குரங்கனில் முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
முகவரி
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில் குரங்கனில் முட்டம் கிராமம் தூசி அஞ்சல் செய்யாறு வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் PIN – 631703.
இறைவன்
இறைவன்: வாலீஸ்வரர் இறைவி: வலையாம்பிகை
அறிமுகம்
குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இச் சிவன் கோயில் இந்தியாவின் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது. தூசி என்னும் கிராமத்திற்கருகில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலமாகும். தல விருட்சம்:இலந்தை தீர்த்தம்:காக்கைமடு தீர்த்தம், வாயசை தீர்த்தம் ஆகமம்/பூஜை :காமீகம்
புராண முக்கியத்துவம்
தனது பதினாறாவது வயதில் இறக்கும்படியான வரம் பெற்றிருந்த மார்க்கண்டேயர், சிவதல யாத்திரை மேற்கொண்டார். அவருக்கு பதினாறு வயதாகியபோது, எமதர்மன் அவரைப் பிடிக்க வந்தான். அவனிடம் இருந்து தப்பிச் சென்ற மார்க்கண்டேயர் சிவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அப்போது எமன் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசவே அக்கயிறு தவறுதலாக சிவன் மீது விழுந்தது. தன் பணியை சரியாக செய்யாததால் சிவன் அவரது பதவியை பறித்தார். தன் பதவியை இழந்த எமதர்மன் சிவனை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டார்.அவரிடம் சிவன், பூலோகத்தில் குறிப்பிட்ட காலத்தில் தன் தரிசனம் கிடைக்கப்பெற்று இழந்த பதவி மீண்டும் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகம் வந்த எமன், முட்டம் (காகம்) வடிவில் பல தலங்களுக்கும் யாத்திரை சென்று சிவனை வணங்கி வந்தார். கவுதமரின் மனைவி மீது ஆசை கொண்டதால் தன் உடல் முழுவதும் கண்களாக தெரியும்படி முனிவரிடம் சாபம் பெற்றான் இந்திரன். அவன், தன் தவறை மன்னிக்கும்படி சிவனிடம் வேண்டினான். சிவன் அவனிடம், “தகுந்த காலத்தில் பூலோகத்தில் தான் சாபவிமோசனம் தருவதாகவும், அதுவரையில் பூமியில் சிவதலயாத்திரை மேற்கொள்ளும்படியும்’ கூறினார். அவரது சொல்கேட்ட இந்திரன், அணில் வடிவில் பூலோகம் வந்தான்.இவ்விருவரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது, சிவபக்தனான வாலி குரங்கு வடிவத்தில் இங்கு வந்து சிவனை வழிபட்டார். இதனைக்கண்ட எமன், இந்திரன் இருவரும் வாலியுடன் சேர்ந்து சிவனை வணங்கினர். சிவன் இம்மூவருக்கும் காட்சி தந்ததோடு எமன், இந்திரன் இருவருக்கும் சாபவிமோசனமும் கொடுத்தார். பின் அவர்களது வேண்டுதலுக்காக இவ்விடத்திலேயே, சுயம்புவாக எழுந்தருளினார். தலமும் “குரங்கு அணில் முட்டம்’ என்றானது. கோயில் முன்மண்டப சுவர்களில் இம்மூவரும் வழிபட்ட சிற்பங்கள் இருக்கிறது.
நம்பிக்கைகள்
பாவ விமோசனம், ஞானம் மற்றும் அறிவுத்திறனும் வளரவும், சனி தோஷம் நீங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். திருமணமான பெண்களும், கர்ப்பிணிகளும் இங்குள்ள அம்பாளுக்கு வளையல்கள் போட்டு, பின்பு அதனை அணிந்து கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் புத்திரபாக்கியமும், சுகப்பிரசவமும் ஆகுமென நம்புகின்றனர். வாலீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் குறைவில்லாத வாழ்வும், பிறப்பில்லாத நிலையும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பாலாரிஷ்ட தோஷம் உள்ள குழந்தைகளுக்கு குணமாக அம்பாளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
இங்கு வாலீஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. இக்கோயில் பாலாற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. இங்குள்ள விநாயகர் தாமரை மலர் பீடத்தின் மேல் இருக்கிறார். இந்த பீடத்திற்கு கீழே ஆவுடையாரும் இருக்கிறது. இதனை விநாயகரை, சக்தி தாங்கிக் கொண்டிருக்கும் வடிவம் என்கிறார்கள். இங்கு சாந்த முகத்துடன் இருக்கும் விஷ்ணு துர்க்கையின் வலது கையில் பிரயோகச் சக்கரம் இருப்பதுடன் இடக்கையில் சக்கர முத்திரையும் இருக்கிறது. இவள் காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை. இது விசேஷமான அமைப்பாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 238 வது தேவாரத்தலம் ஆகும். பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், பைரவர், நவக்கிரகங்கள், சப்தமாதர், நாகதேவதை ஆகியோர் இருக்கின்றனர். கருவறைக்கு பின்புறத்தில் மகாவிஷ்ணு, பிரயோக சக்கரத்துடன் தனிச்சன்னதியில் இருக்கிறார்.
திருவிழாக்கள்
திருக்கார்த்திகையில் லட்சதீபம், சிவராத்திரி, அன்னாபிஷேகம்.
காலம்
1000 -2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குரங்கனில் முட்டம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவண்ணாமலை
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி