Tuesday Nov 26, 2024

புலிக்கால் முனிவர் வழிபட்ட ‘நவ புலியூர்’ தலங்கள்

வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், சிவனின் ஆனந்தத் தாண்டவங்களை தரிசித்த தலங்கள் ‘நவ புலியூர்’ என்று அழைக்கப்படுகின்றன.

இந்த ஒன்பது ஆலயங்களையும் மிகச் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தைக் காண மிகவும் ஆவல் கொண்டவர்கள், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் ஆவார்கள். இவர்களில் வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், சிவனின் ஆனந்தத் தாண்டவங்களை தரிசித்த தலங்கள் ‘நவ புலியூர்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஒன்பது ஆலயங்களையும் மிகச் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

1.பெரும்பற்றப்புலியூர்

பிரசித்திப் பெற்ற சிதம்பரம் ஆலயத்தின் மற்றொரு பெயர்தான் இது. மேலும் தில்லை, பொற்புலியூர் என்ற பெயர்களும் இந்த தலத்திற்கு உண்டு. இங்கு பதஞ்சலி வகுத்த பூஜா சூத்திரப்படியும், வியாக்ரபாதர் வகுத்த புஷ்பார்ச்சனைப் படியும், தினமும் நடராஜருக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. சமயக்குரவர்கள் நால்வரும் வழிபட்ட முக்கியமான திருக்கோவில், சிதம்பரம் ஆகும்.

2.திருப்பாதிரிப்புலியூர்

கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து மிக அருகாமையில் அமைந்துள்ளது, திருப்பாதிரிபுலியூர். ‘பாதிரி’ என்ற மரத்தை தலமரமாக கொண்டிருப்பதாலும், புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்டதாலும் இது இப்பெயர் பெற்றது. பாதிரி மரத்தின் அடியில் அமர்ந்து தவம் இருந்ததன் பலனாக பார்வதி தேவி இறைவனை மணம்புரிந்த தலம் இதுவாகும். இறைவனின் பெயர் ‘பாடலீஸ்வரர்’, இறைவியின் திருநாமம் ‘பெரியநாயகி’ என்பதாகும்.

3.எருக்கத்தம்புலியூர்

வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்தத் தலம், தற்போது ராஜேந்திரப்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்த ஊரில்தான் வியாக்ரபாதர் வழிபட்ட நீலகண்டேஸ்வரர் கோவில் இருக்கிறது. இறைவியின் திருநாமம் ‘நீலமலர்க்கண்ணி’ என்பதாகும். இந்த ஆலயத்தின் தல மரமாக, வெள்ளெருக்கு உள்ளது. முருகப்பெருமான், உருத்திரசன்மராக தோன்றி வழிபட்டதால் ‘குமரேசம்’ என்றும், தேவகணங்கள் வழிபட்டதால் ‘கணேசுரம்’ என்றும் பெயர் வழங்கப்படுகிறது. கடலூரில் இருந்து 71 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்தாசலத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் எருக்கத்தம்புலியூர் உள்ளது.

4.ஓமாம்புலியூர்

சிதம்பரத்தில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, ஓமாம்புலியூர். இத்தல மூலவராக உயர்ந்த பீடத்தில் தட்சிணாமூர்த்தி அருள்கிறார். இறைவனின் திருநாமம், ‘துயர் தீர்த்த நாதர்’ என்னும் ‘பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்’ என்ப தாகும், இறைவியின் பெயர் ‘பூங்கொடிநாயகி.’ பார்வதி தேவிக்கு, தட்சிணாமூர்த்தியாக இருந்து பிரணவத்தின் பொருளை உபதேசம் செய்ததாலும், வியாக்ரபாதர் வழிபட்டதாலும் இந்த திருத்தலத்திற்கு ‘ஓமாம்புலியூர்’ என்று பெயர் வந்தது.

5.கானாட்டம்புலியூர்

கடலூர் மாவட்டத்தில் உள்ளது, கானாட்டம்புலியூர். பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. இத்தல இறைவனின் பெயர், பதஞ்சலிநாதர் என்பதாகும். இறைவியின் திருநாமம், கண்ணார்குழலி. சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரப் பாடல் பெற்ற இந்த ஆலயத்தில் வழிபட்டால், நன்மைகள் பல பெறலாம். சிதம்பரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், கானாட்டம்புலியூர் உள்ளது. ஓமாம்புலியூரில் இருந்தும் இந்த ஆலயத்திற்குச் செல்லலாம்.

6.சிறுபுலியூர்

மயிலாடுதுறையில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சிறுபுலியூர். இத்தல இறைவன், ‘வழித்துணைநாதர், மார்க்கபந்தீஸ்வரர், கங்காளநாதர்’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் இத்தலத்தை அடைந்தபோது இரவு வேளை வந்துவிட்டது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும், சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் காட்சி தந்து, யாத்திரை நிறைவேற உதவி செய்தனர். எனவே இத்தல இறைவன் ‘வழித்துணைநாதர்’ என்று பெயர் பெற்றார். இங்கு பெருமாளுக்கும் ஆலயம் அமைந்துள்ளது. பெருமாளின் திருநாமம் ‘அருள்மாகடலமுத பெருமாள்’ என்பதாகும். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் திகழ்கிறது. இங்கு பெருமாள், புஜங்க சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். வியாக்ரபாதர், பெருமாளை பூஜித்த நிலையில் காட்சி தருகிறார்.

7.அத்திப்புலியூர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது அத்திப்புலியூர் திருத்தலம். இங்குள்ள சிதம்பரேஸ்வரர் கோவிலில், வியாக்ரபாதர் வழிபாடு செய்திருக்கிறார். ‘அத்தி’ என்றால் ‘யானை’ என்று பொருள். இங்கு யானையும், புலிக்கால் கொண்ட வியாக்ரபாதரும் வழிபாடு செய்ததால் இது ‘அத்திப்புலியூர்’ ஆனது. மூலவர் திருநாமம் ‘சிதம்பரேஸ்வரர்’ என்பதாகும். இவர் தெற்கு நோக்கி வீற்றிருந்து அருள்கிறார். இறைவியின் பெயர், சிவகாமசுந்தரி. இங்கு மூலவராக வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் பின்புறம் சோமாஸ்கந்தரை தரிசனம் செய்யலாம். பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், அகத்தியர் ஆகியோருக்கு, தன்னுடைய திருமணக் காட்சியை இறைவன் காட்டி அருளிய இடம் இது. இந்தத் தலம் ‘தட்சிண கேதாரம்’ என்றும் போற்றப்படுகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் கீழ்வேளூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் சென்றால், அத்திப்புலியூரை அடையலாம்.

8.பெரும்புலியூர்

திருவையாறுக்கு வடமேற்கே சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில், பெரும்புலியூர் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, வியாக்ரபாத முனிவர் வழிபாடு செய்துள்ளார். இங்குள்ள இறைவனின் திருநாமம், வியாக்ரபுரீஸ்வரர், இறைவியின் பெயர், சவுந்திரநாயகி. இந்த ஆலயத்தில், கல்லால் வடிக்கப்பட்ட நடராஜர் மூர்த்தம் இருக்கிறது.

9.தப்பளாம்புலியூர்

திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தப்பளாம்புலியூர். சுயம்புவாக தோன்றி வீற்றிருக்கும் இத்தல இறைவனின் திருநாமம், வியாக்ரபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம், நித்யகல்யாணி. வியாக்ரபாதருக்கும், மண்டூக மகரிஷிக்கும் இறைவன் அருள்பாலித்த தலம் இது. இந்த ஆலயத்தில்தான், வியாக்ரபாதருக்கு இருந்த புலிக்கால் மற்றும் புலிக்கையை இறைவன் நீக்கி அருளியதாக தல புராணம் சொல்கிறது. பதஞ்சலி, வியாக்ரபாதர், மண்டூக மகரிஷி ஆகிய மூவரும், ஈசனின் திருநடனக் காட்சியை கண்டு களித்த தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு கல்லால் வடிக்கப்பட்ட, நடராஜர் மூர்த்தம் உள்ளது.

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top