Wednesday Oct 09, 2024

ஆனையூர் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் திருக்கோயில், மதுரை

முகவரி :

ஆனையூர் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் திருக்கோயில்,

ஆனையூர் கிராமம்,

மதுரை மாவட்டம்,

தமிழ்நாடு 625 017.

தொலைபேசி: 93450 42860

இறைவன்:

ஐராவதீஸ்வரர், அக்னீஸ்வரமுடையார்

இறைவி:

மீனாட்சி

அறிமுகம்:

 ஆனையூர், ஐராவதீஸ்வரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள ஆனையூரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இங்கு மூலவர் ஐராவதீஸ்வரர் என்றும் அன்னை மீனாட்சி என்றும் அழைக்கப்படுகிறார். அக்னீஸ்வரமுடையார் என்ற மற்றொரு பெயருடன் தெய்வம் அறியப்படுகிறது. இக்கோயில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று கூறப்படுகிறது. ஆனையூர் மதுரையிலிருந்து 45 கிமீ தொலைவிலும், உசிலம்பட்டியிலிருந்து 7 கிமீ தொலைவிலும் உள்ளது.

புராண முக்கியத்துவம் :

பல ஆண்டுகளுக்கு முன்பு, வேடுவமன்னன் ஒருவன் வாலாந்தூர் பகுதியினை ஆண்டு வந்தான். அவனது ஆட்சியின் போது, உத்தப்பநாயக்கனூர் எனும் நகரம் வாணிப நகரமாக இருந்தது. அங்கே வணிகர்கள் பலர், தற்போது கோயில் வீற்றுள்ள கற்றாழைக்காடு வழியாக அடிக்கடி சென்று வந்தனர். அப்போது, அக்கற்றாழைக் காட்டில் வசித்த வெள்ளையானை (ஐராவதம்) ஒன்று அடிக்கடி கோயிலின் எதிரே இருந்த பொற்றாமரைக் குளத்தில் இருந்து நீரினை தனது தும்பிக்கையில் உறிந்து, கற்றாழைக் காட்டிற்குள் செல்வதைக் கண்டு திகைத்த வணிகர்கள் இத்தகவலை மன்னரிடம் தெரிவித்தனர்.

மன்னர் உத்தரவின் பேரில் பணியாட்கள் அக்காட்டில் இருந்த கற்றாழைகளை வெட்டிட, அங்கே ஓர் கதம்பமரத்தின் அருகே இருந்த கற்றாழையினை வெட்டியபோது, ரத்தம் பீறிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின், அவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக வீற்றிருந்ததைக்கண்ட மன்னர், ஐராவதம் தொடர்ந்து சிவலிங்கத்திற்கு பொற்றாமரைக் குளத்தில் இருந்து நீரினை எடுத்து அபிஷேகம் செய்ததை அறிந்து வியப்புற்றார். பின், சுயம்புலிங்கமாக வீற்றிருந்த சிவபெருமானுக்கென தனியே கோயிலை எழுப்பி வழிபட்டார்.

நம்பிக்கைகள்:

இங்கு நாம் எண்ணிக்கொள்ளும் சகல காரியங்களும் நிறைவேறுவதாகவும், சுவாமியை வழிபட பாவங்கள் விலகுவதாகவும் நம்பப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்:

      துர்வாச முனிவர், தான் சிவபூஜை செய்ததின் பலனாகக் கிடைத்த மலர் ஒன்றினை, இந்திரனிடம் கொடுக்க அவனோ அம்மலரை அலட்சியமாகப் பெற்று அதனை தனது வாகனமான ஐராவதத்தின் மீது வைத்தான். ஐராவதம் அம்மலரினை தனது தும்பிக்கையால் எடுத்து கீழே வீசியது. சிவபூஜையினால் கிடைத்த மலரினை இந்திரனும், அவனது ஐராவதமும் அலட்சியப்படுத்தியதைக் கண்டு ஆத்திரம் அடைந்த துர்வாச முனிவர், இந்திரன் தேவர் தலைவர் பதவியை இழப்பான் எனவும், ஐராவதம் காட்டு யானையாக வாழும் என்றும் சாபம் கொடுத்தார். அந்த சாபத்தின் பலனை அனுபவித்த ஐராவதம் இத்தலத்தில் பாவ விமோசனம் பெற்றதால் இங்கு வீற்றிருக்கும் சுயம்புலிங்கம் ஐராவதீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றான இங்கு சுயம்புலிங்கமான ஐராவதீஸ்வரர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அவருக்கு மேலே, செம்பினால் செய்யப்பட்ட ஐந்து தலை நாகம் ஒன்று பிற்காலத்தில் செய்து வைக்கப்பட்டுள்ளது. சித்திரை மற்றும் ஆடி மாத பிரதோஷ தினங்களில் கருவறைக்கு நேரே சூரியனின் ஒளிபடுவது, சூரியபகவானே நேரடியாக வந்து அபிஷேகிப்பது போன்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. இக்கோயிலில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த நான்கு கைகளுடன், மூன்று கண்களைக் கொண்டு வலது கால் வளைவாகவும், இடது கால் கீழே அமர்ந்த நிலையிலுமான அர்த்தபரியங்காசன விநாயகர் வீற்வீறுள்ளார். ஸ்ரீதேவியின் மூத்த சகோதரி ஜேஷ்டாதேவி தனது இரு புறங்களிலும் மகன் ரிஷபன், மகள் அக்னிமாதா உடன் அருட்காட்சியளிக்கிறாள். இதனைப் பலரும், ஆஞ்சநேயர், தனது தாயார் அஞ்சனாதேவி உடன் காட்சியளிப்பதாகக் கூறுகின்றனர். இத்தலத்தில் உள்ள சில சிலைகள் நவாப் படையெடுப்பின் போது, சிதிலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐராவதம் பாவ விமோசனம் பெற்றதன் அடையாளமாக கதம்பமரத்தில் செய்யப்பட்ட ஐராவதசிலை ஒன்று கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்:

தினசரி பூஜை செய்ய அர்ச்சகர்கள் இல்லாவிட்டாலும், இக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் தாமாகவே பூஜைகளைச் செய்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். பிரதோஷ விசேஷபூஜை, ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம், கார்த்திகை, சிவராத்திரி மற்றும் சிவனுக்கு உகந்த தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆனையூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top