பார்மர் கிராடு கோவில்கள், இராஜஸ்தான்
முகவரி
பார்மர் கிராடு கோவில்கள், சிஹானி, இராஜஸ்தான் – 344502
இறைவன்
இறைவன்: சிவன், விஷ்னு
அறிமுகம்
பார்மரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராடு கோயில்கள் இந்த பகுதியில் உள்ள முக்கிய இடங்கள். இவை அற்புதமான சோலங்கி பாணி கட்டிடக்கலையை வெளிப்படுத்தும் 5 கோவில்கள். இந்த கோவில்கள் சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. இந்த கோவில்களில் சில கஜுராஹோ கோவில்களின் சிற்பத்தை ஒத்திருக்கிறது. எனவே, இவை இராஜஸ்தானின் கஜுராஹோ என்றும் புகழ்பெற்றவை. இங்குள்ள கோவில்கள் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. கிராடு இராஜஸ்தானின் கஜுராஹோ என்றும் அழைக்கப்படுகிறது, ஆனால் கடந்த 900 ஆண்டுகளாக இந்த இடம் வெறிச்சோடி காணப்பட்டதால் கஜராஹோவைப் போல கீரடு புகழ் பெற முடியவில்லை. விஷ்ணு கோவில் குழுவின் மறுமுனையில் உள்ளது, மண்டபத்தின் செதுக்கப்பட்ட நெடுவரிசைகள் மட்டுமே இன்றும் உள்ளன.
புராண முக்கியத்துவம்
இந்தக் கோயில்கள் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அந்தக் காலத்தில் இந்த நிலம் கிராட்கோட் என்று அழைக்கப்பட்டது. கிராட் குலத்தின் மன்னர் சோமேஸ்வர் 12 ஆம் நூற்றாண்டில் இந்த இடத்தை ஆண்டார். அந்தக் காலங்களில் வளமான மற்றும் செழிப்பான நிலமாக இருந்தது. வெளிநாட்டு படையெடுப்பு குறித்த அச்சம் அரசரையும் பொது மக்களையும் வருத்தப்படுத்தியது. வெளிநாட்டு படையெடுப்பிலிருந்து தனது மக்களையும் இராஜ்ஜியத்தையும் பாதுகாப்பாக வைக்க, அரசர் ஒரு முனிவரை சந்தித்து தனது இராஜ்ஜியத்தில் தங்குமாறு வேண்டினார். அவரையும் அவருடைய சீடர்களையும் நன்றாகப் பராமரிக்க முன்வந்தார். பெரிய துறவியின் முன்னிலையில் ஆசீர்வதிக்கப்பட்ட இராஜாவின் நிலம் மீண்டும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருந்தது. ஒரு நாள் துறவி அந்த இடத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார், ஆனால் அவருடைய சீடர்களில் ஒருவரை இராஜ்ஜியத்தில் பாதுகாக்கும்படி கூறினார். துறவி இல்லாத நிலையில், அரசனும் அவருடைய மக்களும் துறவியின் சீடரை மறந்து தங்கள் சொந்த வாழ்க்கையில் மூழ்கிவிட்டனர். இதற்கிடையில், துறவியின் சீடர் நோய்வாய்ப்பட்டார், ஆனால் ஒரு குயவனின் மனைவியைத் தவிர யாரும் அவரை கவனிக்கவில்லை. துறவி இராஜாவின் நிலத்திற்குத் திரும்பியபோது, அவர் தனது சீடரின் உடல்நலக் குறைவைக் கண்டு கோபமடைந்தார். அவர் அந்த நிலத்தின் மக்களைச் சபித்தார்- ‘மனிதநேயம் இல்லாத இந்த இடம், மனிதகுலத்திற்கு சுமையாக இருக்கக்கூடாது.’ அவருடைய சாபத்தின் விளைவாக மக்கள் அனைவரும் கல்லாக மாறினர். துறவி குயவனின் மனைவியை இந்த சாபத்திலிருந்து விடுவித்தார். அவளை மட்டும் கிராமத்தை விட்டு வெளியேறவும், கிளம்பும் போது திரும்பி பார்க்க வேண்டாம் என்றும் கூறினார். அந்தப் பெண், துறவியின் ஆலோசனையைப் பின்பற்றினாள், ஆனால் அவள் கிராமத்தை விட்டு வெளியேறும் முன்பு, துறவியின் வாக்கை மறந்து திரும்பிப் பார்த்தாள். இதனால் அவளையும் கல்லாக மாற்றியது. கைவிடப்பட்ட நிலையில் இருக்க, இந்த இடத்தை சபிக்கப்பட்டதால் சுற்றி யாரும் வசிப்பதில்லை என்று நம்பப்படுகிறது. இரவில் இந்த இடத்தில் தங்கியிருப்பவர்கள் கல்லாக மாறுவார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. பாறைகளாக மாறியவர்கள், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் மணலாக மாறுவர் என்பது பலருடைய நம்பிக்கை. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு யாரும் இந்த இடத்திற்கு வருவதில்லை.
காலம்
11 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பார்மர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பார்மர்
அருகிலுள்ள விமான நிலையம்
ஜோதாப்பூர்