மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில்,
மருதம்பட்டினம், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610001.
இறைவன்:
அபிமுக்தீஸ்வரர்
இறைவி:
மதுரபாஷினி
அறிமுகம்:
திருவாரூரின் தேர்வீதியின் தென்கிழக்கு மூலையில் இருந்து பிரிந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் இவ்வூரை அடையலாம். அழகான இயற்கை எழில் நிரம்பிய கிராமம் மருதம்பட்டினம். இவ்வூரில் இரு சிவன்கோயில்கள் உள்ளன. முதலாவது தான்தோன்றிஈஸ்வரர் இரண்டாவது அபிமுக்தீஸ்வரர், அபி என்றால் அபயம் எனும் ஒரு பொருளில் இங்கு வந்து வழிபடுவோருக்கு அபயம் அளித்து வாழ்வின் முடிவில் முக்தியும் தரவல்ல இறைவன் இவர். பழமையான கோயில் பல சிதைவுகளை கண்டதால் முற்றிலும் மாற்றம் கண்டுள்ளது.
புராண முக்கியத்துவம் :
திருவாரூர் தேர் திருவிழா பங்குனி உத்திர கொடியேற்றத்துக்கு முதல்நாள் பெரியகோயில் சண்டிகேஸ்வரர் மருதம்பட்டினம் அபிமுத்தீச்வரர் ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிறார். அங்கு பூஜைகள் செய்யப்பட்டு ஒரு பிடி மண்ணுடன் திரும்பவும் பயணமாவார். ஆரூர் தலத்துக்கு இந்த ஆலயத்தில் புனித மண் எடுத்துதான் முளைப்பாலிகை வளர்த்து விழாவைத் தொடங்குவார்கள். ஏன் இப்படி? என்பதற்கு பெரியோர்கள் ஒரு காரணம் சொல்கின்றனர். வனவாசத்தின் போது பாண்டவர் ஐவரும் இங்கு வருகின்றனர். அப்போது யார் இறைவனை அதிகம் பூசிக்கின்றனர், என சர்ச்சை வர, இறைவனே வந்திறங்கி, இதுகாறும் எனது பூஜையின் போது அர்ப்பணம் செய்த பொருட்களை கொண்டு வந்து காட்டுங்கள் என கூற பீமனை தவிர நால்வரும் வண்டி நிறைய பொருட்களை கொண்டு வந்து காட்டுகின்றனர். அப்போது இறைவன் வாருங்கள் பீமனது அர்ப்பணத்தை நானே காட்டுகிறேன் என கூறி அழைத்து வருகிறார். அங்கே மலை போல பூக்களும், பழங்களும் உணவுபொருட்களும் திரவியங்களும் குவிந்து கிடக்கின்றன, நீங்கள் கையால் அர்ப்பணம் எடுத்து வைப்பீர்கள், ஆனால் பீமனோ தான் பார்க்கும் பூந்தோட்டம், பழத்தோட்டம், நெல்வயல்கள் ஆகியவற்றை “சர்வம் சிவார்ப்பணம்” என கூறி மனதால் அர்ப்பணித்துவிடுவான், உணவு உண்ணும் முன்னர் “சர்வம் சிவார்ப்பணம்” என கூறியே உண்பான் அதனால் அவனது அர்ப்பணம் மலையாக குவிந்து கிடக்கிறது என்றார். அந்த இடம் தான் இந்த மருதம் பட்டினம் என்கின்றனர். அதனால் தான் இங்கு வந்து முளைப்பாலிகை வளர்க்க மண் எடுக்கின்றனர்.
நம்பிக்கைகள்:
பிறந்து நீண்ட நாளாகியும் சரியாக பேச்சுவராத குழந்தைகளுக்கு இங்குள்ள மதுரபாஷினி அம்மனுக்கு நேர்ந்து கொண்டு பிரார்த்தித்தால் விரைவில் குழந்தைக்கு தெளிவாகவும் இனிமையாகவும் பேச்சு வரும் திக்குவாய் போன்ற குறை போகும். குரல் சீராகும். வாக்கு வன்மைபெறும் என்பது நம்பிக்கை. வாய்ப்பாட்டு இசைப்பயிற்சி மேற்கொள்வோரும் இசை ஆர்வம் கொண்டவர்களும் இந்த அம்பிகையை வந்து துதித்தால் நன்மை பெறுவர்..
சிறப்பு அம்சங்கள்:
முகப்பில் மொட்டை கோபுரம் மூன்று நிலை ராஜகோபுரம் ஆகி உள்ளது. ராஜகோபுரத்தில் இருந்து நீண்ட மண்டபம் கருவறை முகப்பு வரை நீண்டுள்ளது. கிழக்கு நோக்கிய இறைவன் அபிமுக்தீஸ்வரர் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார். கருவறை வாயிலில் இரட்டை விநாயகர்கள் உள்ளனர். கருவறையை சுற்றி நான்கு மூலைகளிலும் நிருதி அக்னி ஈசான்யம் வாயு என நான்கு லிங்க மூர்த்திகள் உள்ளனர். தென்புறம் இரு மூர்த்திகளும் எதிரேதிரேயும், வடபுறம் உள்ள மூர்த்திகள் இருவரும் எதிரெதிரே உள்ளனர்.
மூலவரோடு சேர்த்து கோயிலில் ஐந்து லிங்கங்கள். இவற்றைப் பாண்டவர்கள் ஐவரும் வனவாசத்தின் போது தனித்தனியாக பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்ததாக ஐதீகம். இதனால் இக்கோயில் பஞ்சலிங்கத் தலம் என கூறப்படுகிறது. கருவறை கோட்டத்தில் தக்ஷ்ணமூர்த்தி, துர்க்கை உள்ளனர். அபிமுத்தீஸ்வரருக்கு இடப்பக்கம் அம்பாள் தென்புறம் நோக்கி தனிச் சன்னதி கொண்டுள்ளார். அம்பாளுக்கு பெயர் மதுரபாஷினி, தமிழில் தேன்மொழியாள் என்று பொருள்.
பிரகாரத்தில் ஒரு வில்வமரத்தின் கீழ சிறிய சன்னதியில் விஸ்வநாதர் உள்ளார். வடகிழக்கில் பைரவர் சூரியன் இருவரும் தனி சன்னதிகளில் மேற்கு நோக்கி உள்ளனர். சண்டேசர் அழகாக உலோக திருமேனி போல் காட்சியளிக்கிறார். வடகிழக்கில் கிணறு ஒன்றும் உள்ளது. பிரகாரத்தில் தென்மேற்கில் விநாயகரும் நேர் பின்புறம் சுப்ரமணியரும், வடமேற்கில் மகாலட்சுமியும் உள்ளனர். பிற கோயில்களில் இருந்து மாறுபட்ட கட்டுமானம் கொண்டது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மருதம்பட்டினம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி