அருள்மிகு குலசேகர பெருமாள் திருக்கோயில், கன்னியாகுமரி
முகவரி
அருள்மிகு குலசேகர பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு, குலசேகரா தாலுகா, கன்னியாகுமரி மாவட்டம்- 629171.
இறைவன்
இறைவன்: குலசேகர பெருமாள்
அறிமுகம்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது குலசேகர பெருமாள் ஆலயம். குலசேகரப் பெருமாள் கோயில் கருவறை கோபுரம் கோகர்ண கோபுரம் என அழைக்கப் படுகிறது. பல அடுக்குகளாக உயர்ந்துள்ள இந்தக் கோபுரத்தின் ஒவ்வொரு தட்டுகளிலும் பல சித்திர வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. இன்று எல்லாமே பாழடைந்து பரிதாப நிலையில் உள்ளன. இத்தகு சிறப்பு வாய்ந்த இந்தக் கோயில் 25 ஆண்டுகளாக பெரியளவிலான பூஜைகள், திருவிழாக்கள் எதுவும் இல்லாமல் புகழ்மங்கி திகழ்கிறது. காரை சுண்ணாம்பு முதலியவற்றால் கட்டப்பட்டுள்ள கருவறை விமானம் கும்பக் கலசம் இல்லாமல் வெறுமனே காட்சி அளிக்கிறது. அவ்வளவு ஏன்… இந்தக் கோயிலின் சுவாமியின் மூல விக்கிரகத்தின் அடிப் பகுதியிலிருந்த அஷ்டபந்தனம் கரைந்து போயுள்ளது. அதனால் விஷ்ணு விக்ரஹம் ஆடுவதாகவும், அதன் காரணமாக சுவாமிக்கு அபிஷேகம் செய்வது இல்லை. அருகிலிருக்கும் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உள்ள அர்ச்சகர் ஒருவர், எப்போதாவது ஒருமுறை இந்தக் கோயிலைத் திறந்து நைவேத்தியம் செய்துவிட்டு, உடனே நடை சாத்திவிட்டுச் செல்வாராம்!
புராண முக்கியத்துவம்
திருவிதாங்கூர் மன்னர்கள் வழிபட்ட தொன்மையான ஆலயம் இது. திருவிதாங்கூர் ராஜ வம்சத்தினர் தங்குவதற்காக திருவட்டாறு கோயிலைச் சுற்றி ஓடும் பரளி ஆற்றின் கரையில் சிறிய கொட்டாரம் (சிறு அரண்மனை) அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கொட்டாரத்தில் தங்கும் மன்னர்கள், அதிகாலையில் எழுந்து பரளி ஆற்றின் `ராமர் தீர்த்தம்’ படித்துறையில் நீராடிவிட்டு, முதலில் குலசேகர பெருமாள் கோயிலில் வாளுடன் வந்து வழிபடுவார்கள். அதன் பின்னரே ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வழிபாடு செய்வார்கள் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். குலசேகர ஆழ்வார் கேரளத்தை உள்ளடக்கிய சேர நாட்டின் சக்ரவர்த்தியாக இருந்திருக்கிறார். அவரின் குடும்பவழி வந்துதான் திருவிதாங்கூர் ராஜ வம்சம். அதனால்தான் திருவிதாங்கூர் ராஜாக் களுக்கு குலசேகர கிரீடபதி என்ற பெயரும் இருப்பதாக கூறுகிறார்கள்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவட்டாறு
அருகிலுள்ள இரயில் நிலையம்
கன்னியாகுமரி
அருகிலுள்ள விமான நிலையம்
திருவனந்தபுரம்