ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோவில், இராமநாதபுரம்
முகவரி
ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோவில், தனுஷ்கோடி சாலை, இராமேஸ்வரம்- 623 526 இராமநாதபுரம் மாவட்டம், தொலைபேசி: +91-4573 – 221 223 மொபைல்: 97912 45363.
இறைவன்
இறைவன்: கோதண்டராமசுவாமி
அறிமுகம்
கோதண்டராமர் கோயில் ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில், வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கு நடுவில் உள்ள தனுஷ்கோடி தீவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், இலங்கையில் ராவணனை வதம் செய்த பின்பு ராமனிடம் சரணாகதி அடைந்த ராவணன் தம்பி விபீஷ்ணரை மீண்டும் இலங்கை மன்னராக ராமபிரான், சீதாதேவி ஆகியோர் முன்னிலையில் லட்சுமணர் பட்டாபிஷேகம் செய்து வைத்த இடமாகும். இந்த நிகழ்ச்சியை குறிக்கும் வகையில் கோவிலில், பட்டாபிஷேக சிலைகள் உள்ளன. இதையொட்டி ஆண்டு தோறும் கோவிலில் மே அல்லது ஜூன் மாதங்களில் பட்டாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம்.
புராண முக்கியத்துவம்
இராமாயணத்தில், விபீஷணன் தன் சகோதரன் இராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் அறிவுரை கூறினார். இராவணன் அதை ஏற்க மறுத்ததுடன், விபீஷணனை காலால் மிதிக்கச் சென்றார் .இதனால் வெறுப்புற்ற விபீஷணன் இராமருக்கு உதவி செய்வதற்காக இராமரிடம் சரணாகதி அடைந்தார். விபீஷணன் தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட இராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். விபீஷணனை பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், இராமருக்கு அமைக்கப்பட்ட கோயில் கோதண்டராமர் கோயில் ஆகும். இக்கோயிலில் இராமபிரான் அருகில் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறார். வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் இராமர், சீதை மற்றும் லட்சுமணர் காட்சி தருகின்றனர். இராமர் கையில் கோதண்டத்துடன் (வில்) இருப்பதால், “கோதண்டராமர்’ என்றும், தலம் “கோதண்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அருகில் “பரிந்துரைத்த ஆஞ்சநேயர்’ இருக்கிறார். விபீஷணன் இராமபிரானைத் தேடி வந்தபோது, இராமருடன் இருந்த வானரப்படையினர், விபீஷணன் மீது சந்தேகம் கொண்டு அடைக்கலம் தரக்கூடாது என்றனர். ஆனால், ஆஞ்சநேயர் இராமனிடம், விபீஷணனின் நடவடிக்கைகளை தான் இலங்கையில் கவனித்து வந்ததாகவும், அவனது சிறப்பியல்புகளையும் எடுத்துக் கூறி, அவனை இராமசேவைக்கு அனுமதிக்கும்படி பரிந்துரைத்தார். இதனால் இவர் இப்பெயர் பெற்றார்.
நம்பிக்கைகள்
ஆஞ்சநேயரிடம் நமது நியாயமான கோரிக்கைகளை தெரிவித்தால், அதை இராமரிடம் பரிந்துரைத்து நிறைவேற்றி வைப்பார் என்பது நம்பிக்கை. குறுக்கு வழியில் தலைமைப் பதவி அடைய நினைப்போரை ஒடுக்கி வைப்பவர் இந்த இராமர். தரம் கெட்ட ராவணனுக்குப் பதிலாக ஒழுக்கத்தைக் கடைபிடித்த விபீஷணரை இத்தலத்தில் பதவியில் அமர்த்தியதால், நியாயமான வழியில் தலைமைப்பதவி கிடைக்க இவரை வணங்கலாம். தீயவர் சேர்க்கையிலிருந்து விடுபடவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்
இராமரை ஆஞ்சநேயர் வணங்கும் காட்சியை எல்லாக் கோயில்களிலும் காண முடியும். ஆனால், இங்கு ராமரின் அருகில் விபீஷணன் வணங்கியபடி நிற்கிறான். இது அபூர்வமான காட்சியாகும். இராமனின் அருள் பெற்றதால் தான் விபீஷணனுக்கு ஆழ்வார் பட்டமும் கொடுத்து, “விபீஷணாழ்வார்’ என்கின்றனர். அளவில் சிறிய இந்தக்கோயிலில், கருடாழ்வாரும், முன் மண்டபத்தில் இராமானுஜரும் மட்டும் உள்ளனர்.
திருவிழாக்கள்
கோதண்டராமர் கோயிலில் இராமர், இலக்குவன், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா, வைகுண்ட ஏகாதசி, ராம நவமி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் உற்சவம் நடைபெறும். இராமாயணத் திருவிழாவின் போது, ராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், ராமன் ராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், இராமர் லிங்கப் பிரதிஷ்டை செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தி காண்பிக்கப்படும்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோதண்டம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
இராமேஸ்வரம்
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி