திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் திருக்கோவில், திருவாரூர்
முகவரி
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் திருக்கண்டீஸ்வரம். (வழி) சன்னாநல்லூர், நன்னிலம் ஆர்எம்எஸ், திருவாரூர்-610 001. திருவாரூர் மாவட்டம். போன்: +91 – 4366 – 228 033.
இறைவன்
இறைவன்: பசுபதீஸ்வரர், இறைவி: சாந்தி நாயகி
அறிமுகம்
திருக்கண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், திருக்கண்டீஸ்வரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயிலில் பசுபதீஸ்வரர், சாந்தநாயகி சன்னதிகளும், விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் ஜுரஹரேஸ்வரர் துர்க்கை உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
சிவபெருமான், தன்னை பூமியில் உள்ள மனிதர்கள் வழிபட்டு மேன்மை அடைய வேண்டும் என்பதற்காக வில்வாரண்யத்தில் மறைந்திருந்தார். அன்னை பார்வதி பசுவடிவெடுத்து இத்தலத்தை தன் கொம்பால் கீறிய போது அங்கு மறைந்து இருந்த இறைவனின் தலையில் கொம்பு பட்டு ரத்தம் வடிந்தது. அதைக்கண்ட பசு, லிங்க வடிவில் இருந்த இறைவனின் தலையில் பால் சொரிந்து காயத்தை ஆற்றி வழிபட்டது. பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் லிங்கத்தில் நாம் காணலாம்.
நம்பிக்கைகள்
திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் உள்ள ஜேஷ்டா தேவியை வழிபாடு செய்கின்றனர். சுவாமி மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் மூன்று தலைகள், மூன்று கால்களுடன் ஜுரஹரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து, அன்னத்துடன் மிளகுரசம் வைத்து வழிபட்டால் பரிபூரண குணமாகிவிடுகிறது.
சிறப்பு அம்சங்கள்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம். பழைய கோயில் புதுப்பித்து திருப்பணி செய்யப்பட்டுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 135 வது தேவாரத்தலம் ஆகும். காமதேனு வழிபட்ட தலம். “கொண்டி’ என்றால் “துஷ்ட மாடு’ என்று பொருள். கொண்டி வழிபட்டதால் இத்தலம் “கொண்டீஸ்வரம்’ என அழைக்கப்படுகிறது. அம்பாள் சன்னதிக்கும், சுவாமி சன்னதிக்கும் இடையில் வெள்ளைக்கல்லால் செய்யப்பட்ட மிகப்பழமையான “ஜேஷ்டாதேவி’ அருள்பாலிக்கிறாள். ஜேஷ்டா என்றால் மூதேவி என்று அர்த்தம். இத்தலத்தில் ஜேஷ்டாதேவி அனுக்கிரக தேவதையாக இருக்கிறாள். ஜேஷ்டாதேவி எனப்படும் தெய்வம் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் காணப்படுவாள். ஸ்ரீதேவியான (சீதேவி) லட்சுமியின் சகோதரியான இவள் மூதேவி (மூத்ததேவி) என்றும் சொல்லப்படுவாள். இவளை யாரும் தரிசிப்பதில்லை. ஆனால், இவள் வழிபாட்டுக்கு உரியவள். சோம்பல் இல்லாத சுறுசுறுப்பான வாழ்வைத் தர வேண்டும் என இவளிடம் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு அனுக்கிரகம் அருளும் மூர்த்தியாக இவள் அருள்பாலிக்கிறாள்.
திருவிழாக்கள்
கார்த்திகை மாதம் வியாழக்கிழமை எமகண்ட நேரத்தில் இறைவன் தீர்த்த வாரி வழங்குவார். இதில் பங்குகொள்பவர்களின் பாவம் நீங்கி சுக வாழ்வு அமையும் என்பது ஐதீகம்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்துசமயஅறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருக்கண்டீஸ்வரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி