மகாராஜபுரம் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
மகாராஜபுரம் சிவன்கோயில், மகாராஜபுரம், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 609802.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், மகாராஜபுரம் சிவன்கோயில், மயிலாடுதுறையின் மேற்கில் சரியாக 19 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருக்கொடிக்காவல், அதற்கு ½ கிமீ. முன்னதாக உள்ளது இந்த மகாராஜபுரம். பிரதான சாலையின் வடபுறம் சிறிய ஊராக உள்ளது மகாராஜபுரம். அரசர்களுக்கெல்லாம் அரசனாக விளங்கிய முதலாம் ராஜராஜன் பெயராலேயே இந்த சிற்றூர் மகாராஜபுரம் என வழங்கப்படுகிறது. சோழர்களின் ராஜபாட்டையான கல்லணை – பூம்புகார் சாலையில் இவ்வூர் உள்ளது. இந்த ராஜபாட்டையில் சோழர்களுக்கு பெருமை சேர்க்கும் பல பெருங்கோயில்கள் உள்ளன. அவ்வகையில் இங்குள்ள சிவாலயமும் சோழர்களால் கட்டப்பட்டதுவே. பெரியதொரு குளத்தின் மேற்கு கரையில் உள்ளது சிவாலயம்; அருகில் உள்ள காத்தாயி அம்மன் கோயில் தான் அடையாளம். கோயில் என்பது ஆண்டவன் அருவுருவத் திருமேனி கொண்டு ஆன்மாக்கள் வழிபட்டு உய்யும் பொருட்டு, இனிதமர்ந்து உறையும் நல்லிடமாகும். இத்திருமேனியை வழிபடும் நிலையை ஆன்றோர் உரு வழிபாடெனக் கூறுவர். அலைகின்ற மனதை ஒரு நிலையில் இருத்தற்கு இவ்வழிபாடு இன்றியமையாதது. இவ்வழிபாட்டால் உள்ளத்தில் உறுதியும், தூய்மையும், அரும்பொருளுணரும் ஆற்றலும் உண்டாகும். ஆனால் அப்படிப்பட்ட திருக்கோயில்களை நாம் பல காரணங்களால் பராமரிக்காமல் விட்டு இன்று ஊருக்கு ஊர் பெருங்கோயில்கள் பாழ்பட்டு கிடக்கின்றன.
புராண முக்கியத்துவம்
இளையதாக முள்மரம் கொல்லாமல் விட்டதன் விளைவு, பராமரிப்பது கடினம் என்றே செம்பியன் மாதேவி தொடங்கி கடைசி சோழன் வரை கருங்கல் கொணர்ந்து கட்டி எழுப்பிய கோயில்கள் இன்று மண்ணோடு உறவாடி தரை மட்டமாக கிடக்கின்றன. ஒன்பது நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டிருத்தல் கூடும். கிழக்கு நோக்கிய இறைவன் கருவறை, அம்பிகை தெற்கு நோக்கி இருந்திருக்கிறாள், இரு கருவறைகளையும் சில சிம்ம தூண்கள் தாங்கியது போன்ற மண்டபம் இருந்துள்ளது. கருவறையின் புற சுவற்றில் நவகோஷ்டங்கள் இருந்துள்ளன. ஆனால் அவற்றில் என்ன இருந்தன என அறியக்கூட ஒரு சிலை கூட அங்கில்லை. அத்தனையும் களவாடப்பட்டுவிட்டன. களவாணிகளுக்கு லிங்க மூர்த்திகள் மேல் ஆசையில்லை போலும் மூன்று முழு மூர்த்திகள் இங்கிருந்து உழவார பணிமக்கள் சிலரால் தனியே ஒரு தகரகொட்டகையில் வைக்கப்பட்டுள்ளன. உடன் சில பாணன் இல்லா ஆவுடைகளும் கிடக்கின்றன. ஆனால் இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளின் முன்னரே துரையினர் இங்கிருந்த 20+ ஐம்பொன் சிலைகளை இங்கிருந்து அருகாமை காப்பகத்திற்கு எடுத்து சென்றுவிட்டனர். இவற்றை கண்ணால் பார்த்த கடைசி தலைமுறைக்கு இன்று வயது எழுபதுக்கும் மேல். இக்கோயில், அதன் வரலாறு, அதன் மூர்த்திகள், இங்கு நடந்த வழிபாடுகள் கொண்டாட்டங்கள் இவற்றின் நினைவே இல்லாமல் ஆயிரம் பிறைகளை பார்த்துவிட்டனர் இம்மக்கள். எவனொருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் பூஜித்தால் உண்டாகும் பலனை அடைகிறான். அது மட்டுமல்ல அவன் குலத்தில் சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வார்கள். ஒருவன் மனத்தால் ஆலயம் எழுப்ப வேண்டும் என நினைத்தாலே அவன் ஏழு ஜன்மங்களில் செய்த பாபங்களினின்று விடுபடுவான். அவன் ஆலயம் கட்டி முடித்தான் என்றால் சகலமான போகங்களையும் அடைவான். ஆனால் இதனை செய்வதெப்போ? எறும்பூற கல்லும் தேயும், நடக்க நடக்க பாதை உண்டாகும், நீங்கள் வர வர இக்கோயில் தன்னை தானே செதுக்கிகொள்ளும். மூன்றே லிங்கங்கள் தானே அதில் பார்க்க என்ன உள்ளது என இருந்துவிடாதீர்கள்!! உள்ளூர் இளைஞர்கள் உடலுழைப்பு செய்ய தயாராக உள்ளனர். கைகொடுக்க நீங்கள் தயாரா? # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மகாராஜபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஆடுதுறை, குத்தாலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி