ஆந்தகுடி சோமேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
ஆந்தகுடி சோமேஸ்வரர் சிவன்கோயில்,
ஆந்தகுடி, கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610106.
இறைவன்:
சோமேஸ்வரர்
இறைவி:
சோமகலாம்பிகை
அறிமுகம்:
ஆனந்தகுடி என்பதே ஆந்தகுடி ஆனது. திருவாரூர் – அலிவலம் – புதுபத்தூர் –ஆண்டகுடி என 11 கிமீ வரவேண்டும். சந்திரன் இங்கு வந்து வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக புராணம் கூறுகிறது. இன்றும் இத்தலத்தில் உள்ள இறைவனை சந்திரன் தினமும் வழிபடுவதாக நம்பப்படுகிறது. கிழக்கு நோக்கிய திருக்கோயில் உயர்ந்த மதில் சுவர்கள் சுற்றி உள்ளன. நுழைவாயில் மேல் இறைவன் இறைவி காளைவாகனத்தில் உள்ளனர் அருகில் விநாயகர் முருகன் உள்ளனர். இறைவன்-சோமேஸ்வரர் இறைவி-சோமகலாம்பிகை
கிழக்கு நோக்கிய இறைவன் கருவறை அர்த்தமண்டபத்துடன் இணைந்தது, சோழர்கால கட்டுமானம், பிரஸ்தரம் வரை கருங்கல் கொண்டது, அதற்கு மேல் விமானம் செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. முகப்பு மண்டபம் ஒன்று செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது, அம்பிகையின் கோயில் தெற்கு நோக்கி உள்ளது. மகாமண்டபத்தின் மேல் சந்திரன் இறைவனை வழிபடும் சுதை சிற்பம் உள்ளது. தெற்கில் கருவறை கோட்டத்தில் அழகிய தக்ஷ்ணமூர்த்தி உள்ளார். லிங்கோத்பவர் இல்லாததால் சிமென்ட் சுதையாக கட்டப்பட்டுள்ளது. பிரகார சிற்றாலயங்களாக விநாயகர் மகாலட்சுமி முருகன் மூவருக்கும் உள்ளது. வித்தியாசமாக மகாலட்சுமி சன்னதி இறைவனின் நேர் பின்புறம் உள்ளது. வடக்கில் ஒரு மரத்தடியில் ஒரு நாகர் உள்ளார்.
மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178 – 1218)கால கல்வெட்டுக்கள் கருவறை அதிட்டானத்தில் உள்ளன. சண்டேசர் சன்னதி வழமையான இடத்தில் இருந்து தள்ளி உள்ளது. பிற கோயில்களில் காண இயலாத பிரம்ம சண்டேசமூர்த்தமாக இங்கு உள்ளார். நான்கு முகங்களுடன் பின் கரங்களில் அங்குசம், பாசம் கொண்டும் முன் வலக்கையில் சின் முத்திரையுடன் அக்ஷர மாலையும், இடக்கையில் கெண்டியும் கொண்டுள்ளார். கிருத யுகங்களில் மட்டுமே இருந்த இம்மூர்த்தியை தரிசிப்பதே பாக்கியம்.
வடகிழக்கில் உள்ள மண்டபத்தில் ஒரு லிங்கபாணன் மற்றும் ஆவுடையார் தனியாக கிடக்கிறது. இரண்டு பைரவர்கள், சூரியன் நாகர் சனி, அடுத்து உள்ளது யாரென அறியமுடியவில்லை (இரு கைகளிலும் கிண்ணம் ஏந்தியபடி உள்ளது) அடுத்து சண்டேசர் சிற்பம் ஒன்றும் உள்ளது. சந்திர தோஷத்திற்கு பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில் வழிபட்டால் விவசாயம் மற்றும் நீர் வளம் போன்றவையும் மேலோங்கும்..
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆந்தகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி