Monday Jan 27, 2025

அதியமான் கோட்டை ஸ்ரீ தட்சிண காசி காலபைரவர் திருக்கோயில், தருமபுரி

முகவரி

ஸ்ரீ தட்சிண காசி காலபைரவர் கோவில் அதியமான் கோட்டை , சேலம் பை – பாஸ் ரோடு, தர்மபுரி – 636705, தமிழ்நாடு, இந்தியா. கைபேசி: 09443272066 / 8778165925/ 04342-244123

இறைவன்

இறைவன்: தட்சிண காசி உன்மத்த காலபைரவர்

அறிமுகம்

இந்தியாவில், இரண்டு கால பைரவர் கோவில் இருக்கின்றன உள்ளன. அவற்றில் ஒன்று தர்மபுரி கால பைரவர் கோவில் தர்மபுரி நகரில் இருந்து சேலம் செல்லும் பாதையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது தட்சிண காசி கால பைரவர் திருக்கோயில். தர்மபுரி பேருந்து நிலையத்தில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பேருந்து வீதம் அதியமான் கோட்டைக்குச் செல்கிறது. பேருந்து நிறுத்தத்துக்கு அருகிலேயே கோயில் அமைந்திருக்கிறது. மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். உன்மந்திர பைரவர் இக்கோவிலில் வீற்றிருக்கிறார்.

புராண முக்கியத்துவம்

தகடூரை மையமாகக் கொண்டு கோட்டை கொத்தளத்துடன் வாழ்ந்த சிற்றரசர்களின் வரிசையில் ஒருவர்தான் அதியமான். கடையெழு வள்ளல்களில் ஒருவராகப் போற்றப்படும் அதியமான் ஒரு சிற்றரசர். பொருள் பலமும் சரி, படைபலமும் சரி பகை மன்னர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு அவரிடம் இல்லை. எப்போது பகை மன்னர்கள் படையெடுத்து வருவார்களோ என்ற அச்சம் இருந்துகொண்டே இருந்தது அதியமான் மன்னருக்கு. நாளடைவில் அந்த அச்சமே அவரை மனநிம்மதி இல்லாமல் செய்தது. தனக்கு மனநிம்மதி கிடைக்கவும், பகை மன்னர்களால் ஆபத்து எதுவும் நேராமல் இருக்கவும் என்ன செய்யலாம் என்று ராஜகுருவையும் அமைச்சர் பிரதானிகளையும் கலந்து ஆலோசித்தார். தன் பகை மன்னர்களிடம் இருந்து பாதுகாக்க படைபலத்தையும் மீறிய தெய்வ சக்தி துணை இருந்தால் நல்லது என்றும், அந்த தெய்வ சக்தி காவல் தெய்வமான கால பைரவர்தான் என்றும் தெளிவு பெற்றார். சிவாலயங்களில் ஈசான்ய மூலையில் நாய் வாகனத்துடன் காட்சி தரும் கால பைரவர்தான் தன்னையும் காப்பாற்றும் தெய்வம் என்று தெளிந்த மன்னர், கால பைரவருக்கு ஓர் ஆலயம் ஏற்படுத்த விரும்பினார். கால பைரவரைப் பற்றி அறிந்துகொண்டதும், தன் அமைச்சர்களில் சிலரை வீரர்களுடன் காசிக்கு அனுப்பி, காலபைரவர் சிலையை கொண்டு வர ஏற்பாடு செய்தார். காலபைரவர் விக்கிரகம் வருவதற்குள்ளாகவே, கோயில் கட்டும் திருப்பணியைத் தொடங்கிவிட்டார். கோயில் கட்டி முடிக்கவும், கால பைரவர் விக்கிரகம் வந்து சேரவும் சரியாக இருந்தது. தான் கட்டிய கோயிலில் கால பைரவரை பிரதிஷ்டை செய்தார். கால பைரவரின் கருவறை விதானத்தில் நவகிரகங்களின் திருவடிவங்களையும் வடித்தார். நவகிரகங்களின் ஆற்றலும் கோயிலில் இருக்கவேண்டும் என்பதற்காகவும், கால பைரவரை மட்டுமே ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யக்கூடாது என்பதற்காகவும்தான் அதியமான் மன்னர் நவகிரகங்களை வடித்து வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது. அதியமான் மன்னர் தனது நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கவேண்டும் என்பதற்காக பிரதிஷ்டை செய்த கால பைரவர் என்பதால், தன் திருக்கரத்தில் திரிசூலத்துடன் வாளும் கொண்டு காட்சி தருகிறார். தனது நாட்டைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட பைரவர் என்பதால், பைரவர் கையில் திரிசூலத்துடன் சேர்த்துப் போர் ஆயுதமான வாளும் வைத்து இன்றளவும் பைரவரை வணங்கி வருகின்றனர். ஆலயத்தில் அதியமான் மன்னரின் ஆட்சி மற்றும் மக்களின் வாழ்வியல் முறைகளைச் சித்திரிக்கும் அற்புத சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. காசிக்கு அடுத்து தனிச் சந்நிதியில் இருக்கும் கால பைரவர் தட்சிண காசி கால பைரவர் என்று பிரசித்தி பெற்றுத் திகழ்கிறார். அதன் காரணமாகவே இந்தத் தலம் முக்தி க்ஷேத்திரம் என்றும் போற்றப்படுகிறது.

நம்பிக்கைகள்

தட்சிண காசி கால பைரவருக்கு பூசணி தீபம் ஏற்றி வழிபட்டால், எதிரிகளின் தொல்லைகள் அகல்வதுடன், காரியங்கள் சித்தியாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை,

சிறப்பு அம்சங்கள்

1. இவரை வணங்கினால் கெட்ட நேரம் நல்ல நேரம் ஆகும். நல்ல நேரம், கெட்ட நேரம் அதிபதியாக பார்க்கும் இடம் இத்திருக்கோவிலில் உள்ளது. 2. இவரின் தலையில் அக்னி பிழம்பாக காட்சியளிக்கும். சிகப்பு வர்ணம் கொண்ட மேனி கொண்டவர். 3. நான்கு கைகளை உடையவர், சூலம், கபாலம், பாசகுஷம், டமரகம் ஆகியவை கைகளில் இருக்கும். 4. இவரை கும்பிட கால நேரம் கிடையாது. 24 மணி நேரமும் பூஜைகள் உண்டு. ஏனென்றால் கால நேரமே இவர்தான். 5. படைத்தல், காத்தல், அழித்தல் என மும்மூர்த்திகளுக்கும் துணையாய் இருப்பவர் இவரே. 6. இவர் சைவம் மற்றும் வைணவம் இரண்டிற்கும் உரியவர். 7. பாம்பினை பூனுலாகவும், அரைஞான் கொடியாகவும் அணிந்துள்ளார். 8. இவரின் வாகனம் அசுரசுன வாகனம் (நாய்வாகனம்) மற்ற கோவிலில் சுன வாகனம் மட்டும் இருக்கும். 9. நிர்வாண கோலம் இவருக்கு ஆனந்த கோலாகலம். 10. வியாதிகளை குணப்படுத்துபவர். 11. மேலும் இக்கோவிலில் நந்தி, நாய் வாகனம் இரண்டும் இருக்கும், மற்ற கோவிலில் நாய் வாகனம் மட்டும் இருக்கும்.

திருவிழாக்கள்

ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால பூஜை; மாதம்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று காலை கணபதி, லட்சுமி, அஷ்டமி நாளில் அஷ்ட பைரவ ஹோமம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும் குறிப்பிடத் தக்கது. மேலும் அன்று நள்ளிரவு 1,008 கிலோ மிளகாய் மற்றும் 108 கிலோ மிளகு கொண்டு சத்ரு சம்ஹார ஹோமமும் நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியன்று தட்சிண காசி கால பைரவருக்கு தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தர்மபுரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

தர்மபுரி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top