Monday Dec 23, 2024

திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு – 613 204 தஞ்சாவூர் மாவட்டம். போன் +91-436 -2260 332, 94430 08104

இறைவன்

இறைவன்: ஐயாறப்பர், பஞ்ச நதீஸ்வரர் இறைவி: தரும சம்வர்த்தினி

அறிமுகம்

திருவையாறு ஐயாறப்பர் கோயில் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் காவிரி கரையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்[1] . இக் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 51வது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் ஐயாறப்பர், தாயார் தரும சம்வர்த்தினி.

புராண முக்கியத்துவம்

நந்தீஸ்வரருக்கும், நந்திகேசருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நந்தீஸ்வரர் சிவபெருமானின் முன் காளை வடிவில் இருப்பவர். நந்திகேசர் திருக்கைலாய பரம்பரையை உருவாக்கியவர். தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகியவை திருக்கைலாய பரம்பரையை சேர்ந்தவை. சிலாது மகரிஷி என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த குழந்தையை வைத்துவிட்டு மூடி திறந்தார். அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டு சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு ஐந்து விதமான அபிஷேகம் செய்தார். அம்பிகையின் பால், நந்தி வாய் நுரை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் இறைவன் ஐயாறப்பர் எனப்பட்டார்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

இங்கே அம்பாள் அறம் வளர்த்த நாயகி எனப்படுகிறாள். ஆண்கள் தர்மம் செய்வதைவிட குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள்.எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. இவ்வூர் இறைவனுக்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வந்தார். ஒருமுறை காசிக்கு சென்றதால் அவரால் பூஜைக்கு உரிய நேரத்தில் வரமுடியவில்லை. இந்த தகவல் அவ்வூர் அரசனுக்கு சென்றது. அவன் உடனடியாக கோயிலுக்கு வந்து பார்த்தபோது சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார். மறுநாள் காசிக்கு சென்ற அர்ச்சகர் ஊரிலிருந்து திரும்பினார். ஊராரும் அரசனும் ஆச்சரியப்பட்டனர். இறைவன் இந்த அர்ச்சகர் மீது கொண்ட அன்பால் அர்ச்சகரின் வடிவில் வந்து, தனக்குத்தானே அபிஷேகம் செய்து கொண்டது தெரிய வந்தது. தன்னை வணங்குபவர்களுக்கு அன்பு செய்பவர் ஐயாறப்பர். அப்பர் பெருமான் இத்தலத்தில் வழிபட்டு கைலாய காட்சியை பெற்றார். எனவே இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம். மானசரோவர் ஏரியில் மூழ்கிய அப்பர் பெருமான் இந்த திருத்தலத்தில் உள்ள குளத்தில் வந்து எழுந்தார். சூரிய புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் இந்த குளம் மிகவும் விசேஷமானது. இங்கே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக் குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சன்னதி சுற்ற தடை இங்கே மூலவர் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். அவரது ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆமையை மிதித்த தெட்சிணாமூர்த்தி சுவாமி பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரை பெருமாள் வழிபட்டிருக்கிறார். பெருமாள் வழிபட்ட குரு தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளார். எனவே இவருக்கு ஹரிஉரு சிவயோக தெட்சிணாமூர்த்தி’ என பெயர். இவர் முயலகனுக்கு பதிலாக ஆமையை மிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது. அந்த அளவிற்கு இந்த கோயிலில் கட்டடக்கலை அமைந்துள்ளது. வெளிநாட்டில் உள்ள இன்ஜினியர்கள் இந்த சப்தம் கேட்பதுபற்றி ஆய்வு செய்தனர். ஆனால், இதற்கான காரணத்தை அறிய முடிய வில்லை. நவக்கிரகங்களில் இது சூரிய ஸ்தலமாகும். சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார். இக்கோயில் ஐந்து பிரகாரங்களை கொண்டது. இங்குள்ள முக்தி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால் மனம் நிம்மதி கிடைக்கிறது. சூரியன் இந்த கோயிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார். தட்சிணமாமூர்த்தி மேல் நோக்கிய வலது கரத்தில் கபாலமும், கீழ் நோக்கிய வலது கரத்தில் சின்முத்திரையும், மேல் நோக்கிய இடது கரத்தில் சூலமும், கீழ் நோக்கிய இடது கரத்தில் சிவஞான போதமும் காணப்படுகின்றன.

திருவிழாக்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் திருவையாற்றில் ’சப்தஸ்தானம்’ திருவிழா கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி, நவராத்திரி, சித்திரை திருவிழா

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவையார்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top