Sunday Dec 22, 2024

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில், திருச்செந்தூர்

முகவரி

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டம் – 628205

இறைவன்

இறைவன்: சுப்பிரமணியசுவாமி

அறிமுகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது. இது தேவார வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை அண்டி அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் இதுவாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் “திருச்சீரலைவாய்” என முன்னர் அழைக்கப்பட்டது.

புராண முக்கியத்துவம்

தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், “செயந்திநாதர்’ என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே “செந்தில்நாதர்’ என மருவியது. தலமும் “திருஜெயந்திபுரம்’ (ஜெயந்தி – வெற்றி) என அழைக்கப்பெற்று, “திருச்செந்தூர்’ என மருவியது.

சிறப்பு அம்சங்கள்

முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது. 157 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு இலிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் இலிங்கம் இருக்கிறது. இவ்விரு இலிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.பஞ்சலிங்க தரிசனம் இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் “பஞ்சலிங்க’ சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன. வெளியிலிருந்தபடி முருகரை தரிசனம் செய்யும்போதே பஞ்சலிங்க தரிசனம் செய்ய இயலாது. மூலவர் முருகரின் இடதுபுறம் உள்ள சிறு வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலது புறம் வந்து பாதாள பஞ்சலிங்க தரிசனம் செய்ய வாரநாட்களில் இயலும்.இதற்கு கோயில் சார்பில் ஐந்து ரூபாய் கட்டண நுழைவுச்சீட்டு உண்டு. கூட்டநெரிசல் அதிகம் உள்ள சமயம் இந்த நுழைவுச்சீட்டு வழங்கப்படுவதில்லை. ராஜகோபுரம் திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

திருவிழாக்கள்

பங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

காலம்

2000-3000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருச்செந்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்செந்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top