Tuesday Dec 24, 2024

தஞ்சையை விட பெரிய ஆவுடையார்

சிவலிங்கத்தில் பெரியது தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம் என்று அறிவீர்கள். லிங்கத்தைத் தாங்கும் ஆவுடையாரில் பெரியதைப் பார்க்க வேண்டுமானால், புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோயிலுக்குச் செல்ல வேண்டும். இங்குள்ள ஆவுடையாருக்கு 90 அடி நீளமுள்ள வேஷ்டி கட்டப்படுகிறது.

இரண்டாம் சுந்தர பாண்டியன் ஒரு கோயிலை எழுப்பினான்.  இது ராஜகோபுரமும், விமானமும் மிக உயரமாக அமைக்கப்பட்டது. மூலஸ்தானத்தில் பிரம்மாண்டமான ஆவுடையாருடன் கூடிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவரை “விருத்தபுரீஸ்வரர்’ என அழைத்தனர். “விருத்தம்’ என்றால் “பழமை’. இவர் பழம்பதிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப்பழமையான ஊராகக் கருதப்படுகிறது.

தஞ்சையை விட பெரிய ஆவுடையார்:

தஞ்சாவூர் லிங்கம் பெரியது. அதை விட, கங்கைகொண்டசோழபுரத்தின் லிங்கம் உயரம் கூடியது. தஞ்சை கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவுள்ள ஆவுடையாரும் கொண்டது. கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவுள்ள ஆவுடையாரும் கொண்டது. திருப்புனவாசல் கோயிலில் லிங்கம் 9 அடி உயரமே உடையதென்றாலும், ஆவுடையார் 82.5 அடி சுற்றளவு கொண்டது குறிப்பிடத்தக்கது. இதனால், ஆவுடையாருக்கு வஸ்திரம் அணிவிக்கும் போது, ஒருவர் பிடித்துக் கொள்ள இன்னொருவர் ஆவுடையாரை சுற்றி வந்து கட்டி விடுவார்.

லிங்கத்திற்கு 3 முழமும், ஆவுடைக்கு 30 முழமும் வேட்டி கட்டப்படுகிறது. இதை வைத்து “மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று’ என்ற வட்டாரமொழி இப்பகுதியில் சொல்லப்படுகிறது. இதை உத்தேசமாக 90 அடிக்கு நெய்து விடுகிறார்கள். இந்த வஸ்திரத்தை பக்தர்கள், ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து நெய்து காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக ஆவுடையை சுற்றி பலகை கட்டியிருக்கிறார்கள். இதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர்.

திருச்சியில் இருந்து புதுக்கோட்டை  இங்கிருந்து அறந்தாங்கி வழியாக 72 கி.மீ., தூரத்தில் திருப்புனவாசல். 

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top