Friday Nov 22, 2024

சின்னாண்டி விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி :

அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில்,

சின்னாண்டி,

சென்னை மாவட்டம் – 600118.

இறைவன்:

ஜயநாதகேஸ்வரர்

இறைவி:

விஜயநாயகி அம்மன்

அறிமுகம்:

சென்னை, கவிஞர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் கடும்பாடி அம்மன் கோயில் தெருவில் இச்சிவாலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் விஜயநாதகேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். இறைவி விஜயநாயகி அம்மன் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கிய திசையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள்.

புராண முக்கியத்துவம் :

சென்னை, கவிஞர் கண்ணதாசன் நகருக்கு, அருகில் அமைந்துள்ள சின்னாண்டி மடம் ஒரு காலத்தில் தென்னந்தோப்பு, வயல்கள் சூழ்ந்த அழகிய கிராமம். ஊரின் பெயர்க் காரணத்தைக் கேட்டால், அக்காலத்தில் சிவனடியார்கள் அதிகம் பேர் இப்பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும்; அதனால் சிவனாண்டி மடம் என அழைக்கப்பட்டு பின்னர் சின்னாண்டி மடம் என மருவியது. சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் இங்கு புதர் மண்டிக்கிடந்த இடத்தில் பூமியில் பாதி புதையுண்ட நிலையில் மூலவர் விஜயநாதகேஸ்வரரும், நந்தியும் கண்டெடுக்கப்பட்டது. ஆகம விதிப்படி ஆலயம் அமைக்கப்பட்டு அதன்பின் மற்ற சன்னதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

நம்பிக்கைகள்:

ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் விஜயநாதகேஸ்வரரை மனமுருகி வழிபட்டால் அவர்களது ஆரோக்கியம் மேம்படுகிறது. குறிப்பாக இதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பலர் இவரை வணங்கி நற்பலன் பெற்றுள்ளனர்.

சிறப்பு அம்சங்கள்:

கோயில் நுழைவு வாயிலின் முகப்பில் ரிஷப வாகனத்தில் அமர்ந்த நிலையில் சுவாமியும் அம்பாளும்; அவர்களுக்கு இருபுறமும் விநாயகரும், முருகனும் காட்சி தருகின்றனர். முன்மண்டபத்தில் பலிபீடம், நந்திகேஸ்வரரும், அர்த்த மண்டபத்தின் இருபுறமும் விநாயகப் பெருமானும், முருகப்பெருமானும் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் மற்றும் நடராஜர் – சிவகாமி அம்மையாரின் உற்சவ விக்ரகங்கள் இடம் பெற்றுள்ளன.

அதையடுத்து கருங்கல்லாலான கருவறையின் உள்ளே மூலவர் விஜயநாதகேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவ்வாலயத்தின் இறைவி விஜயநாயகி அம்மன் தனிச் சன்னதியில் தெற்கு நோக்கி தரிசனம் அளிக்கிறாள். அவளுக்கு முன்பாக பலிபீடமும் சிம்மவாகனமும் உள்ளன. கோஷ்டத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி அருள்கின்றனர். அக்னி மூலையில் நவகிரக சன்னதி அமைந்துள்ளது. அதில் குருபகவான், விஜயநாயகி அம்மனை நோக்கியவாறு காட்சி தருவது தனிச் சிறப்பாகும். ஈசான்ய மூலையில் கால பைரவருக்கும் தனிச் சன்னதி உள்ளது.

திருவிழாக்கள்:

                குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சியின் போது சிறப்பு பரிகார பூஜைகள், மகாசிவராத்திரி விழா, ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், காலபைரவாஷ்டமி, கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம், புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் எனப் பல்வேறு விசேஷங்கள் நடைபெறுகின்றன.

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கவிஞர் கண்ணதாசன் நகர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வியாசர்பாடி

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top