சமணர் மலைக்கோவில், மதுரை
முகவரி
சமணர் மலைக்கோவில், கீழக்குயில்குடி கிராமம், மதுரை மாவட்டம் – 625 019.
இறைவன்
இறைவன்: தீர்த்தங்கரர்
அறிமுகம்
சமணர் மலை மதுரையில் இருந்து 12கி.மீ தொலைவில் மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகமலை புதுக்கோட்டைக்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு குன்று ஆகும். இது கீழக்குயில்குடி ஊராட்சியில் உள்ள கீழக்குயில்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழிக் கல்வெட்டுக்களும், சமண படுகை சமணப்படுகைகளும், சமணச் சிற்பங்களும் காணப்படுகின்றன. இந்த மலையில் இயற்கையாக அமைந்த ஒரு சுனை உள்ளது.இந்த சுனையே பேச்சிப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது.பேச்சிப்பள்ளத்திற்கு சற்று மேலே உள்ள இடத்தில் கி.பி.10 ஆம் நூற்றாண்டில் செயல்பட்ட மாதேவிப் பெரும்பள்ளி என்னும் சமணப்பள்ளியின் அடித்தளம் மட்டும் காணப்படுகிறது. அதில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு மூலம் பராந்தக வீரநாராயணன் (கி.பி.860-905) என்னும் பாண்டிய மன்னன் தன் மனைவி வானவன் மாதேவியின் பெயரால் இப்பள்ளியைக் கட்டியுள்ளது புலனாகிறது.
புராண முக்கியத்துவம்
சமணர் மலையின் தென்மேற்கு பகுதியில் சிற்பங்களுடன் கூடிய குகை ஒன்று காணப்படுகிறது. இந்த குகையின் இடதுபுற பாறை முகப்பில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள அழகிய முக்குடை அண்ணலின் (மகாவீரர்) காதுநீண்ட உருவம் ஒரு செட்டியாரைப் போல் தோற்றமளிக்கிற காரணத்தால் செட்டிப்புடவு என அழைக்கப்படுகிறது. இச்சிற்பத்தில் மகாவீரர், இருபுறமும் சாமரம் வீசுபவர்கள் சூழ, முக்குடைக்கு மேலே வானவர்கள் பறந்துவர, அரசமரத்தின்கீழ், மூன்று சிம்மங்கள் தாங்கும் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அதன் கீழே இச்சிற்பத்தை செய்து கொடுத்தவரைப் பற்றிய வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. வடமாநிலங்களில்கூட இப்படி முழுமையான மகாவீரர் சிற்பம் படைக்கப்பட்டது கிடையாது. இந்த மலையில் இயற்கையாக அமைந்த ஒரு சுனை உள்ளது. இந்த சுனையே பேச்சிப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது. பேச்சிப்பள்ளத்தில் எட்டு தீர்த்தங்கரர் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுக்களாக செதுக்கியவர் பெயர்களும் உள்ளன. இங்கு பாகுபலி (கோமதேஸ்வரர்), பார்சுவநாதர், முக்குடைநாதர் சிற்பங்கள் உள்ளன. அச்சணந்தி முனிவரின் தாயார், இங்கு செயல்பட்ட பள்ளியின் தலைவர் குணசேனதேவர், குறண்டி திருக்காட்டாம் பள்ளியைச் சேர்ந்தோர் முதலியோர் இச்சிற்பங்களைச் செய்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆனால் சிலர் இந்த சிற்பங்களை சிதைத்து உள்ளனர். மாதேவிப் பெரும்பள்ளியின் அடித்தளம் அமைந்துள்ள பகுதியிலிருந்து மலையேறிச் சென்றால், கிழக்கிலிருந்து தெற்காக செல்லும் சரிந்து நீண்ட ஏற்றத்தின் உச்சியில் ஒரு தீபத்தூணை வைத்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். அதன் கீழே கன்னடக் கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டுள்ளன.இந்த கல்வெட்டுகள் அனைத்தும் கர்நாடகா வில் உள்ள சிரவணபெளகொள பகுதியிலிருந்து வந்து சென்ற சமணத்துறவிகளின் பெயர்களாக இருக்கலாம். இரண்டாம் கல்வெட்டு மட்டும் தமிழிலும் மற்றவை கன்னடத்திலும் உள்ளன.
காலம்
9 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழக்குயில்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை