ஒரக்காட்டுப்பேட்டை ஶ்ரீகுணம் தந்த நாதா் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
ஒரக்காட்டுப்பேட்டை ஶ்ரீகுணம் தந்த நாதா் திருக்கோயில், ஒரக்காட்டுப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் – 603106. தொடர்புக்கு: எஸ்.சிவசெந்தில் 89407 33278 ; 77080 17278
இறைவன்
இறைவன்: ஶ்ரீகுணம் தந்த நாதா் இறைவி: ஶ்ரீதிரிபுரசுந்தரி
அறிமுகம்
பூலோக மாந்தர்களின் வாழ்க்கை செழிக்கும் பொருட்டு, அவர்களுக்கு உன்னதமான குணநலன்களை வரமாக அருளும் ஈசன் குடிகொண்டிருக்கும் தலமே, செங்கல்பட்டு அருகிலுள்ள `ஒரக்காட்டுப்பேட்டை’ என்று வழங்கப்படும் `உறைக்காட்டுப்பேட்டை. இங்கு கோயில்கொண்டிருக்கும் ஈசனின் திருநாமம் ஶ்ரீகுணம் தந்த நாதா்; அம்பாள் ஶ்ரீதிரிபுரசுந்தரி. செங்கல்பட்டிலிருந்து சுமார் 8 கி.மீ.தூரத்தில் உள்ளது ஒரக்காட்டுப் பேட்டை.
புராண முக்கியத்துவம்
உறைகாட்டுப்பேட்டை – `உறை’ என்ற தமிழ்ச்சொல், சங்க இலக்கியங்களிலும் சங்கம் மருவிய தமிழ் இலக்கியங்களிலும் கையாளப் பட்டிருக்கிறது. `உறை’ என்பதை, வாழ்நாளைக் குறிப்பிடும் சொல்லாகவும் வாழும் இடத்தைக் குறிப்பிடும் சொல்லாகவும் ஞானநூல்கள் கையாண்டுள்ளன. `காடு’ எனும் சொல் காட்டைக் குறிப்பதோடு, தலத்தின் செழிப்பைக் குறிக்கும் சொல்லாகவும் அமைந்துள்ளது. சோழ மன்னன் கரிகால் வளவன் தொண்டை மண்டலக் காடுகளை அழித்து நாடாக்கிய செய்தி பட்டினப்பாலையில் உள்ளது. இதனால் தொண்டை மண்டலத்தில் அமைந்த இத்தலத்துக்கு `உறைகாடு’ என்ற திருநாமம் ஏற்பட்டது என்பர். `உறை காடு’ என்றால், உறைவதற்கு அல்லது வாழ்வதற்கு வளமான பூமி என்பது பொருளாகும். அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு, விஜயநகரப் பேரரசர்களுக்குக் கட்டுப்பட்டு, தஞ்சையை அரசாண்டனர் நாயக்க மன்னா்கள். அவா்களில், தொண்டை நாட்டுப் பகுதியை கிருஷ்ணதேவராய மன்னரின் பிரதிநிதியாக இருந்து ஆண்டவா், திம்ம நாயக்கன். இவரைச் சிறப்பிக்கும் விதமாகவே இவரது பெயரில் திம்மராஜன் குளம், திம்மாவரம், திம்மையன்பேட்டை, திம்மராஜன் பேட்டை போன்ற ஊா்கள் உருவாயினவாம். காஞ்சி முதல் செங்கல்பட்டு வரையிலான நெடுஞ்சாலையில், பேட்டை எனும் பெயருடன் திகழும் ஊர்களில் பெரும்பாலானவை, விஜயநகர ஆட்சியின் போது ஏற்பட்டவை. 1923-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தொல் பொருள் ஆய்வுத்துறை, உறைக்காட்டுப் பேட்டை திருத்தலத்தில் ஒரு கல்வெட்டினைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்தியுள்ளது. கீலக ஆண்டு ஆவணி மாதம் என்று குறிப்பிடப் பட்டுள்ள இக்கல்வெட்டு தெலுங்கு மொழியில் உள்ளது. `உசேன் கான்’ என்ற இஸ்லாமிய அன்பா் ஒருவர், தன் நிலத்தைக் குணம் தந்த நாதா் திருக்கோயிலுக்குக் கொடையாக அளித்து திருப்பணி செய்த விவரத்தை, இந்தக் கல்வெட்டுச் செய்தியின் மூலம் அறியமுடிகிறது. திம்மநாயக்கன் காலத்துக் கல்வெட்டு இது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடை குறித்த இக்கல்வெட்டின் தலைப்பில், வைணவச் சின்னமான நாமம் (திருமண்) பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பு!
நம்பிக்கைகள்
அவ்வகையில், முன்வினை காரணமாக குணநலன்களை முறைப்படுத்த முடியாமல் தவறான பாதையில் பயணித்து அல்லல்படும் மாந்தா்கள், வணங்க வேண்டிய அற்புதத் தெய்வம்தான், ஒரக்காட்டுப் பேட்டையில் அருளும் குணம்தந்த நாதர். இவரை வழிபட்டால், மனமது செம்மையாகும்; சிந்தை தெளிவுறும்; நல் வழியைத் தேர்ந்தெடுப்பதில் தடுமாற்றம் இருக்காது. மது, புகை முதலான தவறான பழக்கங்களுக்கு ஆட்பட்டு, அதன் காரணமாக பாதிப்புக்கு ஆளானோர், தொடர்ந்து 11 பிரதோஷ தினங்கள் இந்தத் தலத்துக்குச் சென்று, நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொண்டு, ஈசனின் சந்நிதியில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டால், விரைவில் கொடுமையான தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவார்கள்; தீய பழக்கங்களிலிருந்து விடுபடக்கூடிய மன உறுதியை அவா்களுக்கு அளிப்பார் குணம் தந்த நாதா் என்பது நம்பிக்கை. கருவுற்றிருக்கும் பெண்கள், தன் கணவருடன் சென்று ஒரக்காட்டுப்பேட்டைத் தலத்தில் அருளும் குணம்தந்த நாதரை தரிசித்து வழிபட்டால், நல்ல குணநலன்கள் கொண்ட மகவினை ஈன்றெடுப்பா் என்பது ஆன்றோர்வாக்காகும்.
சிறப்பு அம்சங்கள்
அஷ்ட லிங்கங்கள் : திருவண்ணாமலை தலத்தில் மலையைச் சுற்றி அஷ்டலிங்கங்கள் அருள்பாலிப்பது போல், இத்தலத்திலும் எட்டு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக அஷ்ட லிங்கங்கள் அருள் பாலிப்பது சிறப்பான ஒன்றாகும். உடல்நிலை, வயோதிகம் மற்றும் இதரச் சூழல்களின் காரணமாக திருவண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்ல இயலாத நிலையில் இருப்பவர்கள், 21 பெளர்ணமி தினங்கள் இந்தத் தலத்துக்குச் சென்று வலம் வந்து, குணம் தந்த நாதரையும் அம்பிகை திரிபுரசுந்தரி யையும் வழிபட்டால், கிரிவலம் செய்த புண்ணியம் கிட்டும். பிறவியிலேயே பேச முடியாத நிலையிலிருந்த அன்பர் ஒருவர், 21 பெளர்ணமி தினங்கள் தொடர்ந்து வந்து குணம் தந்த நாதரை வழிபடுவது என்று தீர்மானித்து வழிபாட்டைத் தொடங்கினார். 7 பெளர்ணமி தினங்கள் வழிபாடு செய்த நிலையிலேயே அவருக்குப் பேச்சுத் திறன் வந்தது என்று சமீபகாலத்து அற்புதச் சம்பவத்தைச் சிலிர்ப்போடு சொல்கிறார்கள், இப்பகுதி பக்தர்கள். நவவீரர்கள் வழிபாடு! கந்தப் பெருமானின் படைத் தளபதிகளாகப் பணியாற்ற, அம்பிகை பார்வதிதேவியின் பாதச் சிலம்பி லிருந்து உதித்தவா்கள் வீரபாகு முதலான நவவீரர்கள். திருச்செந்தூர் முதலான புகழ்பெற்ற முருகன் திருத் தலங்களில் இந்த நவவீரர்களுக்கான வழிபாடுகள் நடைபெறுவது உண்டு. இந்தத் தலத்திலும் நவவீரர் களுக்கான வழிபாடு நடைபெறுகிறது. மட்டுமன்றி, கந்த சஷ்டி – சூரசம்ஹார விழா வைபவமும் இங்கே சிறப்புற நடைபெறுகின்றன. இத்தலத்தின் அக்னி தீா்த்தம் சா்வ ரோக நிவாரணி யாகப் போற்றப்படுகிறது. ஆனால், தற்போது இது நீரின்றி வறண்டு காணப்படுகிறது. திருக் குளத்தின் கட்டுமான அமைப்பு அற்புதம். சரக் கொன்றை இவ்வூரின் தலவிருட்சமாகும்.
காலம்
600 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஒரக்காட்டுப்பேட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை