Monday Dec 23, 2024

திருப்புடைமருதூர் நாறும்பூநாத சுவாமி திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அருள்மிகு நாறும்பூநாத சுவாமி திருக்கோயில்,

திருப்புடைமருதூர்,

திருநெல்வேலி மாவட்டம் – 627 426.

போன்: +91- 4634 – 287244,96262 90350

இறைவன்:

நாறும்பூநாத சுவாமி

இறைவி:

கோமதியம்பாள்

அறிமுகம்:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்புடைமருதூர் நகரில் அமைந்துள்ள நாறும்பூநாத சுவாமி கோயில், சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் நாறும்பூநாத சுவாமி என்றும், தாயார் கோமதியம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு சிவன் சாய்வான சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அருள்புரியும் சிவபெருமான், தலையில் வெட்டுப்பட்ட கோடரியின் தடம், மார்பில், மானின் மீது பாய்ந்த அம்பு பட்ட தடத்துடன் காட்சி தருகிறார். சுவாமி, மன்னருக்கு அருள்புரிந்து காட்சி கொடுத்த மருதமரம் இன்றும் கோயிலுக்கு பின்புறம் தாமிரபரணி ஆற்றின் கரையில் விநாயகர் ஆலயத்திற்கு இடப்பக்கமுள்ள மண்டபத்தில் உள்ளது. இத்தலவிநாயகர் அனுக்கை விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

புராண முக்கியத்துவம் :

 ஒரு சமயம் சிவனிடம் தேவாதி தேவர்கள் அனைவரும் காசிக்கு ஒப்பான தலத்தைக் காட்டுமாறு வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவன், பிரம்மதண்டத்தை தரையில் இடும்படிக் கூறினார். அதன்படி, அவர்கள் பிரம்மதண்டத்தை இடவே, அது தாமிரபரணி ஆற்றை அடைந்து திருப்புடைமருதூரில் தற்போது தலம் வீற்றிருக்கும் பகுதிக்கு அருகே கரையில் ஏறி நின்றது. பிரம்மதண்டம் நின்ற இடமே காசிக்கு ஒப்பான தலம் என சிவன் கூறவே, இவ்விடத்திற்கு வந்த தேவர்கள் பிரம்மதண்டத்தை பூஜை செய்து சிவனது அருளைப்பெற்றனர்.

பிற்காலத்தில், இப்பகுதியை வீரமார்த்தாண்ட மன்னர் ஆட்சி செய்து வந்த போது மருதமரங்கள் நிறைந்த வனமாக இருந்த இங்கு வேட்டைக்கு வந்தார். மான் ஒன்றினை கண்ட மன்னன் அதனை தனது அம்பினால் வீழ்த்தினார். அம்பினால் காயம்பட்ட மான் அங்கிருந்து தப்பி ஓடி ஓர் மருதமரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்தது. மானை மீட்க அம்மருதமரத்தை வெட்டும்படி மன்னர் உத்தரவிட்டார். அதன்படி, சேவகர்கள் கோடரியால் மரத்தை வெட்டவே அவ்விடத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. பின், மன்னர் அவ்விடத்தில் பார்த்தபோது தலையில் கோடரியால் வெட்டுப்பட்ட நிலையில் சிவலிங்கம் இருந்தது. மான் வடிவில் வந்து அருள்புரிந்தது சிவன்தான் என அசரீரி கேட்கப்பெற்ற மன்னர், அவரது உத்தரவுப்படி இவ்விடத்தில் ஆலயம் எழுப்பி வழிபட்டார

நம்பிக்கைகள்:

திருமணத்தடை, புத்திரதோஷம், தீராத பிணிகள், குடும்ப கஷ்டங்கள், துன்பங்கள் நீங்கிடவும், குடும்ப ஐஸ்வர்யம் பெறவும், கல்வி, கேள்விகளில் சிறக்கவும், வியாபாரம் விருத்தியடையவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்:

      வியாழபகவானை தனது குருவாக ஏற்றிருந்த இந்திரன், அவர் தன்னை மதிக்காமல் இருந்ததால் அவரை விடுவித்த விஸ்வரூபன் எனும் அசுரனை தனது குருவாக ஏற்றுக்கொண்டான். காலப்போக்கில் அவன் தேவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், அசுரர்கள் சிறக்க யாகம் நடத்துவதை அறிந்து கொண்ட இந்திரன், கோபங்கொண்டு அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தான். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. தனது தோஷம் நீங்க இந்திரன், இந்திராணியுடன் இங்கு வந்து தாமிரபரணி ஆற்றின் கரையில் சுரேந்திரமோட்ச தீர்த்தத்தில் நீராடி தவம் செய்து சிவனை வணங்கி தனது தோஷம் நீங்கப்பெற்றான்.

சாய்ந்தநிலையில் சிவலிங்கம்: ஒரு முறை சிறந்த சிவபக்தரான கருவூர் சித்தர் இத்தலத்தில் அருள்புரியும் சிவனை தரிசிக்க வந்தார். அவர் தாமிரபரணியின் வடகரைக்கு வந்தபோது, ஆற்றில் பெறும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றைக்கடக்க முடியாத அவர், அக்கரையில் இருந்து கொண்டே தென்கரையில் மலர்கள் பூத்துக்குலுங்கிய மருதமரங்கள் நிறைந்த வனத்தின் மையத்தில் வீற்றிருந்த சிவபெருமானை நோக்கி “நாறும் பூவின் நடுவே நிற்பவனே நினை தரிசிக்க எனக்கு அருள்புரிவாயோ’ என மனமுருகி வேண்டி பாடினார். அவரது பாடலில் மயங்கிய சிவன், தனது இடச்செவியில் கைவைத்து ஒருபுறம் சாய்வாக திரும்பி, ரசித்து கேட்டார் பின்பு தன்னை நினைத்து ஆற்றைக்கடக்கும் படி கருவூர் சித்தரிடம் சிவன் கூறிடவே, அதன்படி ஆற்றைக் கடந்த கருவூரார் அவரை வணங்கி அருள் பெற்றார். இவ்வாறு, கருவூர் சித்தரின் பாடலை செவிசாய்த்து கேட்டதால், இங்கு சிவலிங்கம் இடப்புறம் சாய்வாக திரும்பிய நிலையில் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் அருள்புரியும் சிவபெருமான், தலையில் வெட்டுப்பட்ட கோடரியின் தடம், மார்பில், மானின் மீது பாய்ந்த அம்பு பட்ட தடத்துடன் காட்சி தருகிறார். காயம்பட்ட சுயம்புமூர்த்தி என்பதால் அவரது காயத்தை ஆற்றிடும் பொருட்டு சந்தனாதி தைலம் மட்டுமே பூசி பூஜை செய்யப்படுகிறது. சுவாமிக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கோமதியம்பாள், கோமாள் மலையின் கோமதி நதியில் இருக்கிறாள் என அசரீரி கேட்கப்பெற்று அதன்படி அந்நதியில் இருந்து எடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப் பட்டவளாக ருத்ராட்சை மேனியை உடையவளாக பொலிவுற அருட்காட்சி தருகிறாள். சுவாமிக்கு முன்வலப்புறத்தில் பிரம்மதண்டம் தனியே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்:

தைப்பூசம் 10 நாட்கள், ஆனி உத்திரம், ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி கந்தசஷ்டி, பங்குனி உத்திரம்.

காலம்

1800 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்புடைமருதூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வீரவநல்லூர்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top