Sunday Dec 22, 2024

காஞ்சிபுரம் சித்ரகுப்தர் திருக்கோயில்

முகவரி

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில் 74, நெல்லுக்காரத் தெரு, காஞ்சிபுரம் பஸ்நிலையம் அருகில் காஞ்சிபுரம் மாவட்டம் – 631501. போன்: +91 44 2723 0571 97894 22852 94436 44256

இறைவன்

இறைவன்: சித்திரகுப்தர்

அறிமுகம்

சித்திரகுப்தர் கோயில், காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ள கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் சித்திரகுப்தரின் அரிய கோயிலாக விளங்குகிறது. இது ஒரு அரிதான கோயிலாகும். ஏனெனில் உலகில் காஞ்சிபுரத்தில் மட்டுமே சித்ரகுப்தனுக்கு ஆலயம் அமைந்துள்ளது. சித்திரை மாதத்தில் சித்ரகுப்தனுக்கு திருவிழா நடைபெறுகிறது. சித்திரை பவுர்ணமிக்கு முன்னாள் சித்ரகுப்தருக்கு கர்ணகி அம்பிகையுடன் திருமணம் நடைபெற்று பவுர்ணமி அன்று நகர்வலம் வருகிறார். இந்த ஆலயம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் ராஜவீதியில் அமைந்துள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழ்ந்துவருகிறார்கள். இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

புராண முக்கியத்துவம்

சித்ரகுப்த சுவாமியின் வரலாறு நான்கு விதமாக கூறப்படுகிறது. பார்வதி அம்பாள் சித்திரம் வரைந்தார். அழகான அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதினால் சித்திரகுப்தா என பெயர் பெற்றார். காமதேனுவின் வயிற்றில் உதித்தார் என்றும் அதனால் பசும்பால், பசும் தயிர் இவருக்கு அபிஷேகம், நைவேத்யம் செய்யக்கூடாது. எருமைப்பால், எருமைத்தயிர்தான் அபிஷேகம், நைவேத்யம் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவர். சித்திரை மாதத்தில் பிறந்த புத்திரன் ‘சித்திரபுத்திரன்’ சித்ரகுப்தன் எனப்பட்டார். ஆரம்பத்தில் எமதர்மன் தனியொரு நபராக கோடிக்கணக்கான மக்களின் பாவ, புண்ணியங்களை மேற்கொண்டார். அந்த பணி கடினமாக இருக்கவே சிவபெருமானிடம் வேண்டினார். அப்போது அவர் அருகில் நின்றிருந்த பிரம்மனிடம் எமதர்மனுக்கு ஒரு உதவியாளனைத் தரவேண்டியது உமது பொறுப்பு என்றார். இதனை எமனின் தந்தையான சூரியபகவானுக்குத்தான் அச்செயலை ஈடேறும்படி செய்ய இயலும் என அறிந்த பிரம்மா, சூரியனுக்குள் ஒரு அக்னியை தோற்றுவித்தார். சூரியனின் மனதுக்குள் காதல் ஏற்பட்டது. அதன்பொருட்டு சூரியன் வானில் சஞ்சரிக்கும்போது எதிர்பட்ட வானவில்லை ஏழு வண்ணங்களை ஒருங்கிணைத்து ஒரு பெண்ணாக உருமாற்றி அப்பெண்ணை நீளாதேவி என்று பெயரிட்டு அவளுடன் வாழ்ந்து வந்தார். அதன் காரணமாக ஒரு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் மற்றும் பவுர்ணமி நாளில் ஒரு மகன் பிறந்தார். அவருக்கு சித்திர புத்திரன் என்று பெயரிட்டனர். அக்குழந்தையின் இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாக தோன்றினார். பல வண்ணத் துணி வானவில்லான அவரது தாயின் பல வண்ணங்களை உணர்த்தும் பொருட்டுதான் சித்திரகுப்தருக்கு பலவண்ண துணியைச் சாத்துவார்கள். சித்ரகுப்தர் காஞ்சியில் சிவபெருமானை கடுமையாக பூஜை செய்தார். அதன் பயனாக அறிவாற்றலும் எல்லா சித்திகளும் கிடைத்தன. அதன் மூலம் சித்ரகுப்தர் படைப்புத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தார். இதனைக் கண்டு பிரம்மா உட்பட அனைவரும் அதிர்ந்தனர். இதனை சூரியனிடம் தெரிவித்தனர். உடனே சூரியன் தன் மகனான சித்ரகுப்தனிடம் மக்களின் இரவு,பகல் என்று பொழுதினைக் கணக்கிட்டு, மக்களின் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துபவன் நான். அதே போல் நீயும் மக்களின் கணக்கினை அதிலும் பாவ, புண்ணியத்தை கணக்கெடுப்பாயாக. படைப்புத் தொழில் உனக்கு உரியது அல்ல. அது பிரம்மனின் தொழில் என அறிவுறுத்தினார். மேலும், மகனுக்கு திருமணம் செய்தால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருவான் என்பதனை உணர்ந்த சூரியன், சித்திரகுப்தருக்கு மனைவியாக வரவேண்டி தவம் புரிந்த கன்னியர்களான சிவாம்சத்தில் உதித்து சத்திரிய தர்மத்தை வகித்த மயப்பிரம்மனின் மகள் நீலாவதி, அந்தணர் தர்மத்தை வகித்த விஸ்வ பிரம்மாவின் மகளான கர்ணகி ஆகியோர் தன் மகனுக்கு ஏற்ற மனைவியர் என்று நினைத்து அவர்களை திருமணம் செய்து வைத்தார். சித்ரகுப்தன் பணியினை மறந்து சந்தோஷமாக குடும்பம் நடத்தியதில் கலவரம் அடைந்த எமதர்மன் நேராக தந்தை சூரியனிடம் சென்று தன் குறையை விளக்கினார். சித்ரகுப்தனின் பொறுப்புகளை விளக்கி எமதர்மனுக்கு உதவிபுரிய அனுப்பிவைத்தார். தன் மனைவியருடன் எமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இப்பொழுதும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

நம்பிக்கைகள்

சித்ரகுப்த பூஜையை முறையாகச் செய்தால் உயர்நிலை அடையலாம் என்பது திண்ணம். கேது பகவானின் அதிதேவதை சித்ரகுப்தர். ஆகையால் சித்ரகுப்தரை வணங்குவதால் கேதுவினால் துன்பம் உண்டாகாது. வளமான வாழ்வு, மேன்மை, ஞானம், மோட்சம் அனைத்தும் கிட்டும். சித்ரகுப்தரைக் போற்றும், ஓம் யமாய தர்மராஜாய ஸ்ரீசித்ரகுப்தாய வை நமஹமந்திரத்தையும் எழுதி, தங்கள் பெயர், முகவரி, அன்றைய தேதி மற்றும் முழு வரவு செலவு கணக்கை எழுதி, அதை மடித்து படத்தின்முன் வைத்து பூஜிப்பார்கள். அடுத்துவரும் ஆண்டில் எதிர்பார்க்கும் வரவு செலவையும் உத்தேசமாகக் குறித்து, அது நிறைவேற சித்ரகுப்தரின் ஆசியை வேண்டுவார்கள்.

சிறப்பு அம்சங்கள்

சித்ரகுப்தருக்கென தனி கோயில் அமைந்திருப்பதே தலத்தின் சிறப்பு.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top