Thursday Jan 23, 2025

வேளச்சேரி தண்டீஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி

அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில், வேளச்சேரி – 600 042. சென்னை போன்: +91- 44 – 2226 4337

இறைவன்

இறைவன்: தண்டீஸ்வரர் இறைவி: கருணாம்பிகை

அறிமுகம்

சென்னையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவத்தலங்களில் சிறப்பு வாய்ந்தது, வேளச்சேரி விஜய நகரில் உள்ள தண்டீஸ்வரர் ஆலயமாகும். சோழ மன்னர்கள் தொண்டை மண்டலத்தில் கட்டிய முதல் சிவாலயம் என்ற பெருமையும் இத்தலத்துக்கு உண்டு. சோமுகாசுரன் எனும் அரக்கன் 4 வேதங்களையும் பிரம்மாவிடம் இருந்து பறித்து கடலுக்கு அடியில் சென்று சேற்றில் மறைத்து வைத்தான். இதனால் பிரம்மா நடத்தி வந்த படைப்புத் தொழில் நின்று போனது. இது பற்றி மகா விஷ்ணுவிடம் பிரம்மா முறையிட்டார். உடனே விஷ்ணு, மச்சவதாரம் எடுத்து சென்று சோமுக சுரனை அழித்து 4 வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார். சேற்றில் புதைந்திருந்ததால், 4 வேதங்களும், தங்கள் தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்வது என்று பிரம்மனிடம் கேட்டன. அவர் கூறியபடி 4 வேதங்களும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றன. அது முதல் வேதங்கள் வணங்கிய தலம் என்பதால் வேதச்சேரி என்றானது. நாளடைவில் அது வேளச்சேரி என மருவியது.முனிவர்கள் வேள்வி நடத்தியதால் இத்தலம் வேளச்சேரி ஆனதாகவும் சொல்கிறார்கள்.

நம்பிக்கைகள்

இந்த ஆலயத்தில் எமதர்மன் மீண்டும் தண்டம் பெற்ற தலமாகும். அதனால் 60, 70ம் திருமணம் செய்து கொள்ளவும், ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்து கொள்ள சிறந்த இடமாகும்.ஆயுள் விருத்தி பெறவும், இழந்த பதவி மீண்டும் கிடைக்க வழிபடலாம். கன்னிப் பெண்கள், பெண்களின் காவல் தெய்வமான வீரபத்திரனையும், சப்தகன்னியர்களையும் வணங்கிச் செல்கின்றனர். இந்த ஆலயத்தில் சுவாமி சன்னதி கோஷ்டத்தில் துர்க்கையும், பிரகாரத்தில் சரஸ்வதியும், லட்சுமியும் உள்ளனர்.

சிறப்பு அம்சங்கள்

அமர்ந்த கோல வீரபத்திரர்: வீரப த்திரருக்கு தண்டாயுதம் என்ற உலக்கை போன்ற ஆயுதமே தரப்பட்டிருப்பது மரபு. இவரை நின்ற கோலத்திலேயே பார்க்க முடியும். ஆனால், சிவாம்சமான வீரபத்திரர், கைகளில் மான், மழு தாங்கி, அமர்ந்த கோலத்தில் இருப்பதை இக்கோயிலில் காணலாம். இவர் கன்னிப்பெண்களைக் காக்கும் தெய்வமாக அருளுகிறார்.அசுரன் ஒருவனை அழிக்கச்சென்ற சப்தகன்னியர், தவறுதலாக ஒரு மகரிஷியை அழித்து விட்டனர். தங்களை அழிக்க ஏழு கன்னிகள் புறப்பட்டிருக்கும் செய்தியை அந்த அசுரனும் அறிந்து கொண்டான். முனிவரைக் கொன்ற தோஷம் ஒருபுறம், அசுரனின் மிரட்டல் மறுபுறமுமாக இருந்த வேளையில், சிவபெருமான், அவர்களைக் காக்க தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பி வைத்தார். வீரபத்திரர் கன்னியர்களை காத்ததோடு, அசுரனையும் அழித்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் சப்த கன்னியர் அருகில் வீரபத்திரர் காவல் தெய்வமாக இருக்கிறார். வீரபத்திரர், வலது காலை மடக்கி அமர்ந்திருக்கிறார். கைகளில் தண்டத்திற்கு பதிலாக ருத்ராட்ச மாலை மற்றும் மழு (கோடரி போன்ற ஆயுதம்) ஏந்தியிருக்கிறார். பீடத்தில் நந்தி இருக்கிறது. பவுர்ணமியில் இவருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனை நடக்கிறது. கன்னியரைக் காத்த கடவுள் என்பதால், பெண்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை அணிவித்து, தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைச் சொல்லி வேண்டிக்கொள்கிறார்கள். சப்தகன்னியரில் ஒருத்தியான சாமுண்டியை, செல்லியம்மனாக பாவித்து வழிபடுகிறார்கள். சப்தகன்னியர் சன்னதியை, “செல்லியம்மன் சன்னதி’ என்றே அழைக்கின்றனர். வீரப த்திரர் எதிரே விநாயகர் இருக்கிறார். சூரியபூஜை: தண்டீஸ்வரர் எதிரேயுள்ள நந்தி, தலையை பணிவாக கீழே சாய்த்திருப்பது விசேஷமான அமைப்பு. அம்பாள் கருணாம்பிகை சன்னதியில் அப்பைய தீட்சிதர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சூரிய ஒளி தை முதல் தேதியில், சிவலிங்கம் மீது விழுகிறது. வேதங்களின் தோஷம் போக்கிய சிவன், இங்கிருப்பதால், இங்குள்ள தெட்சிணாமூர்த்தி “யோக தெட்சிணாமூர்த்தி’ எனப்படுகிறார். இவரது பீடத்தில் நந்தி இருக்கிறது. தண்டம் தந்த சிவன்: அற்ப ஆயுள் பெற்றிருந்த, தன் பக்தனான மார்க்கண்டேயரின் ஆயுளை எடுக்கச் சென்ற எமனை சிவபெருமான் எட்டி உதைத்தார். அவனது பதவியையும் பறித்தார். இழந்த பதவியைப் பெற எமன், பூலோகத்தில் சிவத்தல யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டான். அப்போது எமனுக்கு காட்சி தந்த சிவன், தண்டம் கொடுத்து பணி செய்யும்படி அறிவுறுத்தி அருளினார். எனவே இத்தலத்து சிவன், “தண்டீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். இழந்த பதவி திரும்பக் கிடைக்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

திருவிழாக்கள்

சித்ராபவுர்ணமி, ஆடி ஞாயிறு, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம்.

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காந்தி சாலை

அருகிலுள்ள இரயில் நிலையம்

வேளச்சேரி

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top