Friday Jan 17, 2025

மாமண்டூர்-நரசமங்கலம் குடைவரை கோயில், திருவண்ணாமலை

முகவரி

மாமண்டூர்-நரசமங்கலம் குடைவரை கோயில், மாமண்டூர், செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்- 603111.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உள்ளது மாமண்டூர். இது முற்காலத்தில் காஞ்சிபுரத்தின் ஓர் பகுதியாக இருந்தது. இங்கே சித்திரமேகத் தடாகம் என்னும் ஏரியை ஒட்டி அமைந்துள்ள குன்றுகளில் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட குடைவரை கோயில்கள் காணப்படுகின்றன. குன்றுத்தொடரின் தெற்கு மூலையில் கிழக்கு திசைப் பார்வையில் இக்குடைவரை குடையப் பெற்றுள்ளது. மிக எளிமையான கட்டடக்கூறுகளைக் கொண்ட இக்குடைவரையை அணுக ஏதுவாக படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரைப்பணிகள் தொடங்கி முழுமை பெறாமல் இடையிலேயே கைவிடப்பட்டுள்ளன. இக்குடைவரையின் முகப்பில் இரண்டு முழுத்தூண்களும், தென்,வட புறங்களில் பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. முழுத்தூண்களுள் முதல் தூணில் சதுரம், கட்டு, சதுரமெனப் பிரிக்கும் பணி நிறைவுறாமல் கைவிடப்பட்டுள்ளது. இரண்டாம் முழுத்தூண், சதுரம், கட்டு, சதுரம் போன்ற எவ்வித அமைப்பும் துவங்கப் பெறாமல் எளிமையாக விடப்பட்டுள்ளது. அரைத்தூண்களும் எவ்வித அமைப்புமின்றி எளிமையாக, நான்முகமாகவே உள்ளன. வளைந்த போதிகைகள் உத்திரத்தை தாங்குவது போல அமைக்கப்பட்டுள்ளன. முகப்புத் தூண்களையடுத்த முகமண்டபத்தின் கூரை, தரை மற்றும் பக்க்ச் சுவர்கள் வெறுமையாகவும், சமன் செய்யப்படாமலும் உள்ளன. குடைவரையின் பின்புறச்சுவரில் மூன்று கருவறைகள் அமைக்கும் பணி துவங்கப்பட்டு அது நிறைவுறாமல் கைவிடப்பட்டுள்ளது. இப்பணி துவங்கியமைக்கு அத்தாட்சியாக பின்சுவற்றில் உளிகளால் பொளியப்பட்டுள்ள சுவடுகள் பாறைகளில் வெளிப்படுகிறது. மாமண்டூர் வருவாய்க் கிராம எல்லையில் பெரும்பகுதி நிறைவடைந்த இரண்டு குடைவரைகளும், தென்புறத்தே நரசமங்கலம் வருவாய்க் கிராம எல்லையில் சிறியதும், பெரியதுமாக இரண்டு நிறைவடையா குடைவரைகளும் அமைந்துள்ளன. தென்வடலாக உயர்ந்து விரியும் இக்குன்றுத் தொடரின் பின்புறம் முதலாம் மகேந்திரவர்மரால் உருவாக்கப்பட்ட “சித்ரமேகத் தடாகம்” பரந்து விரிந்து காணக் கிடைக்கும். இக்குடைவரைகளை அவை அமைந்துள்ள வருவாய்க் கிராமங்களையொட்டி இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்: I. நரசமங்கல குடைவரைகள்: 1. முற்றுப் பெறாத சிறிய குடைவரை 2. முற்றுப் பெறாத பெரிய குடைவரை II. மாமண்டூர் குடைவரைகள்: 1. ருத்ர வாலீஸ்வரம் 2. வடக்கு குடைவரை.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மாமண்டூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

செங்கல்பட்டு

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top