வில்லியனூர் திருக்காமீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
முகவரி
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் திருக்கோயில், வில்லியனூர், புதுச்சேரி மாவட்டம் – 605 110
இறைவன்
இறைவன்: திருக்காமீஸ்வரர் இறைவி: கோகிலாம்பிகை
அறிமுகம்
சுயம்புவாகத் தோன்றிய திருமேனி – பிரம்மன் பூஜித்த தலம் – சோழ மன்னன் தருமபாலனால் உருவாக்கப்பட்ட ஆலயம் – சூரியன், சந்திரன், இந்திரன், மன்மதன், ஆதிசேஷன் எனப் பலரும் வழிபட்ட தலம் – சுகப் பிரசவத்திற்கு உதவும் பிரசவ நந்தியுள்ள தலம் – பங்குனியில் சூரியன் வழிபடும் தலம் – வில்லைப்புராணம் கொண்ட கோவில் – ஆண்டுதோறும் கவர்னரும் முதல்வரும் தேர் இழுக்கும் தலம்- பிரெஞ்சு ஆட்சியில் கண்காணிப்பு கோபுரமாக விளங்கிய ராஜகோபுரம் -புதுவை மாநிலத்தின் பெரிய கோவில் என வரலாற்றுப் பெருமைகள் கொண்ட கோவிலாக விளங்குவது வில்லியனூர் திருக்காமீசுவரர் திருக்கோவில். விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் வில்லியனூர் அமைந்துள்ளது. புதுச்சேரிக்கு மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இக்கோவில்.
புராண முக்கியத்துவம்
முன்னொரு காலத்தில் பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதனால் இருவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன், தனது அடியையும் முடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார். இதில் பிரம்மன் செய்த தவறால் அவருக்கு சாபம் ஏற்பட்டது. வருத்தப்பட்ட பிரம்மன் சிவனிடம் தனது பாவத்தை போக்கும்படி வேண்டினார். சிவனும், “”தொண்டை நாட்டில் முத்தாறு நதிக்கரையில் வில்வ வனம் படைத்து சிவ பூஜை செய்தால் சாபம் நீங்கும்” என கூறி மறைந்தார். பிரம்மனும் சிவன் கூறியபடி பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்தில் சிவ பூஜை செய்து சாபத்திலிருந்து விடுபட்டார். பொதுவாக கோயில்களில் தீபாராதனையின் போது “ஓம் ராஜாதி ராஜாயப்ரசஹ்ய ஸாகினே’ என்ற மந்திரம் கூறி தீபாராதனை காட்டுவார்கள். இந்த மந்திரத்தில் “காமேஸ்வரோ’ என்ற வார்த்தை வரும். இவரை தரிசிக்க வேண்டுமானால் இக்கோயிலுக்கு செல்ல வேண்டும். எந்தக்கோயிலில் இறைவனை வழிபட்டாலும் அதில் காமேஸ்வரரின் திருநாமம் உச்சரிக்கப்படும். சோழநாட்டில் கமலாபுரி என்ற நகரை தருமபால சோழன் ஆண்டு வந்தான். இவனது முன் ஜென்ம பயனால் வெண் குஷ்டம் ஏற்பட்டது. இந்த நோய் நீங்க இத்தல குளத்தில் நீராடி சிவனை வழிபட்டு குணம் பெற்றான். எனவே வில்வவனமாக இருந்த இங்கு ஒரு நகரை உருவாக்கி, சிவனுக்கு கோயில் கட்டி வில்வநல்லூர் என பெயரிட்டான். இதுவே காலப்போக்கில் வில்லியனூர் ஆனது. தேவாரத்தில் இத்தலம் வைப்புத்தலமாக விளங்குகிறது. இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் பிரசவ நந்தி அருள் பாலிப்பது தான். பொதுவாக சிவாலயங்களில் உள்ள அம்மனின் முன்பு அம்மனை நோக்கி நந்தி அமர்ந்திருக்கும். இத்தலத்திலும் அதே போல் இருந்தாலும் அந்த நந்திக்கு முன்பு ஒரு சிறிய நந்தியும் இருக்கிறது. இதுவே பிரசவ நந்தியாகும். இங்குள்ள பைரவர் நாய் வாகனம் இல்லாமல் அருள்பாலிப்பதால் இத்தலம் முக்தி தலமாக விளங்குகிறது. உயரமான தேரும் இங்குள்ளது. சுயம்பு மூர்த்தியான இத்தல இறைவனை பங்குனி 9, 19,11ல் சூரியபகவான் ஒளிக் கற்றை வீசி வணங்குகிறார். இத்தல இறைவனை பிரம்மன், நரசிம்மன், இந்திரன், சூரியன், ஆதிசேடன், மன்மதன், சந்திரன், தருமபாலன், சகலாங்க சவுந்தரி, கோவிந்தன் ஆகியோர் பூஜித்துள்ளனர். இங்கு எழுந்தருளியுள்ள சுயம்புநாதரின் பெயர் திருக்காமீசுவரன். இவருக்கு நடுவழிநாதன், வைத்தியநாதன், வில்வநேசன் எனப் பல பெயர்கள் உள்ளன. இறைவிக்கு கோகிலாம்பிகை, குயிலம்மை, முத்தம்மை எனப் பல பெயர்கள் உள்ளன. திருக்காமீசுவரம், வில்வவனம், வில்வநகர், வில்லேச்சுரம், வில்லியனூர் என இத்தலத்தின் பெயர்களும் பலவாகும். இங்குள்ள விநாயகர், வலம்புரி விநாயகராகக் காட்சி தருகிறார். முருகன் பெயர் முத்துக்குமரன் என்பதாகும்.
நம்பிக்கைகள்
குஷ்ட நோயால் பாதிக்கப் பட்டவர்கள் இத் தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் குணமடையும் என்பது நம்பிக்கை. பிரம்மனுக்கும், திருமாலுக்கும் சிவபெருமான் ஞாயிறு பவுர்ணமி தினத்தில் காட்சி கொடுத்தார். எனவே தான் இன்றும் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் பவுர்ணமியில் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
சிறப்பு அம்சங்கள்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி 9,11, 19ல் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், சுகப்பிரசவம் வேண்டுபவர்களும் பிரசவ நந்தியிடம் வேண்டிக் கொண்டு அந்த நந்தியை, தங்கள் வீடு இருக்கும் திசை நோக்கி மாற்றி வைக்கின்றனர். தங்களது கோரிக்கை நிறைவேறியதும் பூஜை செய்து நந்தியை மீண்டும் திசை மாற்றி வைக்கின்றனர். இவ்வாலயம் அரிய கலைநயம் கொண்ட சிற்பங்களைக் கொண்டு விளங்குகிறது. மகாமண்டபத்தின் ஒரு தூணில் ஒரு பெண் பிரசவிக்கும் காட்சி தத்ரூபமாக காட்சியளிக்கிறது. குழந்தை வெளியே வருவது, இரண்டு பெண்கள் தாங்கிப் பிடிப்பது என உயிரோட்டமாக வடிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் கண்டாமணி, கி.பி. 1812-ம் ஆண்டு பிரான்சு நாட்டில் உள்ள புரோக்ஸ் போர்னிபரி என்ற ஊரில் இருந்து கொண்டு வரப்பட்டது. இங்குள்ள திருத்தேர் மிகவும் பெரியது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேர்களில் இதுவும் ஒன்று. பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் இத்தேரின் பழைய அச்சு நீக்கப்பட்டு, இரும்பாலான புதிய அச்சு பொருத்தப்பட்டது. இங்கு வைகாசி மாத பிரம்மோற்சவத்தில் நடைபெறும் தேர்த்திருவிழாவை கவர்னரும் முதல்வரும் வடம் பிடித்துத் தொடங்கி வைப்பது, பிரெஞ்சு ஆட்சிக்காலம் முதல் இன்றும் தொடர்கிறது. இத்திருக்கோவிலுக்கு மூன்று தேர்கள் உள்ளன. தேரோட்டத்தில் இம்மூன்றும் உலா வரும்.
திருவிழாக்கள்
இக்கோவிலில் சித்திரை மாத பவுர்ணமி, வைகாசி விசாக பிரம்மோற்சவம், 9-ம் நாள் தேர்த்திருவிழா, ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், அம்பிகைக்கு பிரம்மோற்சவம், ஐப்பசி கந்த சஷ்டி, சூர சம்ஹாரம், கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, சங்கரபாணி நதியில் மாசி மக தீர்த்தவாரி, பங்குனியில் சூரிய பூஜை, பிரதோஷம் என இங்கே அனைத்து விழாக்களும் சிறப்புடன் நடந்து வருகிறது.
காலம்
12 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வில்லியனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
வில்லியனூர்
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி