கல்படி கல்யாணராமன் ஆலயம், கன்னியாகுமரி
முகவரி
கல்படி கல்யாணராமன் ஆலயம் கல்படி, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் – 629 204.
இறைவன்
இறைவன்: இராமன் இறைவி : சீதா தேவி
அறிமுகம்
சீதா தேவி, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் ராமன் கருவறையில் காட்சிதரும் தலங்கள் தமிழகத்தில் அரிதாகவே உள்ளன. அப்படி அரிதான ஒரு தலம்தான் கல்படி ஸ்ரீகல்யாண ராமன் திருக்கோயில். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ளது கல்படி எனும் இந்தத் தலம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது கல்படி. நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் வழியாக வெள்ளச்சந்தை வந்து, அங்கிருந்தும் கல்படிக்குச் செல்லலாம். அல்லது திங்கள்சந்தை எனும் ஊருக்குச் சென்று, அங்கிருந்தும் 5 கி.மீ. பயணித்து இக்கோயிலைச் சென்றடையலாம். இந்தக் கல்யாண ராமர் கோயில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பூஜை செய்த அந்தணர்கள் முன்பு வழிபட்டு வந்த கோயில் இது. இந்தக் கோயில் கும்பாபிஷேகப் பணிக்காக 12 ஆண்டுகளுக்கு முன்பே பாலாலயம் செய்யப் பட்டதாம். ஆனாலும் இன்னும் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெறவில்லை. இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், 12 வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேகப் பணிக்காக பாலாலயம் செய்து, சுவாமியைக் கும்பத்தில் எடுத்து வெளியே தனி இடத்தில் வைத்தார்கள். அன்று கோயிலைப் பூட்டினது தான் அதற்குப் பிறகு திறக்கவே இல்லை. கோயில் கோபுரத்தில் புதர்மண்டி கிடக்கிறது. கருவறை, அதையொட்டி சிறு மண்டபம், அடுத்து சுற்றுப்பிரகாரத்துடன் கூடிய கல் மண்டபம் என அமைந்திருக்கிறது. கோயிலுக்கு வெளிப்புறத்தில் ஸ்தல விருட்சமான அரசமரம் நிற்கிறது. அதன் அடியில் உள்ள நாகராஜா சந்நிதி பராமரிப்பு இல்லாமல் காட்சியளிக்கிறது.
புராண முக்கியத்துவம்
இலங்கையில் ராவணனை வீழ்த்தியபிறகு, சீதையின் தூய்மையை – புனிதத்தை உலகுக்குப் பறைசாற்ற முடிவுசெய்தார் ஸ்ரீராமன். அதற்காக ஏற்படுத்தப்பட்ட அக்னி குண்டத் தில் இறங்கினார் சீதாதேவி. அவ்வாறு அக்னியில் இறங்கி தங்கமாக ஜொலித்த சீதையின் கையைப் பிடித்து குண்டத்தில் இருந்து கரையேற்றினார் ஸ்ரீராமன். இங்ஙனம் ஸ்ரீராமன் சீதாதேவியின் கையைப் பிடித்த தலம் என்பதால் `கைப்பிடி’ என இந்தத் தலத்திற்குப் பெயர் வந்தது. அதுவே நாளடைவில் `கல்பிடி’ என மருவிய தாகச் சொல்கிறார்கள். நெல் வயல்களும், வாழைத் தோப்புகளு மாக மிகப் பசுமை சூழ்ந்து திகழ்கிறது கல்படி கல்யாண ராமர் கோயில். கோயிலுக்குச் சற்றுத் தள்ளி குளம் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி விரிந்து கிடக்கும் விளைநிலங்கள் இக்கோயிலுக்கு சொந்தமானவை. கோயிலை ஒட்டி குடிநீர்க் கிணறு ஒன்றும் உள்ளது. இந்தக் கிணற்றின் தண்ணீரே கோயில் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
காலம்
13 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கல்படி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகர்கோவில்
அருகிலுள்ள விமான நிலையம்
திருவனந்தபுரம்