திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தநாராயண பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தநாராயண பெருமாள் திருக்கோயில், 3/181, பெருமாள் கோயில் வீதி, திருக்கடையூர் 609 311. நாகப்பட்டினம் மாவட்டம். போன் 04364- 287174 மொபைல் 94439 86202
இறைவன்
இறைவன்: ஸ்ரீ அமிர்தநாராயணர் இறைவி: ஸ்ரீ அமிர்தவள்ளியம்பிகை
அறிமுகம்
மயிலாடுதுறை- தரங்கம்பாடி செல்லும் பேருந்து தடத்தில் (ஆக்கூர் வழியாக) மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் திருக்கடையூர் அமைந்துள்ளது. கடத்தில் இருந்த அமிர்தம் சிவலிங்கம் ஆனதால், ஊர் திருக்கடவூர் ஆனது. இன்றைய பெயர் திருக்கடையூர். ஊரில் பிரதானமாக இருக்கிறது சிவ ஸ்தலம். இதே சிவ ஸ்தலத்தில் இருந்து சுமார் ஐந்தே நிமிட நடை தூரத்தில் தென்புறமாக இருக்கிறது, அமிர்தநாராயண பெருமாள் ஆலயம். இந்த ஆலயத்துக்கு நேர் எதிரே சுமார் 5 கி.மீ. தொலைவில், அமிர்தம் கடைந்த திருப்பாற்கடல் (வங்கக் கடல்). அமிர்தகடேஸ்வரர் ஆலயத்துக்கு மிக அருகில் இருந்தும் இந்த அமிர்தநாராயண பெருமாளை வணங்கிச் செல்ல எவரும் இங்கு வருவதில்லை. ”ஸ்தல புராணத்தின்படி அமிர்தகடேஸ்வரரை தரிசித்தவர்கள் இங்கு வந்து அமிர்தநாராயண பெருமாளையும், உடன் உறையும் அமிர்தவள்ளித் தாயாரையும் வணங்கினால்தான் பிரார்த்தனை நிறைவடையும். அமிர்தநாராயண பெருமாள் ஆலயத்தின் இன்றைய நிலைமை மிகவும் பரிதாபம்.ஒட்டுக் கட்டடத்தில் இருக்க வேண்டியவர் ஓலைக் குடிசையில் இருக்கிறார். ஆலயம் சிதிலமாகி சுமார் இருபது வருடம் மேலாகிறது. ஆலயத்துக்கு அருகே வைஷ்ணவ அக்ரஹாரம் ஒரு காலத்தில் இருந்தது. எல்லா உற்சவங்களும் கோலாகலமா கக் கொண்டாடப்பட்ட கோயில்தான் இது. பெரு மாளின் மண்டபம் மெள்ள மெள்ள இடிந்து கற்கள் ஒவ்வொன்றாக விழ ஆரம்பித்தன. ஒரு கட்டத் தில் முற்றிலுமாகவே சிதிலமடைந்து விழுந்து விட்டன. அதே போல் போன வருடம் ஐப்பசியில் பெய்த அடைமழை காரணமாக தாயார் சந்நிதி (கருவறை) இடிந்து விழுந்து விட்டது. கருடாழ்வார் மண்டபம், மதில் சுவர்கள், பிற சந்நிதிகள் ஆகிய எதுவுமே இன்று இல்லை. எல்லாமே இடிந்து விட்டன. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில், பல நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது.
புராண முக்கியத்துவம்
தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தனர். அசுரர்களை ஏமாற்றி விஷ்ணு அதை ஒரு கலசத்தில் வைத்தார். மீண்டும் கலசத்தை திறந்த போது அமிர்தம் சிவலிங்கமாக இருந்தது. பார்வதிதேவியின் அருள் இல்லாததால் தான் இவ்வாறு மாற்றம் ஏற்பட்டதாக விஷ்ணு கருதினார். தனது மார்பில் அணிந்திருந்த திருவாபரணங்களை கழற்றி, அவற்றைப் பார்வதிதேவியாகக் கருதி பூஜித்தார். அப்போது அம்பாள் ஆபரணவல்லி அல்லது அபிராமி என்ற திருநாமத்துடன் அங்கு தோன்றி, அமிர்தம் கிடைக்க அருள்பாலித்தாள். அமிர்தத்தை தேவர்களுக்கு விஷ்ணு பங்கிட்டு கொடுத்தார்.இதனை அறிந்த ஒரு அசுரன், தேவரைப் போல வடிவம் தாங்கி அமிர்தத்தை பருகினான். சாகாவரமும் தேவபலமும் பெற்றான். அவனை வெட்டினார் விஷ்ணு. அமிர்தம் பருகியதால் அவனுக்கு உயிர் போகவில்லை. துண்டான உடல்கள் ராகு, கேது என்ற பெயர் பெற்று, நவக்கிரக மண்டலத்தில் இணைந்தனர். அபிராமி அம்மையின் தோற்றத்திற்கும், தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க காரணமான விஷ்ணு திருக்கடையூரில் அமிர்த நாராயண பெருமாள் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பிரமாண்டமான நிலப்பரப்புக்கு நடுவே அமிர்தநாராயண பெருமாள் வீற்றிருக்கிறார். சுமார் ஆறடி உயரத்தில் அழகு ததும்பும் அற்புத வடிவம். அமர்ந்த நிலையில் இந்த சங்கு சக்கரதாரி, வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் கோலத்தில் காணப்படுகிறார். அருகே ஸ்ரீதேவி மற்றும் பூதேவித் தாயார்கள். இந்த மூவரின் முகத்திலும் காணப்படும் புன்முறுவல், கொள்ளை அழகு. அணி களும் ஆபரணங்களும் துலங்கும் வகையில் இந்த விக்கிரகங்களை வடித்த சிற்பி, சிரமேற்கொண்டுதான் இவற்றைச் செய்து முடித்துள்ளார் என்று தோன்றுகிறது. இடிபாடுகள் காரணமாக பெருமா ளுக்கு அருகிலேயே ஸ்ரீஆஞ்சநேயர், சேனை முதலியார், ராமானுஜர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரின் சிலா விக்கிரகங்கள் தரிசனம் தருகின்றன. பெருமாள் சந்நிதிக்கு எதிரே கருடாழ்வார். ராகு, கேது ஆகியோர் இங்கு அவதரித்ததால் அந்த தோஷம் உள்ள வர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொண்டு, அமிர்த நாராயண பெருமாளை வணங்குவது விசேஷம் என்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்
இராகு கேது கிரஹ மண்டலத்தில் அறியப்பட காரணமான தலம், அபிராமி அம்மன் விஷ்ணுவின் மார்ப்பு அங்கியிலிருந்து தோன்றிய தலம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருக்கடையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி