Friday Dec 27, 2024

நம்பு நாயகியம்மன் திருக்கோயில், இராமேஸ்வரம்

முகவரி :

நம்பு நாயகியம்மன் திருக்கோயில்,

தனுஷ்கோடி,

இராமேஸ்வரம்,

தமிழ்நாடு 623526

இறைவி:

நம்பு நாயகியம்மன்

அறிமுகம்:

ராமநாதசுவாமி கோயிலில் இருந்து 8 கி.மீ தொலைவில் நம்பு நாயகியம்மன் கோயில் உள்ளது. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோயில் ராம்நாடு மாவட்டத்தில் அமைந்துள்ளது மற்றும் அப்பகுதியில் உள்ள உள்ளூர் மக்களால் நிர்வகிக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள நம்பு நாயகி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள மூலவர் நம்பு நாயகியம்மன் என்று அழைக்கப்படுகிறார். ராமேஸ்வரத்தில் உள்ள பிரதான கோவிலில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

        இங்கு தட்சிணத்துருவன், பச்சிமத்துருவன் என்ற இரண்டு முனிவர்களின் கடுமையான தவத்தை கண்டு தேவி பர்வதவர்த்தனி காளிவடிவில் நேரில் காட்சியளித்ததாகவும். தென்கிழக்கு முகமாக காட்சியளித்ததால் தக்ஷ்ணா காளியாக பெயர் பெற்றதாகவும், அன்றிலிருந்து இரண்டு முனிவர்களும் அந்த காட்டிலேயே காளியை வழிபட்டு வந்ததாகவும், அவளின் அருளால் பிணியுற்றவர்களுக்கு நோய்போக்கும் பணியை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இரண்டு முனிவர்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு கற்பகோடி காலம் கண்டவர்களாய் இப்பகுதியிலேயே ஆழ்ந்த நிஷ்டையில் சமாதியிலிருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது.

ராமேஸ்வரம் சிங்களர்களின் பிடியில் இருந்தபோது சூலோதரன் என்ற சிங்கள மன்னன் இந்த தீவின் வடக்கு பகுதியில் உள்ள உயரமான மண் குன்றில் கோட்டை ஒன்றை அமைத்து ஆட்சிசெய்து வந்தான். அந்த மன்னனுக்கு தீராத நோய் கண்டு எந்த மருத்துவமும் பயனளிக்காத நிலையில் தெக்ஷணா காளியின் கோயிலுக்கு வந்து சேர்ந்தான். உடன் இருந்த சகோதரர்கள், அமைச்சர்களின் கேலிப்பேச்சுக்கு இடையில் மிகுந்த நம்பிக்கையுடன் தக்ஷ்ண காளியே கதி என்று முடிவு செய்த சூலோதரன் காளிஅம்மன் வீற்றிருந்த குடிசையின் அருகிலேயே ஒரு சிறிய குடிலை அமைத்து அங்கேயே தங்கினான்.

கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள நன்னீர் தடாகங்களில் நீராடி காளியை வணங்கிவர முற்றிலும் நோய் நீங்கி நலமடைந்தான். நம்பி வந்து வணங்கியதால் துயர்துடைத்த தெக்ஷணா காளி அம்மனுக்கு சிறிய அளவில் கோயில் ஒன்றை அமைத்த சூலோதரன் தன்னைப்போல் தீராத பிணிகளுடன் வரும் பக்தர்கள் தங்கி நலமடைந்து செல்ல பல வசதிகளையும் செய்து கொடுத்தான். காளியை கேலி செய்தவர்கள் பெரும் நோய்க்கு ஆளானார்கள். எனவே “”நம்பு நாயகியை வணங்கினால் வம்பில்லை,” என்ற சொலவடை உருவாயிற்று. பின்னாளில் பல்வேறு காலகட்டத்தில் தற்போது உள்ள பழமையான கோயில் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள நன்னீர் தடாகங்கள் பல்வேறு நோய்களை போக்கும் தன்மையுடையதாக விளங்குவதால் இவைகள் சர்வரோக நிவாரண தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மராட்டிய பிராமணர்களின் குலதெய்வமாக விளங்கும் நம்புநாயகியின் திருப்பெயரை இந்த பகுதி மக்களும் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுகின்றனர். “”குழந்தை வரம் வேண்டுமென்று நம்பியே கும்பிட்டேன் நாயகியை, பூ கொடுத்தால் வாடுமென்று எனக்கு நம்பு நாயகியாள், மைந்தன் தந்தாள் அவள் பேரு சொல்ல” என்று பெண்கள் பாடுகின்ற தாலாட்டு பாட்டு வரிகள் கேட்டு தூங்கும் மழலைகள் ஏராளம்.

நம்பிக்கைகள்:

குழந்தை இல்லாதவர்களும், திருமணம் தள்ளிப்போகும் கன்னிகளும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் விரதமிருந்து செவ்வாய், வெள்ளிகிழமைகளில் நம்புநாயகியை வழிபட்டால் விரைவில் பிரார்த்தனை பலிக்கும். தீராத நோய்களை உடையவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் இக்கோயிலிலேயே மாதக்கணக்கில் தங்கி சர்வரோக நிவாரண தீர்த்தத்தில் தினமும் நீராடி குணமடைகிறார்கள். கோயில் பூஜாரி தரும் அம்மனுக்கு சாத்திய மஞ்சள் காப்பு பிரசாதத்தை உண்டு குணமடைந்து செல்லும் அதிசயமும் உண்டு.

சிறப்பு அம்சங்கள்:

இக்கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள நன்னீர் தடாகங்கள் பல்வேறு நோய்களை போக்கும் தன்மையுடையதாக விளங்குவதால் இவைகள் சர்வரோக நிவாரண தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

திருவிழாக்கள்:

நவராத்திரி

காலம்

14 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இராமேஸ்வரம்தனுஷ்கோடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

இராமேஸ்வரம்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top