நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில், கர்நாடகா
முகவரி
நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில், நஞ்சன்கூடு, கர்நாடகா – 571301
இறைவன்
இறைவன்: நஞ்சுண்டேஸ்வரர் இறைவி: பார்வதி
அறிமுகம்
கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு பகுதியில் புகழ்பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயில், ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. அதன் இருப்பிடத்தின் அடிப்படையில், இந்த கோவில் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது காவேரியின் துணை நதியான கபிலா நதியின் வலது கரையில் உள்ளது. கோவில் 160 அடி, 385 அடியில் 50,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. இது கர்நாடகாவின் மிகப்பெரிய கோவிலாக உள்ளது. 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த ஆலய வளாகத்தில் அடுத்தடுத்து வம்சங்களின் அரசர்களால் பல கட்டிடங்கள் சேர்க்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும், சிக்க ஜாதரா மற்றும் பஞ்சமஹரத் திருவிழாவில் கோவில் முக்கிய பங்கு வகிக்கிறது. மஹா சிவராத்திரி மற்றும் நவராத்திரியும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாவிக்கும் நஞ்சுண்டேஸ்வரர் சுயம்பு லிங்கமாக தோன்றியவர். இங்கு மூலவராக இருக்கும் சிவலிங்கத்தின் மீது பரசுராமரால் வெட்டப்பட்ட கோடு இருக்கின்றது. அனைத்து சிவன் கோவில்களிலும் சிவனுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில் இருக்கும் லிங்கத்திற்கு தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
கொடுமையான விஷத்தன்மை கொண்ட கேசியன் என்னும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். அந்த அசுரனிடம் இருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்காக தேவர்கள் சிவனிடம் தஞ்சம் அடைந்தனர். சிவனும் தேவர்களும் சேர்ந்து ஒரு சிறிய நாடகத்தை நடத்தினார். தேவர்கள் கபிலா, கவுண்டினி, மணிகர்ணிகை என்ற பெயர் கொண்ட மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் ஒரு யாகம் நடத்தப் போவதாகவும், அந்த யாகத்திற்கு அசுரனை அழைத்து யாக குண்டத்தில் வீழ்த்தி வதம் செய்ய ஒரு நாடகத்தை திட்டம் தீட்டினர். அதுபடியே யாகமும் நடந்தது. அசுரனும் அந்த யாகத்திற்கு வருகை தந்தான். அந்த அசுரனை தேவர்கள் வரவேற்பது போல நாடகம் ஒன்றினை அரங்கேற்றி, தக்க சமயத்தில் யாககுண்டத்தில் உள்ள நெருப்பில் அசுரனை தள்ளி விட்டனர். அப்போது சிவன் அக்னி வடிவில் மாறி, விஷத்தன்மை கொண்ட அசுரனை விழுங்கி விட்டார். இதனால் தேவர்கள் அந்த இடத்திலேயே சிவபெருமானை மக்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டனர். இதன் மூலம் சிவபெருமான் அந்த இடத்திலேயே சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி மக்களுக்கு காட்சி தந்தார். விஷத்தன்மை கொண்ட அசுரனை விழுங்கியதால் இந்த ஈஸ்வரனுக்கு ‘நஞ்சுண்டேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. சிறிது நாட்களுக்குப் பின்பு இயற்கை சீற்றத்தினால் இந்த லிங்கமானது மறைந்துவிட்டது. தான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் வேண்டி பரசுராமர் இந்த லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக வந்தார். ஆனால் லிங்கம் அந்த இடத்தில் இல்லை. செய்வதறியாது தவித்த பரசுராமர் அந்த இடத்திலிருந்த செடிகொடிகளை எல்லாம் அகற்றி சுத்தம் செய்ய தொடங்கினார். அந்த சமயம் ஓரு இடத்தில் செடியை வெட்டிய போது, அந்த இடத்திலிருந்து ரத்தம் வந்தது. பயந்துபோன பரசுராமர் செடிகளை விலக்கி பார்த்தார். அந்த இடத்தில் ஒரு லிங்கம் இருந்ததை அறிந்துகொண்டார். செய்த தவறுக்கு மன்னிப்பை சிவபெருமானிடம் கேட்டுக் கொண்டார். அந்த சமயம் சிவபெருமான் பரசுராமருக்கு காட்சி தந்து, பாவ விமோசனம் அளித்தார். அதன்பின்பு பரசுராமரால் இந்த லிங்கம் திரும்பவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பரசுராமரின் கையால் வெட்டிய காயமானது இன்றுவரை சிவலிங்கத்தில் தெரிகிறது. உள்ளூர் புராணங்களின் படி, கெளதம முனிவர் அந்த இடத்தில் லிங்கத்தை நிறுவி கோவிலுக்கு அடித்தளம் அமைத்தார். 9 ஆம் நூற்றாண்டில், கங்கைகள் ஒரு சிறிய, சதுர கர்ப்பகிரகத்தை கட்டினார்கள். விஜயநகர காலத்தில் கட்டிடக் கலைஞர்கள் பார்வதி மற்றும் நாராயண சன்னதிகளுடன் கோவில் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டனர். 9 மாடி உயர திராவிட வகை கோபுரம் 1849 ஆம் ஆண்டில் இராணி மூன்றாம் கிருஷ்ணராஜா வாடியார் மற்றும் தேவஜம்மன்னியின் இராணியால் கட்டப்பட்டது. மற்றொரு முக்கிய ஈர்ப்பு, கோவில் வளாகத்தில் உள்ள உயரமான கல் காளை தளவாய் விக்ரமராயால் 1644 இல் கட்டப்பட்டது. ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரும் கோவிலுக்கு பங்களிப்பு செய்துள்ளனர். திப்பு சுல்தானின் யானைக்கு ஹக்கீமால் சிகிச்சையளிக்க முடியாத கண் நோய் ஏற்பட்டபோது, அவர் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரரை பிரார்த்தனை செய்தார் என்று நம்பப்படுகிறது. யானையின் கண் குணமாகி, திப்பு சுல்தான் கடவுளுக்கு மரகத பச்சை லிங்கத்தை பரிசளித்தார்.
நம்பிக்கைகள்
முன்வினை பாவம் நீங்க, அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்க இவருக்கு பஞ்சாமிர்தம் மற்றும் அன்னத்தால் அபிஷேகம் செய்து, வில்வ இலை, வெற்றிலை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வேண்டிக்கொள் கின்றனர். விஷக்கடி பட்டவர்கள், தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, குணமாவதாக நம்பிக்கை. சிவலிங்கத்தில், பரசுராமரால் வெட்டப்பட்ட தழும்பு இருக்கிறது. சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான், லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால் இங்கு தினசரி பூஜையின்போது அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. விஷத்தன்மையுடைய அசுரனை விழுங்கியதால் சிவன் இங்கு உக்கிரமாக இருப்பதாகவும், அதனை குறைக்கும் விதமாக இந்த அபிஷேகம் செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.. உச்சிக்காலத்தில் கவுதம மகரிஷி, சிவபூஜை செய்வதாக ஐதீகம்.
சிறப்பு அம்சங்கள்
இத்தலத்து சிவன், ஈசானிய (வடகிழக்கு) திசையை பார்த்திருப்பதாக ஐதீகம். எனவே நந்தி, இவரது பார்வையில் படும்படியாக வடகிழக்காக சற்றே விலகியிருக்கிறது. இங்குள்ள கோபுரமே லிங்கமாக கருதப்படுவதால், கோயிலுக்கு வெளியிலும் ஒரு நந்தி இருக்கிறது. இதுதவிர, கோயில் பிரகாரத்தில் அலங்கார நந்தி வெளியே பார்த்தபடி, தனிச்சன்னதியில் இருக்கிறது. பிரதோஷத்தன்று இந்த நந்திக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. இங்குள்ள யோக தெட்சிணாமூர்த்தி, 14 சீடர்களுடன் காட்சி தருவது விசேஷம். இவரது பீடத்திலும் நந்தியும் இருக்கிறது. பவுர்ணமிதோறும் இரவில் சுவாமி தேரில் ரதவீதி சுற்றுவதும், அமாவாசைகளில் தீர்த்தவாரி கண்டு, பல்லக்கில் புறப்படுவதும் விசேஷம். சிவனின் விசேஷமான 24 மூர்த்தங்கள், திப்பு சுல்தான் பிரதிஷ்டை செய்த மரகத லிங்கம், வெண்ணெய் கணபதி, நாகத்தின் மத்தியில் சுப்பிரமணியர், நின்ற கோலத்தில் சண்டிகேஸ்வரர், பத்மாசனத்தில் ஆயுதங்களுடன் நவக்கிரக சன்னதி ஆகியோர் இங்கு அவசியம் தரிசிக்க வேண்டியவர்கள் ஆவர்.
திருவிழாக்கள்
தேர் உற்சவம், ‘பெரிய ஜாதரா’ (பெரிய தேர் திருவிழா), ஒரு ‘சிக்கா ஜத்ரா’ (சிறிய தேர் திருவிழா) ஆகியவை இந்த இடத்தில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் சில விழாக்கள். இந்த நேரத்தில் தெப்ப உற்சவம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை தேர் திருவிழா நடைபெறும். நஞ்சுண்டேஸ்வரர், கணபதி, சுப்பிரமணியன், சண்டிகேஸ்வரர் மற்றும் பார்வதி தேவி ஆகிய ஐந்து தேர்களில் உள்ள பாரம்பரிய சிலைகளுக்கு பாரம்பரிய பூஜைகள் வழங்கப்படுகின்றன. பூஜைக்குப் பிறகு பல பக்தர்கள் தேரை ஊர் முழுவதும் இழுக்கின்றனர்.
காலம்
9 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சாமராஜ்நகர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நஞ்சன்கூடு
அருகிலுள்ள விமான நிலையம்
மைசூர்