கோமதி அம்பாள் சமேத கந்தருவரீஸ்வரர் என்ற அங்குண்டீசுரமுடைய நயினார்’ ஆலயம், திருநெல்வேலி
முகவரி
கோமதி அம்பாள் சமேத கந்தருவரீஸ்வரர் என்ற அங்குண்டீசுரமுடைய நயினார்’ ஆலயம், நயினார் குளம், திருநெல்வேலி மாவட்டம் – 627452.
இறைவன்
இறைவன்: கந்தருவரீஸ்வரர் என்ற அங்குண்டீஸ்ரமுடையார் இறைவி : கோமதி அம்பாள்
அறிமுகம்
இந்த ஆலயம் திருநெல்வேலி புதிய பஸ்நிலையத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாளையங்கோட்டை – சேரன்மகாதேவி சாலையில் மேலச்செவல் என்னும் இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் நயினார் குளம் என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரின் தாமிர பரணி ஆற்றங்கரையில் இந்த ஆலயம் உள்ளது. தாமிரபரணி நதி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஓடிய, தன் பாதையை மாற்றி கொண்டுள்ளது. அப்படி தன் போக்கை மாற்றிய வேளையில், பல ஆலயங்கள் நதிக்குள் மூழ்கி புதைந் திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அப்படி புதைந்து போன ஆலயங்கள் ஒரு கட்டத்தில் வெளிப்பட்டால், அதற்கு காரணம், அந்த ஆலயத்தின் பெருமையும், எல்லாம்வல்ல இறைவனின் அருள் செயலும்தான் என்பதை மறுக்க முடியாது. அப்படியொரு அருள்செயல் சுத்தமல்லி தாமிர பரணி ஆற்றுப்பகுதியில் நடந்துள்ளது. அங்கு வெளிப்பட்ட பழமையான ஆலயம், ‘கோமதி அம்பாள் சமேத கந்தருவரீஸ்வரர் என்ற அங்குண்டீசுரமுடைய நயினார்’ ஆலயம் ஆகும். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த திருத்தலத்தில் 18 சித்தர்கள், முனிவர்கள், தேவர்கள் வழிபட்டுள்ளனர். குலசேகர ஆழ்வார், முதலாம் குலோத்துங்கன், வீரமார்த்தாண்டவர்மன், பராக்கிரம பாண்டியன், கொல்லங்கொண்ட உடையான் போன்ற மன்னர்கள் இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்துள்ளனர். அப்படிப்பட்ட இந்த ஆலயம் காலத்தின் மாற்றத்தினால் சிதிலமடைந்துள்ளது. அந்தக் காலத்தில் மாதம் மும்மாரி பொழிந்த மழையால், தாமிரபரணி ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகத் தாமிரபரணி இருபிரிவாகப் பிரிந்து செல்லும் சித்தர் காடு பகுதி நீருக்குள் மூழ்கியது. அப்போது கரையில் இருந்த சித்தீஸ்வரமுடையார் நயினார் என்ற அங்குண்டீஸ்வரர் கோவில் மணலில் புதைந்தது. அந்த இடத்தைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்து விட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் சில ஆண்டு களுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக, சுத்தமல்லி பகுதியில் இருந்த தாமிரபரணி தண்ணீர் இன்றி வறண்டது. தொடர்ந்து அங்கு மணல் அள்ளப்பட்டதால் சுமார் 8 அடி ஆழத்தில் புதையுண்டிருந்த சித்தீஸ்வரர் கோவில், 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தென்பட்டது. அந்த பகுதி மக்கள், அடியார்களின் நடவடிக்கையால் மணல் குவியல் அகற்றப்பட்டு, ஆலயத்தின் முழு வடிவமும் வெளியே தெரிந்தது. ஆலயத்தின் கருவறையில் சிவலிங்கம் உள்ளது. அதைச் சுற்றி தண்ணீர் நிறைந்துள்ளது. இந்த நிலை எப்போதுமே கயிலாய மலையில் சிவன் குளிர்ச்சியாக இருப்பது போலவே விளங்குகிறது. இங்கு அம்பாள் இல்லை. ஆற்றில் வெள்ளத்தில் சிலை அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது சுவாமிக்கு மட்டும் தினமும் பூஜை நடக்கிறது. தாமிரபரணி ஆற்றின் உள்ளே இருக்கும் சிவாலயம், ‘ஆதி தலம்’ ஆகும். இந்த ஆலயம் தண்ணீருக்குள் மூழ்கிய வேளையில், தென் புறத்தில் ஒரு ஆலயம் அமைத்து சிவனை பூஜித்து வந்துள்ளார்கள். அந்த ஆலயம் தற்போதும் உள்ளது. அதே போல் கந்தர்வன் வழிபட்ட ஆலயம் வடகரையில் உள்ளது. ஒரேஇடத்தில் ஆற்றின் நடுவிலும், ஆற்றின் இருகரையிலும் ஒரே திருநாமத்தில் மூன்று கோவில்கள் அமைந்திருக்கும் அற்புத தலமாக இந்த இடம் போற்றப்படுகிறது. இந்த மூன்று ஆலயத்தையும் ஒரு சேர வணங்குவது சிறப்பானது.
புராண முக்கியத்துவம்
ஒரு சமயம் சரஸ்வதி தேவிக்கு, துர்வாச முனிவரால் சாபம் உண்டானது. அந்த சாபம் நீங்க, பிரம்மனுடன் சரஸ்வதி தேவி சித்தர்காட்டிற்கு தவம் செய்ய வந்தாள். அவள் பூஜிப்பதற்காக மாணிக்க லிங்கம் ஒன்றை, தேவ சிற்பியான விஸ்வகர்மா வடிவமைத்தார். அந்த லிங்கம் அங்கிருந்த பாறை மீது சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்தது. சித்தர்காட்டில் உருவான அந்த லிங்கத்திற்கு ‘சித்தீஸ் வரர்’ என்று பெயர். ஆரம்ப காலத்தில் இந்த ஈசனை அகத்தியர் வழிபட்டு வந்துள்ளார். அவர் உலகை சமன் செய்ய பொதிகை மலை வந்தார். அங்கு கயிலைநாதனான சிவபெருமானை வணங்க ஆவலாய் இருந்தார். ஒவ்வொரு நாளும் தீர்த்த யாத்திரையாக தாமிரபரணி ஆற்றங்கரைக்கு சென்று வந்தார். அப்போது இந்த இடத்தில் நின்றபடி “ஈசனே நான் உம்மை கயிலாயமலையில் உள்ள படியே பூஜிக்க வேண்டும்” என்று வேண்டினார். அப்போது சரஸ்வதிதேவி பூஜை செய்த இறைவன், அகத்தியருக்கு காட்சியளித்தார். உடனே அகத்தியர் “இறைவா! தாங்கள் கயிலாயநாதர். பனிபடர்ந்த மலையில் குளர்ச்சியாக வாழ்பவர். இங்கேயும் நீங்கள் தான் தோன்றினீர்களா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அப்போது “அங்கு (கயிலாயம்) நான் உண்டு என்றால், இங்கும் உண்டு” ஒரு அசரீரி வாக்கு கேட்டது. எனவே இந்த இறைவனுக்கு ‘அங்குண்டீஸ்வரர்’ என்று அகத்தியர் பெயரிட்டு வணங்கினார். பரணி நட்சத்திரத்தில் கூடிய நன்னாளில் ஆதிசங்கரர் இத்தலத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்து மீன- பரணி வைபவத்தைக் கொண்டாடி ஆனந்தம் அடைந்துள்ளார். ஸ்ரீசக்ர நாயகி அன்னை ஸ்ரீ மாதா, இங்கு ஈசனைப் பூஜித்துக் கொண்டிருக்கிறாள் என்பது ஐதீகம். பதினெண் சித்தர்களும், இதற்கு முன் வாழ்ந்த ஸ்ரீ சந்தானு மகானு பாவுலு சித்தரும் தங்களது மருத்துவ ஆராய்ச்சியைத் தொடங்கு வதற்கு முன்பாக, இத்தல சித்தீஸ்வரரை வணங்கி, அந்த சக்தி முழுவதையும் இந்த ஆலயத்திலேயே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். எனவே இந்த இறைவன் ‘ஆதி மருந்தீஸ்வரர்’ என்றும் திருநாமம் கொண்டுள்ளார். காலங்கள் கடந்தது. தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது கருவூர் சித்தர் பல சிவன் கோவில்களில் வழிபாடு செய்து விட்டு, சித்தீஸ்வரரை தரிசிக்க வந்தார். சுத்தமல்லியில் உள்ள தவணை தீர்த்தக் கட்டத்தில் நின்றபடியே சிவனை பாா்த்தார். இறைவனோ வெள்ளத்துக்குள் மூழ்கி இருக்கிறார். தவணை தீர்த்தக்கட்டத்தில் நின்று கொண்டு, “நான் உம்மை எப்படி வழிபடுவது?” என வேண்டினார். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. வடகரையில் கந்தர்வன் அமைத்த ஆலயத்தில் உள்ள இறைவனை வணங்கி செல். அவரும் வேறு யாரும் அல்ல நான் தான் என உரைக்கும் வண்ணம், “அங்கு (தாமிரபரணி நதிக்குள்) நான் உண்டெனில், இங்கும் (வடகரையில்) நான் உண்டு” என்று அந்த அசரீரி சொன்னது. எனவே தான் வடகரையில் உள்ள சிவனும் ‘அங்குண்டீஸ்ரமுடையார்’ என பெயர் பெற்றார். கந்தர்வன் ஒருவன் துர்வாசரின் சாபத்தால் நாரையாக மாறினான். தனக்கு சுயஉருவம் கிடைக்க சிவபெருமானை நினைத்து தவம் செய்தான். ஆடாமல் அசையாமல் சமாதி நிலைக்கு சென்றான். பிரம்மா, புலிந்த மலை மேல் இருந்து கசாலிகா தேவியை நதியாக ஓடிவரச் செய்தார். அந்த நதி சமாதி நிலையில் இருந்த கந்தர்வனை வெகு தூரம் அடித்து வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் வீசியது. கந்தர்வன் கண்விழித்தபோது, ரிஷி பத்தினியான அக்னிசிகாவின் ஆசிரமம் தென்பட்டது. ரிஷிபத்தினி, கற்கள் நிறைந்த ஒரு கலசத்தை கந்தர்வனிடம் கொடுத்தார். அதை வைத்து அவன் பூஜித்து வந்தான். சில நாட்களில் கலசத்தில் இருந்த கற்கள் அனைத்தும் சேர்ந்து சிவலிங்கமாக மாறியது. அதை பரத்வாஜ முனிவரின் ஆலோசனைப்படி அங்கே பிரதிஷ்டை செய்து வணங்கினான், கந்தர்வன். அப்போது ஈசன், சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் தோன்றி காட்சி தந்தார். அந்த இறைவன் ‘கந்தவேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். கந்தர்வன் சாப விமோசனம் பெற்று தேவலோகம் சென்றான். ஆனாலும் வருடம் தோறும் மீன-பரணி நட்சத்திரம் அன்று, தேவர்கள் புடைசூழ இங்கு வந்து சிவபூஜை செய்வதாக ஐதீகம். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
நம்பிக்கைகள்
கந்தர்வன் சாப விமோசனம் பெற்று தேவலோகம் சென்றான். ஆனாலும் வருடம் தோறும் மீன-பரணி நட்சத்திரம் அன்று, தேவர்கள் புடைசூழ இங்கு வந்து சிவபூஜை செய்வதாக ஐதீகம். வேதவியாசரின் சீடரான சூதமா முனிவர், இந்தக் கோவிலின் பெருமையைப் பாடலாக தாமிர பரணி மகாத்மியத்தில் பாடியுள்ளார். இக்கோவிலில் பங்குனி மாதம் வரும் மீன – பரணி நட்சத்திரத்தில் இறைவனை வழிபட்டால் அனைத்து நற்பலனும் கிடைக்கும் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நயினார் குளம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருநெல்வேலி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி