Friday Nov 15, 2024

அருள்மிகு வீமீஸ்வரர் திருக்கோயில், செரப்பணஞ்சேரி

முகவரி

அருள்மிகு வீமீஸ்வரர் திருக்கோயில், செரப்பணஞ்சேரி, காஞ்சிபுரம் – 602 301.

இறைவன்

இறைவன்: வீமீஸ்வரர் இறைவி: ஸ்வர்ணாம்பிகை

அறிமுகம்

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் செரப்பணஞ்சேரி என்னுமிடத்தில் உள்ளது. பெருவஞ்சூர், ராஜேந்திரசோழ நல்லூர், கேசரிநல்லூர் ஆகிய பெயர்களில் இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திற்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே காணப்படுகின்ற மாடக்கோயில்களில் இக்கோயில் 18ஆவது கோயிலாகும். இக்கோயிலின் மூலவராக வீமீசுவரர் உள்ளார். இறைவி சுவர்ணாம்பிகை ஆவார். மண்ணிவாக்கம் மண்ணீசுவரர், செரப்பணஞ்சேரி வீமீசுவரர் கோயில்கள் ஒரே சிற்பியால் கட்டப்பட்டவையாகக் கருதப்படுகின்றன. மூலவர் ஆறடி உயர லிங்கத் திருமேனியாக உள்ளார். இடப்பாகத்தில் இறைவி தெற்கு நோக்கிய நிலையில் உள்ளார்.சுவாமிக்கு எதிரில் யுகத்திலிருந்து வெளிவருவது போல் ஒரு கல்லில் சிவன் நின்ற நிலையில் உள்ளார். இந்த ஆலயத்தில் மிகப்பெரிய இரண்டு நந்திதேவர்கள் இறைவனை நோக்கியவாறு அமர்ந்துள்ளனர். கோவிலின் கருவறை மண்டபத்தை சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இந்து அறநிலையத்துறை இந்த கோவிலை கண்டுகொள்ளாத நிலையில் சிவபக்தர்கள் இணைந்து பராமரித்து பூஜை செய்து வருகின்றனர். இடிந்த நிலையில் உள்ள இந்த கோவிலில் 6 அடி உயர கல் தூண் ஒன்றில் கல்லால் தட்டினால் வெவ்வேறு ஒலி வருகிறது. பல கலை சிற்பங்களை உருவாக்கிய சிற்பிகள் அரியதாக கருதப்படும் இசைத் தூண்களையும் உருவாக்கியுள்ளனர். தமிழகத்தில் சில கோவில்களில் மட்டும் இசைத் தூண்கள் காணப்படுகின்றன. அது போன்ற இசைத்தூணாக இருக்கலாம் என்று குருக்கள் கூறுகிறார்கள்.

புராண முக்கியத்துவம்

கி.பி 1182-ம் ஆண்டில் தமிழும் கிரந்த லிபியும் சேர்ந்தவாறு பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் ஆலயத்தின் கருவறை மண்டபத்தைச் சுற்றிலும் காணப்படுகின்றன. இவ்வூர் பெருவஞ்சூர் என அழைக்கப்பட்டு, மூன்றாம் குலோத்துங்க மன்னன் ஆட்சிபுரிந்தபோது இந்த ஆலயத் திருப்பணிகள் செய்துள்ளான். அதோடு இவ்வூர் ராஜேந்திர சோழ நல்லூர், கேசரி நல்லூர் என்ற பெயர்களுடனும் விளங்கி வந்துள்ளது தெரிய வருகிறது. நவகிரகங்களின் தலைவனாகவும், ஆரோக்கியகாரகன் என்றும் வர்ணிக்கப்படும் சூரியன், உலக மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்களையும் பாப கர்மங்களையும் விலக்கிக் கொள்ள பூமியில் சக்தி வாய்ந்த சிவாலயத்தைத் தேடினான். அப்போது ரதசப்தமி காலமானதால் தனது தேர்ச்சக்கரத்தை தெற்கிருந்து வடக்காகத் திருப்பியபோது இத்தலத்தில் இருந்து சிவனைக் கண்டு பூமிக்கு வந்து ஒரு தீர்த்தத்தை உண்டு பண்ணி, நீராடி மனமுருகிப் பிரார்த்தனை செய்தான். ஒளிக்கடவுளாய் விளங்கும் சூரிய பகவானுக்கே தோஷம் ஏற்பட்டுள்ளபோது, நாமும் அங்கு சென்று பரமனை பயபக்தியோடு வழிபட்டுப் பாவச் சுமைகளை விலக்கிடும்படி வேண்டுவது நல்லது என்று எண்ணி மண்ணுலகுக்கு வந்து சிவ வழிபாடு செய்தனர். விண்மீன்கள் வழிபட்டதால், விண்மீன்கள் ஈஸ்வரர் எனப்பட்டு காலப்போக்கில் வீமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார், இங்குள்ள இறைவன் அம்பிகைக்கு ஒரு வரலாற்றுச் செய்தி உண்டு. நவகிரகங்களில் ஒருவரான சுக்கிரன், இத்தலத்தில் தானும் அமர்வதற்கு ஓர் இடம் தந்து அருளவேண்டும் என்றும், இங்கு வருவோரின் மாங்கல்ய தோஷங்களை தான் நீக்கிட அருள்க எனவும் தேவியை வேண்டினான். தன் கழுத்தில் இருந்த ஸ்வர்ண ஆபரணத்தைக் கழற்றித் தந்தாள் ஈஸ்வரி. நவகிரகத் தலைவனே நேரில் வந்து இறைவனை வழிபடும்போது, நீ மட்டும் தனிச்சிறப்பை வேண்டுதல் கூடாது. நவகிரகங்களின் சாந்நித்யம் பரமனுக்கே உரித்தானது என்றாள். அதைக் கேட்ட சுக்கிரன் அடக்கத்தோடு, ஸ்வர்ணத்தைப் பெற்றுக் கொண்டு, எனக்கு ஸ்வர்ணத்தை அளித்து அருளியமையால், தாங்கள் ஸ்வர்ணாம்பிகையாகக் காட்சி தந்து இத்தலம் வந்து வழிபடுபவர்களுக்கு (தங்கமும்) பொருள் பலமும் கூட வேண்டும் என்று வேண்டிட, தேவியார் அப்படியே அருள் செய்தார், இதனால் தேவிக்கு ஸ்வர்ணாம்பிகை என்ற பெயர் நிலைப்பெற்றது.

நம்பிக்கைகள்

இத்தலத்தின் சிவனை தொடர்ந்து மூன்று பிரதோஷ காலத்தில், இரண்டு நந்திதேவனையும் வழிபட்டபின் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் ஆண் குழந்தை பிறக்க வழி உண்டாகும் என்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

மாசியில் காலை 7 மணிக்கு சூரிய ஒளி சிவனைச் சுற்றி விழுவது தலத்தின் சிறப்பு. 27 நட்சத்திரங்களும் வழிபட்ட வீமீஸ்வரரை திங்கள், ஞாயிறு கிழமைகளில் தீபம் ஏற்றி வில்வதளத்தால் அர்ச்சித்து வழிபட மங்களங்கள் உண்டாகும்.

திருவிழாக்கள்

மாதப் பிரதோஷம், மகா சிவராத்திரி, கிருத்திகை, சோமவாரம், தமிழ்ப்புத்தாண்டு, சாரதா நவராத்திரி

காலம்

2000 to 3000

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

செரப்பணஞ்சேரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

கூடுவாஞ்சேரி

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top