Tuesday Nov 19, 2024

திருப்பருத்திக்குன்றம் சமணக் கோயில், காஞ்சிபுரம்

முகவரி

திருப்பருத்திக்குன்றம் சமணக் கோயில், திருப்பருத்திக்குன்றம், பிள்ளையார்பாளையம் புத்தேரி, காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு – 631502

இறைவன்

இறைவன்: மகாவீரர்

அறிமுகம்

திரைலோக்கியநாதர் கோயில் அல்லது திருப்பருத்திக்குன்றம் ஜீனசுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டின், காஞ்சிபுரத்தின் புறநகர் பகுதியான திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள ஒரு சைனக் கோயிலாகும். இது சமண சமயத்தின் திகம்பம்பர பிரிவைச் சேர்ந்த கோயில். திராவிட கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோயிலானது பல்லவ மன்னர் சிம்மவிஷ்ணுவால் கி.பி 556 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அப்போது இந்தக் கோயில் `வர்த்தமானீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டது. பல்லவர் காலத்தில் செங்கல் கோயிலாகக் கட்டப்பட்ட இந்தக் கோயில், பிற்கால சோழ மரபைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கருங்கல் கோயிலாக மாற்றப்பட்டது. பின்னர், விஜய நகரப் பேரரசு காலத்தில் இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டது. இக்கோயிலானது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக பராமரிக்கப்படுகிறது. அதே சமயம் பரம்பரை அறங்காவலர்களின் நிர்வாகத்திலும் உள்ளது. இந்தக் கோயிலுடன் சந்திரபிரபா கோயிலைச் சேர்த்து இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியானது ஜீன காஞ்சி என அழைக்கப்படுகிறது இதைப் போலவே காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள இருபகுதிகள் சிவ காஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி என அழைக்கப்படுகின்றன.

புராண முக்கியத்துவம்

இப்பகுதியை ஆண்ட பல்லவர்கள் தங்கள் துவக்கக் காலங்களில் சைன சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். உள்ளூரில் நிலவும் ஒரு கதையின்படி, இந்த கோயிலானது பல்லவ வழிநின்ற துறவிகளான வாமனா மற்றும் மல்லீசீனா ஆகியோரால் கட்டப்பட்டது. ஆறாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில் முதல் பல்லவ மன்னனான சிம்மவிஷ்ணுவால் இக்கோயில் கட்டப்பட்டதாக வேறுசில செய்திகள் உள்ளன. என்றாலும் இக்கோயில் 8 ஆம் நூற்றாண்டில் ஏறத்தாழ கி.பி. 800 ஆம் ஆண்டு பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் பல்லவ மன்னன், இரண்டாம் நரசிம்ம பல்லவன் (700-728 CE) மற்றும் அதற்குப் பின் ஆண்ட இடைக்கால சோழ மன்னனர்களான இராஜேந்திர சோழன் (1054-63 CE), முதலாம் குலோத்துங்க சோழன் (1070-1120 CE) விக்கிரம சோழன் (1118-35 CE),மற்றும் விஜய நகர பேரரசரான கிருஷ்ணதேவராயன் (1509-29 CE) ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன. சோழர் மற்றும் விஜயநகர கல்வெட்டுகள் கோவிலுக்கு அளித்த கொடைகளைப் பற்றி குறிப்பிடுகின்றன. 13 ஆம் நூற்றாண்டு ஓவியங்களை 15 -16 ஆம் நூற்றாண்டில் மீண்டும்வரைய கிருஷ்ணதேவராயர் உதவியுள்ளார். இக்கோயிலை தமிழக தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இக்கோயிலின் கோபுரமானது 1199 ஆம் ஆண்டில் முனிவர் புஷ்பசெனா வமணராயரால் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. கோயிலின் சுவர்கள் 13 ஆம் நூற்றாண்டில் அழகிய பல்லவனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கோயிலில் 1387 ஆம் ஆண்டு விஜயநகர மன்னரின் அமைச்சரான எரிகப்பா என்பவரால் சங்கீத மண்டபம் என அழைக்கப்படும் இசை மண்டபம் கட்டப்பட்டுள்ளது உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

இந்தக் கோயிலானது திராவிடக் கட்டிடக்கலையில், மூன்று கோபுரங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலிலில் மூன்று சன்னதிகள் உள்ளன, அதில் மகாவீரர் சந்நிதி மையத்தில் உள்ளது. 24வது தீர்த்தரங்கரான லோகநாதரின் உருவம் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. நேமிநாதர் நெற்கில் உள்ளார். மூன்று புனித வெண்கலச் சிலைகள் தற்போதுள்ள கருவறை வட்ட வடிவப் பின்புறத்தைக் கொண்ட `தூங்கானை மாடம்’ எனும் அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. மகாவீரர், புஷ்பதந்தர், தருமதேவி ஆகியோரது கருவறைகள் கொண்ட கட்டட அமைப்பு சமணத்தில் `திரைலோக்கியநாதர் கோயில்’ எனப்படுகிறது. இந்த மூன்று கருவறைகளுள் மகாவீரர் கருவறை காலத்தால் முந்தையது. வர்த்தமான தீர்த்தங்கரர் கருவறைக்கு வடக்கிலுள்ள புஷ்பதந்த தீர்த்தங்கரர் கருவறையும் வட்ட வடிவமாகக் காணப்படுகிறது. தென்புறத்தில் சிறிய அளவில் தரும தேவியின் கருவறை காணப்படுகிறது. கருவறைக்கு முன்னுள்ள முன் மண்டபம் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்களுடன் அமைந்திருக்கிறது. இந்த மண்டபத்தில் விஜயநகர கால ஓவியங்கள் அழகாகத் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் முக்கியமாக சமண தீர்த்தங்கரர்களாகிய ரிஷபநாதர், வர்த்தமான மகாவீரர், நேமிநாதர் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையில் உள்ளன. இவை மட்டுமல்லாமல் யக்ஷியின் வாழ்க்கையை விளக்கும் ஓவியங்களும் இங்கு தீட்டப்பட்டிருக்கின்றன. தூண்களில் ஓவியங்களை வரையப்பட்டுள்ளன. பிற தென்னிந்திய இந்து ஆலயங்களைப் போலவே, இந்தக் கோயிலின் நுழைவு வாயில் மற்றும் சன்னதிக்கு நடுவே துவாஜஸ்தம்பம் என அழைக்கப்படும் கொடிமரம் உள்ளது.கோயிலின் விதானத்தில் பல ஓவியங்கள் வரையப்பட்டு, அதில் தமிழ் கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டும் உள்ளன. இதில் பெரும்பாலான ஓவியங்கள் கிருட்டிணணின் வாழ்க்கைக் கதையை விவரிக்கின்றன. திரைலோக்கியநாதர் கோயிலானது 1991 வரை 600 ஆண்டுகளாக பரம்பறை அறங்காவலர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அதன்பிறகு, இந்த கோயிலானது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் ஒரு காலத்தில் சைன சமயத்தின் மையமாக புகழ்பெற்று இருந்தது. கோயில் அமைந்துள்ள இடமானது பாரம்பரியமாக பருத்தி என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக நவீனக் காலத்திலும் காஞ்சிபுரமானது கைத்தறி பட்டு புடவை நெசவின் பிரபலமான மையமாக தொடர்கிறது. இப்பகுதியில் சைனத் துறவிகள் அரசின் ஆதரவுடன், சைனத்தின் திகம்பர பிரிவைப் பரப்பினர்.

காலம்

6 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்தியத் தொல்லியல் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top