Thursday Dec 26, 2024

சோகத்தூர் யோக நரசிம்மர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி :

அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில்,

சோகத்தூர்,

திருவண்ணாமலை மாவட்டம் – 604408.

இறைவன்:

யோக நரசிம்மர்

இறைவி:

அமிர்தவல்லி

அறிமுகம்:

யோக நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சோகத்தூர் கிராமத்தில் விஷ்ணு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வந்தவாசிக்கு தெற்கே சுமார் 7 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் யோக நரசிம்மர் என்றும், தாயார் அமிர்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறார். தீர்த்தம் லட்சுமி சரஸ் தீர்த்தம். இக்கோயில் ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இங்கு இறைவன் தனது சேவையை நித்ய கருட சேவையாக வழங்கும் சிறிய சிலையில் உள்ளார். இந்த கோவில் அஹோபில மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில் வந்தவாசியிலிருந்து திண்டிவனம் பழைய சாலையில் உள்ளது.

புராண முக்கியத்துவம் :

 வேதத்தை அசுரர்களிடம் பறிகொடுத்த பிரம்மா, லக்ஷ்மி ஸரஸ் எனும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி. மகாவிஷ்ணுவை நோக்கிக் கடும் தவம் இருந்தார். இதையடுத்து அவருக்கு திருக்காட்சி தந்து அருள்பாலித்தார் திருமால். பிரம்மனின் சோகம் போக்கிய திருத்தலம் என்பதால், இந்தத் திருவிடம்…. சோஹாபஹத்ருபம் என அழைக்கப்பட்டது. பிறகு சோகத்தூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

நம்பிக்கைகள்:

திருமணத்தடை நீங்க, வியாபாரத்தில் மேன்மை அடைய, தோஷங்கள் விலக, பிரார்த்தனைகள் நிறைவேற இங்கு வழிபட்டுச் செல்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

இங்குள்ள நரசிம்மர் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். தன் உக்கிரத்தையெல்லாம் விட்டுவிட்டு, தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தருகிறார். திருமணத் தடையால் கலங்குவோர் இங்கு வந்து அமிர்தவல்லித் தாயாருக்கு புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால் திருமணத்தடைகள் நீங்கி, விரைவில் நல்ல வரன் அமையும் என்பது ஐதீகம்! இந்தத் தலத்தில் உள்ள ஆஞ்சநேயரும் விசேஷமானவர். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை அல்லது வடை மாலை சார்த்தி 11 முறை வலம் வந்து பிரார்த்தித்தால்… எதிரிகள் தொல்லை ஒழியும். மனதுள் தைரியம் பிறக்கும் என்கின்றனர் பக்தர்கள்!

மாதந்தோறும் சுவாதி நட்சத்திர திருநாளில், நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனைகள், பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் இங்கு வந்து நரசிம்மரை கண்ணாரத் தரிசித்து பிரார்த்தனை செய்தால், வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்கலாம். குறிப்பாக சுவாதி நட்சத்திரக்காரர்கள், அந்த நாளில் வந்து வணங்குவது, கூடுதல் பலனைத் தரும்! திருமணத் தடை மற்றும் தோஷங்கள் உள்ளவர்கள். இங்கேயுள்ள லக்ஷ்மிஸரஸ் தீர்த்தக் குளத்தில் நீராடி, நரசிம்ம ஸ்லோகத்தைச் சொல்லி, பானக நைவேத்தியம் செய்து மனமுருகி வழிபட்டால், விரைவில் நல்லது நடக்கும். திருமண வரம் கைகூடும். தோஷங்கள் விலகி, சந்தோஷமும் நிம்மதியும் நிலைத்திருக்கும்!

திருவிழாக்கள்:

நரசிம்ம ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

அஹோபில மடத்தின் கட்டுப்பாடு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சோகத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top