்ந்திருந்த பெரியமலையின் மீது ஏறி நின்றார். அடுத்த கணம் இமயமலைக்கு நிகராக இருந்த பெரியமலை பூமியில் அழுந்த, அதன் நுனி மட்டும் வெளியில் நின்றது. அன்று முதல் பெரிய மலை “தென் கயிலாயம்’ என அழைக்கப்படுகிறது.

சிலாத்தியரும் இஞ்சி மேடும்: சிலாத்தியர் என்ற முனிவர் தனது கடும் தவத்தால் உடலுடனேயே சொர்க்கம் செல்லும் வரத்தை சிவனிடம் பெற்றார். வழியில் இவரைப் பார்த்த நாரதர், “”உமது மூதாதையர்களுக்கு யாரும் சரிவர திதி கொடுக்காததால் ஆவியாக அலைந்து கொண்டிருக்கின்றனர்,” என்றார். சிலாத்தியர் “மிஞ்சி’என்ற தர்ப்பை புல்லை வைத்து, மூதாதையர்களுக்கு திதி கொடுத்தார். இந்த இடமே காலப்போக்கில் “இஞ்சி’ மேடானது என்கிறார்கள். அன்று முதல் மூதாதையர்களுக்கு, அமாவாசை தோறும் திதி கொடுக்கும் முறை வழக்கத்திற்கு வந்தது. பெரியமலையில் உள்ள சுனை தீர்த்தத்தை கொண்டு தான் நவபாஷாண லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

திருவிழாக்கள்:

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குஉத்திரம், திருக்கார்த்திகை.

காலம்

700 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இஞ்சிமேடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி / சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top