Monday Nov 25, 2024

கோட்டயம் வைக்கம் ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில், கேரளா

முகவரி

வைக்கம் ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில், வைக்கம், கோட்டயம் மாவட்டம், கேரள மாநிலம் – 686141.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ மகாதேவர் (சிவன்)

அறிமுகம்

வைக்கம் சிவன் கோவில் என்பது இந்தியாவில் கேரளத்திலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் ஊரில் அமைந்துள்ள கோயில். மூலவர் வைக்கத்தப்பன் என்று அழைக்கப்படுகிறார். இவர் வியாக்ரபுரிசுவரர் என்கிற மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுவதுண்டு. இந்தக் கோயில் கோட்டயத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோயில், ஏட்டுமானூர் சிவன் கோயிலுடன், கடுதுருத்தி தளியில் மகாதேவர் கோயிலும் சக்தி வாய்ந்த முக்கோணமாகக் கருதப்படுகிறது. உச்சபூஜைக்கு முன் இந்த மூன்று கோவில்களையும் பக்தர்கள் வழிபட்டால், வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சைவர்கள் மற்றும் வைணவர்கள் இருவரும் வணங்கும் சில கோயில்களில் வைக்கம் மகாதேவர் கோயிலும் ஒன்று. வைக்கமுடைய சிவன் வைக்கத்தப்பன் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இங்குள்ள சிவலிங்கம் ‘திரேதா யுகத்தைச் சேர்ந்தது’ என்று நம்பப்படுகிறது. இக்கோயில் கேரளாவில் உள்ள முக்கிய சிவன் கோவில்களில் ஒன்றாகும்.

புராண முக்கியத்துவம்

ஸ்ரீ பரசுராமர் தமது யோக சக்தியால் ஆகாய வழியாக வடதிசை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது கருடன் கத்தியது. அவரது வலது தோள்பட்டை சிலிர்த்தது. அந்த நல்ல சகுனத்தின் அடையாளமாக அவர் கீழே பார்த்தார். நாவல் பழ நிறமுள்ள ஒரு சிவலிங்கம் நீரில் பாதியளவு மூழ்கியிருப்பது தெரிந்தது. அக்கணமே, அவ்விடத்தில் இறங்கி, அங்கிருந்த சிவலிங்கத்தை எடுத்துக் கட்டித்தழுவி, பீடம் ஒன்றை அமைத்து, அதில் சாஸ்திர முறைப்படி பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்தார். இந்த விபரம் வைக்கம் தலபுராணத்திற்கு அடிப்படையான பார்க்கவ புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவபெருமான், பக்தனான கரன் எனும் அசுரனிடம் தனது அம்சமான மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து விட்டார். அவனுடன் ஸ்ரீ வியாக்ரபாத முனிவரையும் அனுப்பி வைத்தார். அவரும் கரனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்தார். மூன்று சிவலிங்கங்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்ட கரன், களைப்பின் மிகுதியால் ஓரிடத்தில் சற்று ஒய்வு பெறுவதற்காக தன் வலக்கையில் வைத்திருந்த சிவலிங்கத்தைக் கிழே வைத்தான். சிவலிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்ற போது அது முடியாமல் போனது. அதை எடுக்க முயன்று தோல்வியடைந்த கரன், திரும்பிப் பார்த்த போது வியாக்ரபாரத முனிவர் நின்று கொண்டிருந்தார். உடனே அவன் அவரிடம் சிவலிங்கத்தைப் பூஜை செய்து வரும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அங்கேயே தங்கி விட்டார். எனவே வைக்கத்திற்கு வியாக்ரபாத புரம், வியாக்ரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது. ஸ்ரீ வியாக்ரபாதர் பூஜை செய்த வைக்கத்தப்பனுக்கு வியாக்ரபுரீசுவரர் என்ற பெயரும் உண்டாயிற்று. இக்கோயிலில் வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில், ஒரு சமயம் மகாதேவர் ஸ்ரீ வியாக்ரபாதருக்குத் தரிசனம் தந்தாராம். தற்போது அங்கு ஆலமரத்தோடு கூடிய ஒரு மேடையிருக்கிறது. அம்மேடையை “வியாக்ரபாதர் மேடை” என்று அழைக்கிறார்கள்.

திருவிழாக்கள்

வைக்கம் கோவில் அதன் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான வைக்கம் அஷ்டமிக்கு (வைகதாஷ்டமி) பிரபலமானது, இது நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும். திருவிழாவின் சரியான தேதி மலையாள நாட்காட்டியால் தீர்மானிக்கப்படுகிறது. மலையாள மாதமான விருச்சிகத்தில் கிருஷ்ணாஷ்டமி நாளில் வைகதாஷ்டமி கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின் பின்னணியில் உள்ள புராணக்கதை என்னவென்றால், பல ஆண்டுகளுக்கு முன்பு வியாக்ரபாதர் என்ற துறவி பல ஆண்டுகளுக்குப் பிறகு சிவபெருமானை வேண்டிக் கொண்டார். கிருஷ்ணாஷ்டமி அன்று அதிகாலையில் சிவபெருமான் அவர் முன் தோன்றியதாக நம்பப்படுகிறது. எனவே இந்த வைகதாஷ்டமியின் நினைவாக கொண்டாடப்படுகிறது. இது 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவாகும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வைக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வைக்கம் சாலை நிலையம்

அருகிலுள்ள விமான நிலையம்

கொச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top