Sunday Jan 12, 2025

குக்கி சுப்ரமணியசுவாமி திருக்கோயில், கர்நாடகா

முகவரி :

அருள்மிகு குக்கி சுப்ரமணியசுவாமி திருக்கோயில்,

குக்கி சுப்ரமண்யா,

 தட்ஷின கன்னடா மாவட்டம்,

கர்நாடகா மாநிலம் – -577 238.

போன்: +91- 8257 – 281 224, 281 700.

இறைவன்:

குக்கி சுப்ரமணியசுவாமி

அறிமுகம்:

குக்கி சுப்ரமணியசுவாமி கோயில்  இந்தியாவில்கர்நாடக  மாநிலத்தின், மங்களூர் அருகே உள்ள தட்சின கர்நாடக மாவட்டத்தில் உள்ள கடபா தாலுக்கின் (முன்பு சுல்லியா தாலுக்காவில்) குக்கி சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் இக்கோயிலை குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில் என்று அழைக்கின்றனர். இக்கோயிலின் மூலவரான முருகனை அனைத்து நாகர்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். புராணக்கதைப்படி, கருடனுக்கு அஞ்சிய நாகர்களின் (பாம்புகளின்) குலத்திற்கு தலைவியான வாசுகி உட்பட அனைத்து நாகர்கள் இவ்விடத்தில் குடிகொண்டுள்ள சுப்பிரமணியசுவாமியைப் புகலிடமாகக் கொண்டுள்ளனர்.

குக்கி சுப்ரமணியசுவாமி கோயில், கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காட்டில் குமார மலையில் அழகான குக்கி சுப்ரமண்யா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த குமார மலையைப் பாதுகாக்கும் விதமாக இதன் அருகே ஆறு தலை பாம்பு வடிவத்தில், சேஷமலை அமைந்துள்ளது.  மங்களுரிலிருந்து 105 கி.மீ., தூரத்திலும், பெங்களூரிலிருந்து 317 கி.மீ., தூரத்த்திலும் உள்ளது.

புராண முக்கியத்துவம் :

காஷ்யப முனிவரின் மனைவியரான கத்ரு, வினதா என்பவர்களுக்கு இடையே குதிரைகள் பற்றிய சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்கள் கருத்தே சரியென வாதம் புரிந்தனர். முடிவில், யாருடைய கருத்து சரியானதோ, அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயத்தில், கத்ரு தோற்றாள். ஒப்பந்தப்படி கத்ருவும், அவளது குழந்தைகளான நாகங்களும் வினதாவிற்கு அடிமையாயின. வினதாவின் குழந்தையான கருடன், நாகங்களை துன்புறுத்தி வந்தது. வருந்திய நாகங்கள், வாசுகி என்ற பாம்பின் தலைமையில் குமாரதாரா என்ற நதியின் அருகிலிருந்த குகையில் வந்து தங்கின. அங்கிருந்தபடியே தங்களைக் காக்கும்படி அவை சிவனை வேண்டின.

சிவபெருமான் அந்தப் பாம்புகள் முன்தோன்றி, “”எனது மகன் சுப்பிரமணியனிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள். அவன் உங்களைக் காப்பாற்றுவான்,” என்றார். அதன்படி பாம்புகள் குமாரதாரா நதியில் நீராடி, சுப்ரமணியரை வழிபாடு செய்தன. இதனால் மகிழ்ந்த சுப்பிரமணியர் நாகங்களைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக வாசுகி பாம்பு, தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு குடையானது.

இந்த நதி தற்போது கர்நாடகத்தில் ஓடுகிறது. அந்த நதிக்கரையில் சுப்பிரமணியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. ஊரின் பெயரே “சுப்ரமண்யா’ என்பது தான். சேவல் கொடி வைத்துள்ள இத்தல முருகன், “குக்குட த்வஜ கந்தஸ்வாமி’ என அழைக்கப்படுகிறார். இக்கோயிலை ஒட்டி பள்ளூஸ் என்ற இடத்திலுள்ள குகையில், சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர்.

நம்பிக்கைகள்:

நாகங்களின் தலைவியான வாசுகிக்கு முருகன் அபயம் அளித்துள்ளதால், ராகு, கேது தோஷத்தால் சிரமப்படுபவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள். பிரம்மஹத்திதோஷம் (கொலை பாவம்), முன் ஜென்ம பாவங்கள், பித்ரு கடன் நிவர்த்தி தலமாக விளங்குகிறது. வயிற்று வலி, தோல் நோய், மன நோயால் பாதிக்ப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

             சமஸ்கிருதத்தில் இத்தலம் “குக்ஷி’ என அழைக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் “குக்கி சுப்ரமண்யா’ என மாறி அந்தப் பெயரே நிலைத்து விட்டது. இத்தலத்தை சுற்றி 113 சிவத்தலங்கள் உள்ளன. 9 கால பூஜை நடக்கிறது. காலையில் கோ பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை ஆகியவற்றை கேரள தந்திரிகள் செய்கின்றனர். மற்ற பூஜைகளை அர்ச்சகர்கள் செய்கின்றனர். கால பைரவர் சன்னதி உள்ளது. நாகர் பிரகார ஈசான மூலையில் உள்ளது. நாக தோஷ பரிகார ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பழநி முருகன் கோயில் பிரசித்தமாக இருப்பது போல, கர்நாடக மாநில முருக ஸ்தலங்களில் பிரபலமானது “குக்கி சுப்ரமண்யா’ கோயிலாகும். இது பல யுகம் கண்ட கோயிலாகும். கந்தபுராணத்தில் “தீர்த்த சேத்ரா மகிமணிரூபணா’ அத்தியாயத்தில் இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள குமாரமலைப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இயற்கை காட்சிகளை தன்னகத்தே அடக்கியது இம்மலை. முருகப்பெருமான் தாரகாசூரனை அழித்த பின், தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இந்த நதிக்கு வந்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்குள்ள தீர்த்தத்தில் நீராடியுள்ளார். ஆதிசங்கரர், மத்வாச்சாரியார் ஆகியோர் இங்கு வந்துள்ளனர்.

திருவிழாக்கள்:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, நவராத்திரி ஆகிய விழாக்கள் நடத்தப்படுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குக்கி சுப்ரமண்யா

அருகிலுள்ள இரயில் நிலையம்

சுப்ரமண்யா சாலை

அருகிலுள்ள விமான நிலையம்

மங்களூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top