சோலைமலை (பழமுதிர்ச்சோலை), அழகர்கோவில்

முகவரி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை (பழமுதிர்ச்சோலை), அழகர்கோவில்- 625301. மதுரை மாவட்டம். தொலைபேசி எண் : 0452-247 0228
இறைவன்
இறைவன்: முருகன்
அறிமுகம்
பழமுதிர்சோலை முருகன் கோயில், முருகனின் அறுபடை வீடுகளில், இத்தலம் ஆறாம் படை வீடு ஆகும், மதுரை மாவட்டம், அழகர் கோவில் மலை மீதுள்ள பழமுதிர்சோலையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அடியவர்களுக்கு அருள் செய்கிறார். இங்கு முருகனின் 3 அடி உயர வேலுக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவில் முற்காலத்தில் சோலைமலை என அழைக்கப்பட்டது. மேலும் இந்தத் தலத்திற்கு பெருமை தருவது அவ்வையார் பாட்டிக்கு முருகப்பெருமான் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு பழத்தில் எப்படி சுட்டபழம், சுடாத பழம் உண்டு என்பதை அனுபவ பூர்வமாக உணர்த்திக் காட்டிய உன்னதமான தலம் இதுவாகும். இந்த தலத்தின் தல மரமாக இருப்பது நாவல் மரம் ஆகும். இத்தலத்தில் முன்னர் முருக வேல் மட்டுமே இங்கு இருந்ததாகவும், பின்னர் முருகன்–வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதி உருவாகியது என்பர். நக்கீரர், அருணகிரி நாதர், அவ்வையார் ஆகியோர் முருகனை துதித்துப் பாடிய பெருமை வாய்ந்த தலமாகும். சோலை மலையிலிருந்து சிறிது தொலைவில் ராக்காயி அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் உள்ள சுனையில் பெருக்கெடுக்கும் தீர்த்தம் மிகவும் சுவையாக உள்ளது. இதை நூபுர கங்கை என்றும் கூறுகின்றனர்.
புராண முக்கியத்துவம்
அவ்வைக்கிழவியிடம்,” சுட்ட பழம் வேண்டுமா?சுடாத பழம் வேண்டுமா?,” என்று சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோயில் கொண்டிருக்கிறார். தமிழ்பாட்டி அவ்வையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். முருகன் அவ்வைக்கு அருள் புரிந்து, இந்தஉலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார்.ஒரு முறை அவ்வை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது நிலையறிந்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, அவ்வை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார். களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, “”என்ன பாட்டி! மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பை போக்க நாவல் பழங்கள் வேண்டுமா?” என்றான். சந்தோஷப்பட்ட பாட்டி “”வேண்டும்”என்றார்.உடனே முருகன்,””பாட்டி! தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?”என்றான். இதனைக்கேட்டு திகைப்படைந்த பாட்டி ஏதும் புரியாமல்,””சுட்ட பழத்தையே கொடேன்”என்றார்.சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. அவ்வை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன்,””பாட்டி! பழம் மிகவும் சுடுகின்றதோ?, ஆறியவுடன் சாப்பிடுங்கள்”என்று கூறி சிரித்தான். உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர் இவர்.
திருவிழாக்கள்
தமிழ்வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி கார்த்திகை, ஆவணி பூரத்தில் வருஷாபிஷேகம், கந்தசஷ்டி, கார்த்திகை சோமவாரம்,திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அழகர்கோவில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை