கோகுலம் மோகன கிருஷ்ணப் பெருமாள் கோயில், உத்தரப் பிரதேசம்
முகவரி
கோகுலம் ஸ்ரீ நவமோகனகிருஷ்ணப் பெருமாள், திருவாய்ப்பாடி, மதுரா, உத்தரப் பிரதேசம் 281001
இறைவன்
இறைவன்: மோகன கிருஷ்ணன் இறைவி: ருக்மணி
அறிமுகம்
கோகுலம் இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரப் பஞ்சாயத்து. இது மதுராவில் இருந்து தென் கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் நந்தகோபன் – யசோதை தம்பதியரிடம் கிருஷ்ணர், வளர்ந்தாக இந்து தொன்மக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள யமுனை ஆற்றாங்கரையில் கிருஷ்ணரின் கோயில் அமைந்துள்ளது. ஆயர்பாடி என்றும் ஆய்ப்பாடி என்றும் கோகுலம் என்றும் அழைக்கப்படும் இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய மூவரால் பாடல்பெற்ற தலம் இதுவாகும். மதுரா நகரிலிருந்து 4 கி. மீட்டர் தொலைவில் திருவாய்பாபாடி காணப்படுகிறது. யமுனை நதியைக் கடந்து அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் சென்றால் திருவாய்ப்பாடி என்ற ஊர் உள்ளது. மூலவர் மோகன கிருஷ்ணன். கிழக்கே திருமுக மண்டலம். தாயார் ருக்மணி, சத்யபாமா பிராட்டியார்கள். தீர்த்தம் யமுனா நதி. விமானம் ஹேமகூட விமானம். நந்தகோபருக்கு கிருஷ்ணர் நேரிடையாகத் தரிசனம் தந்த இடம். ஆழ்வார்கள் பாடிய கோவில்களும் உருவச் சிலைகளும் இப்போது இல்லை புராண கோகுல் என்று ஒன்றுண்டு. கோயில் வாசலில் யமுனை நதி ஓடுகிறது. நந்தகோபர், யசோதா பலராமர் விக்ரகங்களுக்கடியில் குழந்தையாக கிருஷ்ணனை ஒரு மரத் தொட்டிலில் வைத்திருக்கிறார்கள். மற்றபடி பஞ்சலோக விக்ரகங்கள் எதுவுமில்லை.
புராண முக்கியத்துவம்
இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம் உட்பட எண்ணற்ற வடமொழி நூல்கள் எடுத்தியம்பியுள்ளன. இந்து தொன்மப்படி துவாபரயுகத்தில் திருமாலின் ஒரு அவதாரமான கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம்.[2] கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் பாடியுள்ளனர்.இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நவமோகன கிருஷ்ணன் என்ற பெயரில் காட்சி தருகிறார். இறைவி ருக்மணி தேவி, சத்திய பாமா ஆகியோர். இதன் விமானம் ஹேம கூட விமானம் எனும் அமைப்பினைச் சேர்ந்தது.
நம்பிக்கைகள்
குழந்தை இல்லாதவர்களும் நோயினால் வறுமையினால் அவதிப்படும் குழந்தைகளைப் பெற்றவர்களும் இந்த திருவாய்ப்பாடி கோயிலுக்கு வந்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை சேவித்தால் அவர்களுடைய புத்திர பாக்கியம் வலுப்பெறும். குழந்தைகளும் நோய்நொடி வறுமைப் பிணி இல்லாமல் வாழ்வார்கள்.
சிறப்பு அம்சங்கள்
இங்கு யமுனை நதி ஓடுகிறது. இங்கு கோகுல் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடம் தான் உண்மையான கோகுலப் பகுதி என்று சொல்லப்படுகிறது. புராண்கோகுல் என்று அழைக்கப்படும் இந்தப் பழைய கோகுலத்தில் யமுனை நதிக்கரையில் ஒரு தலம் அமைந்துள்ளது. இங்கு நந்தகோபர், யசோதை, பலராமர், மற்றும் தொட்டில் கிருஷ்ணன் ஆகியோருக்கு மரத்தினால் செய்யப்பட்ட மூர்த்திகள் உள்ளன. சிறைச்சாலையில் தேவகி மைந்தனாகப் பிறந்த கண்ணன் இந்த ஆயர்பாடியில் உள்ள நந்த கோபர் வீட்டிற்கு வந்த நாளை ஆண்டுதோறும் இங்கு விழாவாக நந்தோற்சவம் என்ற பெயரில் இன்றும் கொண்டாடுகின்றனர். இன்றும் ஜன்மாஷ்டமியின் மறுநாள் (கோகுலாஷ்டமியின் மறுதினம்) இதே பெயரில் இந்த உற்சவம் வடநாட்டிலும், பிற முக்கிய தலங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கௌடில்யா மடத்தில் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் மிக்க சிறப்புடன் தற்போதும் நடத்தப்பட்டு வருகிறது.
திருவிழாக்கள்
கிரிஷ்ணஜெயந்தி
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
உத்தரப் பிரதேசம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மதுரா
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுரா
அருகிலுள்ள விமான நிலையம்
கெரியா