அடியாமங்கலம் சிவன் கோயில், மயிலாடுதுறை
முகவரி :
அடியாமங்கலம் சிவன் கோயில்,
அடியாமங்கலம், மயிலாடுதுறை வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609001.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
மயிலாடுதுறை – ஆக்கூர் சாலையில் 2 கிமீ சென்றால் தருமை ஆதீனம் கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் நேர் பின்பக்கம் தெற்கு நோக்கி ஒரு சிறிய சாலை ஒன்று செல்கிறது. அதில் ½ கிமீ சென்றால் அது தான் அடியாமங்கலம் கிராமம். ஊரின் மையத்தில் ஒரு பிள்ளையார்கோயில் உள்ளது அதனை ஒட்டி செல்கிறது ஒரு ரயில்வே லைன். இந்த ரயில் ரோட்டிலேயே மயிலாடுதுறை திசை நோக்கி கொஞ்சம் தூரம் சென்றால் இடது புறம் யானை குதிரையோட ஒரு ஐயனார் கோயில் அமைந்துள்ளது. இந்த ஐயனார் கோயில் ஒட்டி ஒரு சின்ன வாய்க்கால் அதன்மேல் மூங்கில் பாலம் கடந்து சென்றால் கீற்றுக்கொட்டகையில் சிவபெருமான் நமக்காக காத்திருக்கிறார்.
அடியாமங்கலம் ஒருகாலத்தில் அடியார் மங்கலம் என வழங்கப்பட்டு தற்போது அடியாமங்கலம் ஆகியுள்ளது. இந்த கிராமத்தில் ஒரு சிவாலயம் இருந்தது, காலத்தின் மாற்றத்தினால் கோயில் சிதைவுற்று, லிங்க பாணன் மட்டுமிருந்ததால் இதனை லிங்கத்தடி திடல் என அழைத்து வந்தனர். அதனை அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வணங்கி வருகின்றனர். சற்று பெரிய அளவிலேயே இறைவன் உள்ளார். அருகில் ஆவுடையார் உடைந்து காணப்படுகிறது. எதிரில் ஒரு ரிஷபமும் உள்ளது. இறைவனுக்கு ஒரு கீற்று கொட்டகையும், போட்டு சில காலம் வணங்கி வந்தனர். சில அடியார்களின் முயற்சியால், மூங்கில் குறுக்கு கழிகள் கொண்டு கட்டப்பட்டு தகரம் வேயப்பட்டும், கூடுதலாக ஒரு விநாயகரும் மூஞ்செலியும் வந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அக்கோயிலின் அருகிலுள்ள வாய்க்காலை தூர்வாரிய போது சில சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாக சொல்கின்றனர். அவை சூரியன் முருகன், யோகநரசிம்மர் ஆகியவை ஆகும். மேலும் சில கருவறை கோஷ்ட கற்களும் கிடைத்துள்ளன. இவை கொண்டு பார்க்கும்போது 12 ம் நூற்றாண்டு சோழர்கால கோயில் என்றே கணிக்கலாம். அவை அழகாக எண்ணை சாற்றி ஐயனார் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. மாற்று மதத்தை சேர்ந்தவர் இப்பகுதியில் நிலம் வாங்கியபோது இந்த இடமும் தமக்கு சொந்தம் என உரிமை கொண்டாடுவதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
12 ம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி