Monday Nov 25, 2024

தவளகிரி தண்டாயுதபாணி திருக்கோயில், ஈரோடு

முகவரி :

தவளகிரி தண்டாயுதபாணி திருக்கோயில்,

தவளகிரி, சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் – 638503

இறைவன்:

தவளகிரி தண்டாயுதபாணி

அறிமுகம்:

பழனிக்கு நிகரான தவளகிரி முருகன் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து இரு 3 முதல் 4 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது தவளகிரி முருகன் திருக்கோயில். குன்று இருக்கும் இடத்தில் குமரன் இருப்பான் என்ற பழமொழிக்கேற்ப இந்த மலைக் குன்றில் வீற்றிருக்கும் முருகன் மிகவும் சக்தி வாய்ந்தவராக விளங்குகிறார். இத்தலத்து முருகனை தவளகிரி தண்டாயுதபாணி என்ற நாமத்துடன் விளங்கினாலும், மலைக்கோயில் என்றால் மிகவும் பிரசித்தி. இத்திருக்கோவிலிருக்கு இரண்டுவிதமான வழிகள் உள்ளன, படிக்கட்டு வழியாகவும் திருக்கோவிலை அடையலாம். முடியாதவர்கள் வாகனங்களில் செல்லும் சாலை வசதியும் உள்ளது. கோவில் வடிவமைப்பு, இயற்கை, குன்றின் சிறு உயரம், இட வசதி, தண்ணீர் வசதி, அமைதி, கோவிலைச் சுற்றி இருந்த பிரகாரம் என்று அனைத்துமே அற்புதமாக திகழ்கிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து கொடிவேரி செல்லும் பேருந்தில் பயணித்து மலைக்கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் கோயில் அடிவாரத்தை அடையலாம். சத்தியமங்கலத்திலிருந்து பேருந்து வசதி மட்டுமின்றி ஷேர் ஆட்டோ போன்ற பல்வேறு வாகன வசகதிகள் உள்ளன.

புராண முக்கியத்துவம் :

துர்வாசர் பிரதிஷ்டை செய்த தலம்:

இத்தலத்தில் வீற்றிருக்கும் முருகனைப் பற்றிய வரலாறு மிகவும் சுவாரசியமானது.
துர்வாச முனிவர் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரரை தரிசித்து விட்டு சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் சிருங்கேரிக்கு நடைப்பயணமாக சென்று கொண்டிருந்தார். அப்போது பவானி நதியினை அவர் கடக்கும் போது வெள்ளம் அதிகரித்தது. திடீரென பெருகிய ஆற்று வெள்ளத்தில் அவர் சிக்கித் தத்தளித்தபோது மயில் ஒன்று பறந்து வந்து ஒரு குன்றின் மீது அமர்ந்துள்ளது.
முருகப் பெருமானே ஏதோ ஒரு அறிவிப்பைச் செய்கிறார் என்று உணர்ந்தார் துர்வாசர்.

உடனே மெய்சிலிர்த்து நீந்தியபடியே கரைக்கு வந்து குன்றின் அடிவாரத்தை அடைந்தார். ஆற்றில் வெள்ளம் பெருகியபோது முருகனே மயில் மூலமாக அருகில் குன்று இருப்பதை உணர்த்தியதோடு மனம் தளராத தைரியத்தையும் தனக்குக் கொடுத்துள்ளார் என்பதை உணர்ந்து, அந்த நன்றிக்கடனாக மலையின் உச்சியில் முருகப் பெருமானுக்கு அழகிய சிலை வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.

செழிப்படைய வைத்த முருகன்:

முருகன் அருளால் இந்தப் பகுதி முழுவதும் விவசாயம் செழிப்புடன் விளங்கியது. இதனால் மக்களின் வாழ்க்கையும் மேன்மையடைந்தது. மக்களிடையே அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரித்த வண்ணம் நிம்மதியான வாழ்வு கிடைத்துவந்தது. இந்த செழிப்பிற்கு காரணமான முருகனுக்கு சிறப்பு செய்யும் விதமாக திப்புசுல்தான் தனது படைத்தளபதிகளில் ஒருவரின் வேண்டுகோளினை ஏற்று இந்த தண்டாயுதபாணி சுவாமிக்கு கர்ப்பகிரகம் கட்டித் தந்ததாக செவிவழிச் செய்தி உண்டு.

வெண்ணிறப் பாறைகளைக் கொண்ட தவளகிரி மலை ஏறிச் செல்ல 270 படிகள் கொண்ட பாதையும், வாகனங்கள் செல்ல தார்ச் சாலையும் உள்ளன. இருந்தாலும் பெரும்பாலான பக்தர்கள் வாகனங்களை மலையடிவாரத்தில் நிறுத்தி விட்டு, அங்கேயே மேற்கு நோக்கி நாகருடன் வீற்றிருக்கும் விநாயகரை முதலில் தரிசிக்கின்றனர். படிக்கட்டுகள் வழியே சென்றால் கூடுதல் பலன் உண்டு. மலைக்கு நடுவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் இடும்பக் குமரன் அருள் பெற முடியும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். இடும்பக் குமரனை தரிசித்த பின்னர் மேற்கு நோக்கிப் பார்த்தால் பவானி நதி பாய்ந்து வரும்.

நம்பிக்கைகள்:

      முருகனை வேண்டி நல்ல பலனை அடைவதுடன் மன நிம்மதி தேடும் அன்பர்களுக்கு இத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்த தலமாகும்.மலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பாலதண்டாயுதபாணிக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தக் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இந்த அழகுமிக்க காவடி ஆட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒளி விழும் தருணத்தில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. அதில் கலந்து கொண்டால் முருகப்பெருமானின் ஆசியோடு, சூரியபகவானின் அருளும் நமக்குக் கிட்டும் என்பது ஐதீகம். விசேஷ தினங்களில் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக பூஜையினை கண்குளிர கண்டால் மனம் அமைதியாகி தியான நிலையினை அடைந்து புத்துணர்ச்சி பெறுவதாக பக்தர்கள் பக்தி உணர்வோடு கூறுகின்றனர்.

பட்டுப்பாவாடை சாத்தினால் திருமணத்தடை நீங்கும்:

இத்தலத்துக்கு இன்னுமொரு சிறப்பு என்ன வென்றால், திருமணத் தடையுள்ள கன்னிப் பெண்கள் வள்ளிக்கும், தெய்வானைக்கும் பட்டுப் பாவாடை சாத்தி மன முருக வேண்டிக் கொண்டால் அந்தத் தடை நீங்குவதாக ஐதீகம். இந்த இரு சந்நதிகளும் தண்டாயுதபாணி சுவாமி சந்நதிக்குக் கீழ் பகுதியில் அமைந்துள்ளன.

கன்னிப்பெண்களாக வள்ளி தெய்வானை:

முருகனை தரிசிக்க செல்லும் படிகளேறிச் சென்றால் தனித்தனி சந்நதிகளில் பால விநாயகரும், வள்ளிதெய்வானையும் கிழக்கு நோக்கி அருளுகின்றனர். வள்ளி, தெய்வானை இருவரும் முருகனை அடைய வேண்டும் என்ற நோக்கில் கன்னிப் பெண்களாக தவக்கோலத்தில் காட்சி தருவது கூடுதல் சிறப்பு. வேறு எந்த தலத்திலும் வள்ளியும் தெய்வானையும் கன்னிப்பெண்களாக தவக்கோலத்தில் காட்சி தருவதில்லை. தவ வாழ்க்கை மேற்கொள்ள விரும்புபவர்கள் இத்தலத்திலிருந்து தவ வாழ்க்கையை துவங்கினால் சிறப்பு.

சிறப்பு அம்சங்கள்:

             சித்திரை மாதம் முதல் மூன்று தினங்களில் சூரியன் மறையும் முன்னர் முதல்நாள் மூலவர் பாலதண்டாயுதபாணியின் பாதத்திலும், இரண்டாவது நாள் அவரது மார்பிலும், மூன்றாவது நாள் முகத்தின் மீதும் ஒளிபடுவதால் இவர் சூரியனால் வழிபடப்படும் முருகன் என்ற சிறப்பையும் பெறுகிறார். 

மேல்பகுதியில் மூலவர் வீற்றிருக்கும் சந்நதியின் கருவறையில் தண்டாயுதபாணி சுவாமி சத்தியமங்கல நகரத்தை நோக்கி மேற்கு பார்த்தவாறு வலது கையில் தண்டாயுதமும், இடது கையினை இடுப்பில் வைத்தும் அழகு ததும்ப காட்சி தருகிறார். இவரின் இடது கை சுண்டு விரலில் தர்ஜனி மோதிரம் உள்ளது. இது மிகவும் விசேஷம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.’தர்ஜனி’ என்பதற்கு சம்ஸ்கிருதத்தில் ஒருவனது ஞானம், கல்வி, திறமை ஆகியவற்றை குறிப்பிடுகிறது.

பழனிக்கு நிகரான தலம்: இடது கையில் வேல் ஏந்தியுள்ளார். அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடான பழனியில் முருகர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிப்பதும், அங்கு வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கி சண்முகநதி பாய்வதும் போல் இங்கும் தண்டாயுதபாணி மேற்கு நோக்கியுள்ளார், பவானி நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. இதனால் பழனி சென்ற பலனை இத்தலத்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்தால் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கருவறையை தொடர்ந்து அர்த்த மண்டபம், மகா மண்டபம் அமைந்துள்ளன. மகா மண்டபத்தில் தன் அலகில் நாகத்தைப் பற்றிய மயில் மற்றும் பலிபீடம் அமைந்துள்ளன.

திருவிழாக்கள்:

      கிருத்திகை, சஷ்டி காலங்களில் காலை மற்றும் மாலை விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. பௌர்ணமி தோறும் சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் செய்யப்படுகின்றன. அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடக்கின்றன. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அன்று மங்கள வார பூஜையும், வெள்ளிக்கிழமை நாட்களில் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள், தீபாராதனைகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் முதல் நாள், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை மற்றும் கார்த்திகை மாத கிருத்திகை ஆகிய விசேஷங்கள் விழாபோல் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தைபூசத் திருநாள் இங்கே ஒரு பெருவிழாவாகும். அன்றைய தினம் ஆறு கால பூஜைகள், விசேஷ அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் தீபாராதனைகளுடன் அமர்க்களமாக நடைபெறுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தவளகிரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஈரோடு

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top