Monday Dec 23, 2024

திருத்துறைப்பூண்டி அபிஷ்ட வரதராஜர் பெருமாள் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு அபிஷ்ட வரதராஜர் பெருமாள் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி – 614 713, திருவாரூர் மாவட்டம். போன்: +91 – 4369 – 224 099

இறைவன்

இறைவன்: அபிஷ்ட வரதராஜர் இறைவி: பூதேவி மற்றும் நீலாதேவி

அறிமுகம்

அபிஷ்ட வரதராஜப் பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மூலவர் அபிஷ்ட வரதராஜர் என்று அழைக்கப்படுகிறார். ஊர்ச்சவர் சீனிவாசன் – பத்மாவதி. தாய்மார்கள் பூதேவி மற்றும் நீலாதேவி. ஸ்தல விருக்ஷம் என்பது வில்வம். இது பெருமாள் கோயில் என்றாலும், அவரது தாசனாய் இங்கு கொலுவீற்றிருக்கும் 16 அடி உயர ஆஞ்சநேயர் தான் பிரபலம். மகாமண்டபத்தில், உற்சவர் சீனிவாசன், பத்மாவதி தாயாருடன் அருள் செய்கிறார். பூமாதேவி சமேத சத்யநாராயணர் இம்மண்டபத்தில் உள்ளார்.

புராண முக்கியத்துவம்

திருத்துறைப்பூண்டி என்ற திவ்யசேத்ரம் ஒரு காலத்தில் திருத்தருப்பூண்டி என அழைக்கப்பட்டது. வில்வமரங்கள் சூழ்ந்த காடாக அமைந்தது இத்தலம். இங்கு, திருமால் குடி கொண்டுள்ளார். அவரது திருநாமம் அபிஷ்ட வரதராஜப் பெருமாள். வரதராஜப்பெருமாள் கோயில் என்பதை விட, அவரது தாசனாய் இங்கு கொலு வீற்றிருக்கும் 16 அடி உயர ஆஞ்சநேயர் தான் பிரபலமாகி விட்டார். அனுமான் கோயில் என்றால் எல்லாருக்கும் பரிச்சயமாக உள்ளது.”அபிஷ்டம்’ என்ற சொல்லுக்கு “கோரிக்கை’ என்று பொருள். இப்பெருமாளிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும். இப்பகுதியை ஆண்ட வீரசோழன் என்ற மன்னன், எதிரிநாட்டினர் தந்த துன்பம் கருதி, அவர்களை போரிட்டு வெல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தான். பெருமாளின் நல்லாசியால் வெற்றி பெற்றான். நியாயமான கோரிக்கை வைத்தால், இவர் நிறைவேற்றி தருவது உறுதி என்ற கருத்தில் “அபிஷ்ட வரதராஜப் பெருமாள்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவரது தொண்டராக விளங்கும் ஆஞ்சநேயரை “வைராக்கிய ஆஞ்சநேயர்’ என்கின்றனர்.

நம்பிக்கைகள்

குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம், வறுமை நீக்கம், திருமணத்தடை நீங்குதல், தொழிலில் கஷ்டப்படுபவர்கள், குடும்ப ஒற்றுமை வேண்டுதல், தேவையில்லாமல் பயம் ஏற்படுதல் ஆகிய நியாயமான குறைகள் குறித்து ஆஞ்சநேயரிடம் வேண்டலாம். பூமாதேவி சமேத சத்யநாராயணரை பெண்கள் பவுர்ணமியன்று பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30-6) வழிபட்டால், மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

ஆஞ்சநேயர் போன்ற தெய்வத்தை உலகத்தில் காண்பதரிது. “அஞ்சனை மைந்தா போற்றி’ என பாடினால் கூட முகத்தை உம்மென்று வைத்துக் கொள்ளும் அவர், “ஸ்ரீராம ஜெயம்’ என யாரோ ஒருவனைப் பற்றிச் சொன்னால் முகம் மலர்ந்து அங்கே வந்து உட்கார்ந்து விடுகிறார். ராமனை யாரென்று அவருக்கு தெரியவே தெரியாது. காட்டில் அவரைப் பார்க்கிறார். அவரது முகத்திலுள்ள கலவரத்தை உணர்ந்து கொள்கிறார். மனைவியை இழந்து தவிக்கும் அவரது கதையைக் கேட்கிறார். தன் எஜமானன் சுக்ரீவனிடம் போய் சொல்லி, அவரை அழைத்துச் செல்கிறார். ராமனே கதியென அவருக்காக வேலை செய்கிறார். அவருக்காக சண்டை போடுகிறார். இறுதியாக, அவருக்கு வைகுண்டபதவி தரப்படுவதை மறுக்கிறார். பூலோகத்தில் சிரஞ்சீவியாக ராமநாமம் கேட்டுக்கொண்டே காலம் தள்ளுவதாகச் சொல்லி, இன்றுவரை நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த ஆஞ்சநேயருக்கு உலகில் பல இடங்களிலும் உயரமான சிலைகள் எழுப்பப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் உள்ள அபிஷ்ட வரதராஜப் பெருமாள் கோயிலில், அவர் விஸ்வரூபியாய், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சிறப்பம்சம்: மூலவர் அபிஷ்ட வரதராஜர், பூதேவி, நீளாதேவியுடன் சேவை சாதிக்கிறார். இவருக்கு நேர் எதிரே கருட மண்டபம் இருக்கிறது. ராமாவதாரத்தில் தான் அனுமான் அவரது தொண்டனாக வருகிறான். இங்கோ, கிருஷ்ணனின் அருகிலும் அனுமான் அருள்செய்கிறார். நடனமிடும் கிருஷ்ணன் அருகில் இவரும் இருக்கிறார். ஞானத்தை தரும் லட்சுமி ஹயக்கிரீவர் உற்சாகமாக, திகமாந்த மகாதேசிகன் எதிரே இருக்கிறார். எந்நேரமும் அலங்கார கோலத்தில் இவர்களைக் காணலாம்.மனிதனுக்கு அறிவிருந்து பயனில்லை. அறிவு முழுவதும் பணத்தை சம்பாதிப்பதிலேயே பயன்படுத் தப்படுகிறது. இவ்வுலகத்தில் இறைவனைத் தவிர ஒன்றுமேயில்லை என்னும் ஞானம் வந்தால் தான் சுபிட்சத்தை பெறமுடியும். அதற்கு அருளுபவர்ஹயக்கிரீவர். மூலப்பொருளான கணபதியும் இவர்களோடு முதன்மை தெய்வமாக வீற்றுள்ளார். மட்டை தேங்காய் வழிபாடு: இக்கோயிலில் மட்டை தேங்காய் வழிபாடு முக்கியமானது. விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயர் முன்பு ஒரு மீட்டர் சிவப்புத்துணியில் மட்டைத்தேங்காய் (உரிக்காத முழு தேங்காய்), வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், காசு வைத்து, தங்களது நியாயமான வேண்டுதலையும் ஒரு சீட்டில் எழுதி, கட்டி அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். அவர் பூஜை செய்து கோயில் உத்தரத்தில் கட்டி விடுகிறார். 90 நாட்கள் முதல் அவ்வாண்டுக்குள் கோரிக்கை நிறைவேறி விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

திருவிழாக்கள்

ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று இக்கோயில் விழாக்கோலம் பூணும். மட்டைத் தேங்காய் வழிபாடு நடத்த இது சிறந்தநாள். பக்தர்களுக்கு டோக்கன் தரப்பட்டு, ஆஞ்சநேயர் சன்னதியில் வரிசையாக அர்ச்சனை செய்யப்படும். காலை 6 மணிக்கு அபிஷேகம் துவங்கும். தொடர்ந்து அன்று இரவு வரை நடை திறந்திருக்கும்.

காலம்

9 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருத்துறைப்பூண்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருத்துறைப்பூண்டி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top