அங்காள பரமேஸ்வரி (நடுமாதாங்கோவில்) திருக்கோயில், தென்காசி
முகவரி :
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில்,
அனைக்கரை தெரு,
தென்காசி மாவட்டம் – 627811.
இறைவி:
அங்காள பரமேஸ்வரி
அறிமுகம்:
ஊரின் மையப் பகுதியில் உள்ள நடுமாதாங்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முன் மண்டபம் கடந்து உள்ளே வந்தாள் மகாமண்டபத்தில் பலிபீடமும் சிம்ம வாகனத்தில் தொடர்ந்து கொடிமரமும் அடுத்து அர்த்த மண்டபத்தில் விநாயகர் அருள் தொடர்ந்து கருவறையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் தரிசனம் தருகிறாள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடவும் நோய் நொடிகள் அகலும் குழப்பம் நீங்கவும் பேய் பிசாசு போன்ற தீய சக்திகளால் ஏற்பட்ட பாதிப்புகள் விளங்கவும் அங்காள பரமேஸ்வரி அருள் புரிவதாக பக்தர்களின் நம்பிக்கையுள்ளது. 6.04.2022 அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. நடு மாதாங்கோயில் என்று அழைக்கப்படும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தென்காசி பழைய பேருந்து நிலையத்திற்கு நேர் கிழாக்காக சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
மகா மண்டபத்தின் தென் மேற்கு பகுதியில் வீரபத்ர சுவாமி சன்னதியும், பக்கத்து மண்டபத்தில் சிவலிங்கமும் அதற்கு எதிரே நந்தி எம்பெருமான் இருக்கிறார்கள். தெற்கு பகுதியில் பரிவார தெய்வங்களாக முத்துக் கருப்பன கருப்பசாமி, சுடலை வீரன், ஒண்டி வீரன், வடக்குப் பகுதியில் தவசி தம்பிரான், பேச்சியம்மன், பைரவர் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர். தெற்கு பிரகாரத்தின் மேற்கே விநாயகரும் வடக்கு பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும் தனி சன்னதிகள் ஆக இருக்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
அம்மனுக்குரிய தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. நவராத்திரி நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் உடன் பூஜைகளும் நடைபெறுகிறது. தமிழ் மாதப்பிறப்பு தோறும் திருவிளக்கு பூஜை பெண்களால் செய்யப்படுகிறது. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ வழிபாடு உண்டு. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை ஒட்டி பெரும்பாலான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருவிழா கொண்டாடப்படும் 10 நாட்களுக்கு முன்னதாக திருவிழாவிற்கான கொடி ஏற்றப்படுகிறது.
பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஏழு நாட்கள் அங்காள பரமேஸ்வரி அம்மன் உற்சவர் திருவீதி உலா நடைபெறும். தனி சன்னதியில் இருக்கும் வீரபத்திரர் எட்டாம் நாள் 9ஆம் நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. எட்டாம் நாளில் மூகாப்பிரை என்னும் அலங்காரத்தில் மாவால் செய்யப்பட்ட நடராஜர் திருவுருவம் எழுந்தருளல் நடைபெறும். காப்புகட்டி அர்ச்சகர்கள் நடனமாடியபடி அந்த தட்டை ஏந்தி கோயில் கொடி மரத்தை சுற்றி வருவார்கள். பின்னால் சாமத்தில் அந்த உருவத்தை பின்புறமாக கொண்டு சரித்துவிட்டு வருவார்கள்.
ஒன்பதாம் திருநாள் சிவபெருமானின் முகம் மட்டும் அலங்கரிக்கப்பட்ட தட்டில் அமைத்து வீதி உலா நடைபெறும். பின்னர் அதையும் சாமத்தில் கொண்டு சென்று ஊரின் ஒதுக்குப்புறத்தில் சரித்து விட்டு வருவார். 10ம் திருநாளான சிவராத்திரி அன்று குற்றாலத்திலிருந்து புனித தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. அம்மனுக்கு நேர்த்திக்கடன் உள்ளவர்கள் பால்குடம் எடுக்கிறார்கள். சிவராத்திரி அன்று 4 கால பூஜைகள் நடைபெறும்.
நான்கு கால பூஜை அதிகாலையில் நடக்கும் பொழுது ஆற்றிலிருந்து 3 செம்பு குடங்களில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அம்மன் முன் வைக்கப்படும். ஒவ்வொரு குடத்திலும் ஒவ்வொரு வாளின் கீழ் இருக்குமாறு செங்குத்தாக நிலைநிறுத்தப்படும். எந்த பிடிமானமும் இல்லாமல் தலைகீழாக மூன்று வால்களும் இரண்டரை நாழிகை (சுமார் ஒரு மணி நேரம்) நிலைநிறுத்தப்படும். அங்காள பரமேஸ்வரி அம்மனின் அருள் சக்தியால் இந்த வாள் இப்படி இருப்பதாக பக்தர்கள் பரவசம் அடைந்து வணங்குகிறார்கள். இதை அலகு நிறுத்துதல் என்கிறார்கள்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தென்காசி
அருகிலுள்ள இரயில் நிலையம்
தென்காசி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை