Friday Dec 27, 2024

அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில், (திருத்தஞ்சை மாமணிக்கோயில்) தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு நீலமேகா பெருமாள் தஞ்சை மாமணி கொயில், சத்ய கிருஷ்ணா நகர், தஞ்சாவூர், தமிழ்நாடு 613002 போன்: 04362-223384

இறைவன்

இறைவன்: நீலமேகப்பெருமாள் இறைவி: செங்கமலவல்லி

அறிமுகம்

திருத்தஞ்சை மாமணிக் கோயில் (அ) தஞ்சைமாமணிக்கோயில் என்பது தஞ்சாவூருக்கருகில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் (மங்களாசாசனத் தலம்) ஒன்றாகும். திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களால் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சைக்கருகில் வெண்ணாற்றங்கரை மீது அமைந்துள்ளது. இத் தலத்தில், வெண்ணாற்றங்கரையில் அருகருகே அமைந்துள்ள நீலமேகப் பெருமாள் கோயில், மணிகுன்றப் பெருமாள் கோயில், நரசிம்மப் பெருமாள் கோயில் என மூன்று கோயில்கள் அடங்கும். இம் மூன்று கோயில்களும் சேர்த்தே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று தலங்களிலும் மூன்று திருமால் வழிபடப்படுகிறார். மூன்று தலங்கள் இருந்தாலும் ஒரே தலமாகவே பாடல் பெற்றுள்ளன. இம்மூன்றும் சுமார் ஒரு மைலுக்கும் குறைவான சுற்றளவிற்குள்ளேயே அமைந்துள்ளன. இத்தலத்திற்கு பராசர சேத்ரம்,வம்புலாஞ்சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் எனப் பல பெயர்களுண்டு.

புராண முக்கியத்துவம்

பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு அதன் கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வந்தார். அப்போது சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் பராசரையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டுவிடும்படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை. எனவே அசுரர்களை அழிக்கும்படி சிவனிடம் வேண்டினார் பராசரர். சிவன் மாயா சக்தியாக காளிதேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தை பருகி மீண்டும், மீண்டும் உயிர் பெற்று முனிவர்களை கொடுமைப்படுத்தினர். கலக்கமடைந்த பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்க சென்றார். அப்போது தஞ்சகன் யானை வடிவம் எடுக்கவே, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வீழ்த்தினார். அவனை கொல்வதற்காக தன் மடியில் கிடத்தினார். மகாவிஷ்ணுவின் திருமேனியில் கிடத்தப்பட்டவுடன் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழியப்பெற்ற அவன் மகாவிஷ்ணுவிடம், “”எனக்காக நரசிம்மராக வந்த நீங்கள் இங்கேயே தங்கி மக்களுக்கும் அருள வேண்டும், எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்” எனக் கேட்டான். அவரும் அருள்புரிந்தார். அவனது பெயரால் இத்தலம் “தஞ்சமாபுரி’ எனப்பட்டது.தஞ்சகனின் அழிவைக்கண்ட தண்டகன், பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று அவனை அழித்தார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார். மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர் பராசரருக்கு நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். இவர் மூன்று திருநாமங்களில் தனித்தனி கோயில்களில் இத்தலத்தில் அருள்புரிகிறார்.

நம்பிக்கைகள்

பிரதோஷ வேளையில் வீரநரசிம்மரை வழிபட்டால் வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறும்.

சிறப்பு அம்சங்கள்

சக்கரத்தாழ்வாரான பெருமாள்: வீரநரசிம்மர் கோயிலில் சக்கரத்தில் மகாவிஷ்ணுவே சக்கரத்தாழ்வாராக இருக்கிறார். இவர் வலப்புறத்தில் இருக்கும் யானையின் மீது கை வைத்து தடவிக்கொடுத்தபடி இருக்க, இடப்புறத்தில் ஒருவர் சுவாமியை வணங்கியது போல சிலை அமைப்பு இருக்கிறது. இந்த வடிவம் யானை வடிவம் எடுத்த தஞ்சகாசுரனையும், அவன் திருந்தி மகாவிஷ்ணுவை வணங்குவதையும் குறிப்பதாக சொல்கிறார்கள். மனதில் தீய குணங்களுடன் இருப்பவர்கள் இவரை வணங்கினால் மன்னிப்பு பெறலாம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. இவருக்கு பின்புறத்தில் நரசிம்மர் யோகபட்டையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் இரண்யகசிபு, பிரகலாதன் ஆகியோர் இருக்கின்றனர். இந்த சக்கரத்தாழ்வார் வடிவ பெருமாளின் தரிசனம் மிகவும் விசேஷமானது. வலவந்தை நரசிம்மர்: நரசிம்மரின் இடதுபுறத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி, நீலமேகப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் அவருக்கு வலப்புறத்தில் அமர்ந்த நிலையில் இருக்கிறார். இவரை “வலவந்தை நரசிம்மர்’ என்கின்றனர். அசுரனை அழித்த நரசிம்மர், இதயம் கோபத்தில் துடித்துக்கொண்டிருக்க இத்தலத்தில் அமர்ந்தார். கோபம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதில்லை. எனவே அவள் நரசிம்மருக்கு வலப்புறத்தில் அமர்ந்துகொண்டாள். கோபப்படும் குணம் கொண்டவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்காது என்பதை இந்த வடிவம் நமக்கு உணர்த்துகிறது. அதிகமாக கோபப்படுபவர்கள் இவரை வணங்கி மன அமைதி பெறலாம். மூன்றும் சேர்ந்து ஒன்று: அசுரர்களை அழித்த மகாவிஷ்ணு இங்கு நீலமேகர், மணிக்குன்றப் பெருமாள், வீரநரசிம்மர் என மூன்று வடிவங்களில் தனித்தனி கோயில்களில் அருளுகிறார். பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இம்மூவரையும் சேர்த்தே மங்களாசாசனம் செய்துள்ளனர். இதனால் மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது. திருமணங்கொள்ளையில் மகாவிஷ்ணுவிடம் திருமந்திர உபதேசம் பெற்ற திருமங்கையாழ்வார் இத்தலத்தை இரண்டாவதாக மங்களாசாசனம் செய்துள்ளார். வீரநரசிம்மர் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூன்று மூலவர்களுக்கும் தைலக்காப்பு மட்டுமே செய்யப்படுகிறது. நீலமேகப்பெருமாள் உற்சவராக கையில் செங்கோல் ஏந்தியபடியும், உற்சவர் தாயார் அக்னி கிரீடம் அணிந்து கொண்டு சாந்தமான கோலத்தில் காட்சி தருவதும் சிறப்பு. இவரது கருவறையில் பராசரர் சுவாமியை வணங்கிய கோலத்தில் இருக்கிறார். ஹயக்ரீவர் இங்கு லட்சுமியுடன் வடக்கு பார்த்தபடி இருக்கிறார். கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர், செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி ஆகிய இருவருக்கும் ஏலக்காய் மாலை சாத்தி, நெய்விளக்கு, கற்கண்டு நைவேத்யம் படைத்து வணங்கினால் கல்வியில் சிறக்கலாம், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்களில் மூன்று பெருமாள்களுக்கும் தொடர்ந்து பிரம்மோற்ஸவங்கள் நடக்கிறது. வைகாசியில் 18 கருடசேவை திருவிழா விசேஷம்.

காலம்

1000-2000

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருத்தஞ்சை மாமணிக்கோயில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top