லாங்மென் புத்தக் குகைகள் (லாங் மென்க்ரோட்டோஸ்), சீனா
முகவரி :
லாங்மென் குகைகள்,
13 லாங் மென் ஜாங் ஜீ,
லுயோலாங் மாவட்டம்,
ஹெனான், சீனா, 471023
இறைவன்:
புத்தர்
அறிமுகம்:
சீன நாட்டின் ஹெனான் மாகாணத்தில் லுவோயாங் என்ற இடத்திற்கு தெற்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, லாங்மென் க்ரோட்டோஸ் என்ற குகைக் கோவில். லாங்மென் குகைகள், சீனாவில் இருக்கும் அழகான புத்த பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் இடமாக இருக்கிறது. பண்டைய சீனாவில் சிற்பக் கலையின் மிக முக்கியமான மற்றும் நேர்த்தியான விஷயங்களை எடுத்துக் கூறும் வகையில் இந்த கல் குகை அமைக்கப்பட்டிருக்கிறது. மவுண்ட் லாங்மென் மற்றும் சியாங் ஆகிய மலைகளில், செங்குத்தான சுண்ணாம்புக் குன்றுகளில் இந்த குகை கோவில்கள் செதுக்கப்பட்டுள்ளன.
‘லாங்மென் க்ரோட்டோஸ்’ என்று அழைக்கப்படக்கூடிய லாங்மென் குகைகள், சீனாவில் இருக்கும் அழகான புத்த பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் இடமாக இருக்கிறது. ஷாக்யமுனி புத்தர் மற்றும் அவரது சீடர்களின் பல்லாயிரக்கணக்கான சிலைகள் இங்கே வடிக்கப்பட்டுள்ளன. இந்த குகை வளாகத்திற்குள் சுமார், 2 ஆயிரத்து 345 குகைகள் காணப்படுகின்றன. அவற்றில் 1 அங்குலம் முதல் 57 அடி உயரம் வரையிலான, பல்வேறு அளவுகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள் வடிக்கப்பட்டிருப்பது மிகவும் வியப்புக்குரியதாகும்.
இங்கு மிகப்பெரிய புத்தர் சிலையாக, 57 அடி உயர புத்தர் சிலை காணப்படுகிறது. இப்பகுதியில் எழுத்துக்கள் மற்றும் சிற்பங்கள் பொறிக்கப்பட்ட கற்கள், ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 இருக்கிறது. இவற்றை ‘ஸ்டெலாக்கள்’ என்கிறார்கள். அதே போல் 60-க்கும் மேற்பட்ட பல அடுக்கு மாடிகள் கொண்ட ஸ்தூபி வடிவத்தில் கட்டப்பட்ட பவுத்த வழிபாட்டு தலங்களும் உள்ளன. இவற்றை ‘பகோடாக்கள்’ என்று அழைக்கின்றனர்.
லாங்மென் க்ரோட்டோஸின் கட்டுமானம் 5-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்திருக்கிறது. பேரரசர் சியாவோன் ஆட்சி காலத்தில், வேய் வம்சத்தினர் இதனை செய்திருக்கிறார்கள். அது சீனாவில் புத்த மதம் மிக வேகமாக வளரத் தொடங்கிய காலகட்டமாகும். பேரரசர் சியாவோன் புத்த மதத்தை மிகத் தீவிரமாக பின்பற்றியுள்ளார். வெய் வம்சத்திற்குப் பிறகு, டாங் மற்றும் சாங் உட்பட தொடர்ச்சியாக ஆறு வம்சங்கள் மூலம் 400 ஆண்டுகளுக்கும் மேலாக குகைகளில் சிற்பங்கள் செதுக்குவது தொடர்ந்து நடந்துள்ளது. குகை சிற்பங்களில் மூன்றில் ஒரு பங்கு வேய் வம்சத்தின் போதும், மூன்றில் இரண்டு பங்கு டாங் வம்சத்தின் போது செதுக்கப்பட்டது. 1,500 ஆண்டுகளுக்குப் பிறகு லாங்மென் க்ரோட்டோஸ் பண்டைய சீனாவின் அரசியல், பொருளாதாரம், மதம் மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சி மற்றும் மாற்றங்களை பல்வேறு அம்சங்களில் இருந்து பிரதிபலிக்கிறது.
வேய் வம்சத்தின் ஆட்சியின் போது மத்திய மற்றும் மேற்கு ஆசியாவிலிருந்து பல நாடுகளின் தூதுவர்கள், துறவிகள் மற்றும் வணிகர்கள் லூயோங்கிற்கு வந்துள்ளனர். அவர்களின் கலாசாரங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் லாங்மென் க்ரோட்டோஸின் பாணியையும் வடிவமைத்துள்ளனர். காரணம் அந்த காலகட்டத்தில் சீன மக்கள் பொதுவாக தரையில் அமர்ந்து வந்துள்ளனர். ஆனால் இங்குள்ள மைத்ரேய புத்தர், நாற்காலி போன்ற ஏதோ ஒன்றில் உட்கார்ந்திருப்பது போல் தெரிகிறது. இந்த வகை தோற்றம் மத்திய ஆசியாவில் குறிப்பாக பிரபுக்களிடையே காணப்பட்டுள்ளது. கடந்த 2 ஆயிரமாவது ஆண்டில் இந்த இடம், யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காலம்
5 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
யுனெஸ்கோ
அருகிலுள்ள பேருந்து நிலையம்
லுயோலாங்
அருகிலுள்ள இரயில் நிலையம்
லுயோலாங் லாங்மென்
அருகிலுள்ள விமான நிலையம்
லுயோலாங் பெஜியா Luoyang Beijiao